இந்தியாவின் கேரளாவில் இளம் பெண் உத்ராவை அவரின் கணவர் சூரஜ் பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து கொலை செய்தமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. முதலில் அணலி பாம்பை வாங்கியுள்ளார். அந்தப் பாம்பு மார்ச் 2 ஆம் திகதி உத்ராவை கடித்தது. அன்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதால் அவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக தாய் வீட்டில் இருந்தார் உத்ரா. இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி கருமூர்க்கன் வகை பாம்புடன் உத்ராவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சூரஜ். அன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த உத்ரா மீது போத்தலில் இருந்த பாம்பைத் திறந்து விட்டுள்ளார். உத்ராவை இரண்டு முறை பாம்பு கடிப்பதைப் பார்த்த பின்னர், அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து வெளியறி பாம்பு கொண்டு வந்த போத்தலை வெளியே வீசியுள்ளார்.இதனையடுத்து கைது செய்யப்பட்ட சூரஜ், தனது மனைவி உத்ராவைக் கொலை செய்தது குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். நான் சிக்கிக்கொள்ளாமல் இயற்கையாக மரணம் நடந்ததுபோல் நடக்க வேண்டும் என யூடியூபில் தேடினேன். அதில் அப்போதுதான் பாம்பு கடிப்பதன் மூலம் மரணம் அடைவது குறித்து அதிகமான வீடியோக்களைப் பார்த்தேன். பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து உத்ராவைக் கொலை செய்யத் திட்டமிட்டேன் என்று கூறியுள்ளார்.

இலங்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இனி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் ஒருவர் பாம்பு அல்லது ஓர் ஏனைய விலங்கின் தாக்குதலினால் உயிர் இழப்பார் எனில் அவரது மரணம் இயற்கை அல்லாத மரணத்தினுள் அடங்குவதினாலும் சட்ட திட்டங்களின் (குற்றவியல் சட்ட கோர்வை) பிரகாரமும் கட்டாயம் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடற் கூராய்வு பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுவாக பாம்பு கடித்தல் என்பது தவறுதலாகவே நடைபெறும் எனினும் விதிவிலக்காக ஒருசில சந்தர்ப்பத்தில் பாம்பு கொலை செய்யும் கருவியாகவும் தற்கொலை செய்து கொள்ளும் கருவியாகவும் பாவிக்கப் பட்டுள்ளது.

உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது பாம்பு கடிப்பதினாலே ஏற்படும் அடையாளம் இருப்பதை கொண்டும் பாம்பின் விஷத்தினால் உடலின் அங்கங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டும் பாம்பு கடித்தமை உறுதிப்படுத்தப்படும். இலங்கையில் இறந்தவரின் இரத்தத்திதினை பரிசோதித்து பாம்பு கடித்தமையினை உறுதிப்படுத்தும் முறைமை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சில சந்தர்ப்பங்களில் பாம்பு கடித்த அடையாளம் தெளிவாக தெரியாது இதன் காரணமாகவும் இவ்வாறு இறந்தவரின் உடற் கூராய்வு பரிசோதனை சவால் மிக்கதாக அமையும்.
சில சந்தர்ப்பத்தில் உறவினர்கள் இறந்த பாம்பினையும் கொண்டுவருவார்கள், அத்தகைய சந்தர்ப்பத்தில் பாம்பின் கொட்டும் பற்களுக்கு இடைப்பட்ட தூரத்தினையும் உடலில் காணப்படும் காயத்தில் இருக்கும் பற்களின் அடையாளங்களுக்கு இடைப்பட்ட தூரத்தினையும் ஒப்பீடு செய்வதன் மூலம் கடித்த ஓரளவிற்கு பாம்பினை உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.
சில சந்தர்ப்பங்களில் பாம்பு கடித்தவர்கள் அவர்களுக்கு ஏற்கனவே இருந்த மாரடைப்பு போன்ற இயற்கை நோய் நிலைமைகள் மோசமடைவதன் காரணமாகவும், பாம்பின் விஷத்தினை இல்லாமல் செய்வதற்காக கொடுக்கப்படும் மருந்தின் ஒவ்வாமை காரணமாகவும் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலங்களில் யாருக்காவது பாம்பு கடித்து இறப்பு ஏற்பட்டால் நிச்சயம் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
முற்றும்
