இன்றைய கால கட்டத்தில் நாட்டின் ஒவ்வோர் பிரசைகளும் சுகாதாரம் சம்பந்தமான தகவல்களை அதிலும் கொரோனா நோயின் பற்றிய தகவல்களை அறிவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இந்த நிலையில் பல்வேறுபட்ட தரப்பினராலும் பல்வேறு தகவல்கள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. எல்லாவற்றின் நோக்கமும் சாதாரண பொதுமக்களை தெளிவடைய வைப்பதே. உண்மையில் இவ்வாறான அறிக்கைகள், பத்திரிகையாளர் கூட்டங்கள் போன்றவற்றில் சாதாரண மருத்துவ அறிவு குறைந்த மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையிலேயே சொற்பதங்கள் பாவிக்கப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் வழங்கும் நிபுணர்கள், மருத்துவர்கள் கடுமையான சாதாரண மக்களினால் விளங்கிக் கொள்ள முடியாத சொற்பதங்களை பாவிப்பதில்லை. அதாவது அவர்கள் தங்களின் வித்துவ காச்சலினை இவ்வாறான இடங்களில் காண்பிப்பதில்லை. இவ்வாறான நிலையில் வெளியிடப்படும் கருத்துக்களினை மற்றைய மருத்துவர்கள் அந்த அறிக்கை அல்லது கருத்து யாரால், யாருக்கு எந்த சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்டது என்பதினை நோக்கவேண்டும். இன்றைய கால கட்டத்தில் மருத்துவ துறைக்கான கலைச்சொற்கள் குறைந்த அளவிலேயே பாவனையில் உள்ளன. மேலும் மருத்துவத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய சொற்கள் உருவாக்கப்படவும் இல்லை. இதன் காரணமாக ஒவ்வோர் வைத்தியரும் தனது ஆற்றலுக்கு ஏற்ப தமிழ் சொற்பதங்களை பாவிப்பர், எவ்வாறாயினும் இறுதி இலக்கு பொதுமக்கள் பயனடைதலே ஆகும். மருத்துவர்கள் தமது கல்வி திறமையினை மற்றைய மருத்துவர்களுக்கு மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு வெளிக்காட்ட பல்வேறு கருத்தரங்குகள், ஆண்டுக்கூட்டங்கள்… வழமையாக ஒழுங்கமைக்கப்படும்.
சட்ட வைத்திய அதிகாரிகள் கூட பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான நிலைமைக்கு உள்ளாகிய சந்தர்ப்பங்கள் உண்டு. உதாரணமாக இருதயத்தின் முடியுரு நாடியில் கொலஸ்ரோல் படிவதன் காரணமாக நாடியில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வரும். ஆனால் பொதுமக்களில் பெரும்பாலானோரும், நீதித்துறை சார்ந்தோரும், போலீசாரும் இதனை வால்வுகளில் ஏற்படும் அடைப்புகளினால் தான் மாரடைப்பு வந்ததாக தமது அறிக்கைகளில் மற்றும் சாட்சியங்களில் குறிப்பிடுவர்.
இலங்கை போன்ற ஓர் நாட்டில் நாட்டின் சகல அல்லது பெரும்பாலான பொதுமக்கள் இவ்வாறன சொற்பதங்கள் பற்றி தெளிவாக அறிவதற்கு உரிய வசதிகள் இல்லை. தமிழில் தகுதி வாய்ந்தவர்களினால் நடத்தப்படும் மருத்துவ சம்பந்தமான இணையத்தளங்கள் மற்றும் இணைய ஆக்கங்கள் தற்பொழுது தமிழில் மிகக் குறைவாக உள்ளன. இந்நிலையில் சாதாரண பொதுமக்களும் இணையத்தினை பாவித்து அறிவு பெறுவார்கள் என்பது சந்தேகமே.
முற்றும்
