கடந்த சில தினங்களுக்கு முன்னர் தலைநகர் கொழும்பின் மாளிகாவத்தை பகுதியில் ஏற்பட்ட சனநெரிசலில் 3 பெண்கள் இறந்தார்கள், அத்துடன் சிலர் காயமடைந்தனர். எம்மில் பலருக்கு இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் எவ்வாறு சன நெரிசலில் சிக்கி மக்கள் இறப்பர் என்பது தான்.
கீழே உள்ள படமானது உதைபந்தாட்டமைதானம் ஒன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இறந்தவர்களை குறிக்கின்றது
இவ்வாறான சம்பவங்கள் உலகில் முன்பும் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் நடைபெற்றுள்ளது. சில சம்பவங்களின் பொழுது நூற்றுக்கணக்கானோர் இறந்தமையும் குறிப்பிடத்தக்கது. பங்காளதேசத்திலும், கும்பமேளாவின் பொழுது இந்தியாவிலும், மதீனாவிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இனி எவ்வாறு இவ்வாறன சந்தர்ப்பத்தில் உயிரிழப்பு நடைபெறுகின்றது என்பது பற்றி பார்ப்போம்.
- இவ்வாறான சம்பவங்கள் மிக இடவசதி குறைந்த இடத்தில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதினால் பொதுவாக ஏற்படுகின்றது. இங்கு பொதுவாக வெளியேறும் பாதை மூடப்பட்டிருக்கும் அல்லது மிக ஒடுக்கமானதாக இருக்கும். இதன் பொழுது மக்கள் மிக நெருங்கி ஒருவரோடு அமுத்தப்படுவதினால் அவர்களினால் மக்கள் மூச்சு விட கடினப்படுவர். நாம் சாதாரணமாக சுவாசிக்கும் பொழுது எமது நெஞ்சு அல்லது மார்பு அறை சுவரானது மேலும் கீழுமாகவும், உள்நோக்கியும் வெளிநோக்கியும் அசைந்த வண்ணம் இருக்கும். இதன் காரணமாக தான் அமுக்க வேறுபாடு உண்டாகும். அப்பொழுதுதான் எமது நுரையீரல் சுருங்கி விரியும் , அவ்வாறு நடைபெறும் பொழுது தான் சூழலில் உள்ள காற்றானது நுரையீரலுக்கு உட்சென்று வெளியேறும் .

இவ்வாறான நிலையின் பொழுது பொழுது நெஞ்சரை சுவரின் அசைவு முற்றாக தடைப்படும் . இதனால் சடுதியாக இறப்பு ஏற்படும். இவ்வாறான நிலை traumatic asphyxial death என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கபடும். மேலும் சூழலில் உள்ள ஓட்ஸிசன் அளவும் குறைவடைவதினால் அவர்கள் மூச்சு திணறலுக்கு உள்ளாகி இறப்பு ஏற்படலாம்.
- இது தவிர மக்கள் நெருக்கி அடிப்பதினால் கட்டிடம் உடைந்து வீழ்ந்து இறப்பினை ஏற்படுத்திய சந்தர்ப்பங்களும் உண்டு.
- சில சந்தர்ப்பங்களில் மின்சார கேபிள்கள் அறுந்து மக்கள் மீது வீழ்ந்து மக்கள் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
- இவ்வாறான சன நெருக்கடி மிக்க இடத்தில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே அவர்களுக்கு இயர்கையாக இருக்கும் நோய் நிலைமைகளான மாரடைப்பு, ஆஸ்துமா போன்றன அதிகரிப்பதினாலும், அதீத வியர்வை மற்றும் அதிகரித்த சூழல் வெப்பநிலை போன்றவற்றின் காரணமாக சலரோக நோயாளியின் குருதியில் உள்ள குளுக்கோஸின் அளவு சடுதியாக குறைவதினாலும் இறப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.
- அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் அல்லது பிரதேசங்களில் மக்கள் இவ்வாறு ஒன்று கூடும் பொழுது அவர்கள் இலகுவாக வெப்பத்தின் தாக்குதலுக்கு உள்ளாவர். இதனாலும் இறப்பு ஏற்படலாம்.
எனவே இவ்வாறு மக்கள் குறுகிய இடத்தில் அதிகளவில் ஒன்று கூடும் பொழுது ஏற்பாட்டாளர்கள் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதினை தடுக்கும் முகமாக அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் மனித உயிரிழப்புக்களை தடுக்கலாம்.
முற்றும்
