அண்மையில் இலங்கையில் கறுப்பு சிறுத்தை ஒன்று மனிதர்கள் வைத்த பொறியில் மாட்டியபின்னர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இறுதியில் அது இறந்த பொழுது அதன் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பொதுவாக நாம் மனிதர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு நடைபெறும் உடற் கூராய்வு பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனை பற்றித்தான் நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இறந்த சிலவகை விலங்குகளுக்கும் உடற் கூராய்வு பரிசோதனை செய்யப்படுகின்றது. அதனைப் பற்றி இப்பதிவு விளக்குகின்றது.
முந்தைய காலத்தில் பொதுவாக அரிய வகையான விலங்குகள் போன்ற வெள்ளை நாகம், சிலவகை ஆமை இனம், பண்டா …. போன்றன இறக்கும் பொழுதும், பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விலங்கு இனங்களான பந்தய குதிரைகள் மற்றும் பந்தய புறா போன்ற இறக்கும் பொழுதும் இவ்வாறான உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதைய விஞ்ஞான உலகத்தில் மேற்குறித்த சந்தர்ப்பங்களில் மட்டுமல்லாது பண்ணை போன்றவற்றில் அதிக எண்ணிக்கையில் விலங்கினங்கள் திடீரென உயிரிழக்கும் பொழுதும், தமது செல்லப்பிராணிகள் திடீரென உயிரிழக்கும் பொழுதும் உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நீர் வாழ் உயிரினங்கள் திடீரென உயிரிழக்கும் பொழுதும், புதிய வகை நோய்கள் விலங்குகளை தாக்கி இறப்பினை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்திலும் உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்ளுவதன் நோக்கம் குறித்த விலங்குகள் என்ன காரணத்திற்காக இறந்தது என்று கண்டு பிடிப்பதற்காகவும் மற்றும் எவ்வாறான சூழ் நிலையில் விலங்குகள் இறந்தது என்று கண்டறிவதற்காகவும் ஆகும். உதாரணமாக விலங்குகள் நோய் வாய்ப்பட்டு இறந்ததா அல்லது நஞ்சு ஊட்டப்பட்டு அல்லது வேறு எதாவது சூசகமாக முறையில் கொல்லப்பட்டதா எனக்கண்டறிய உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
இது தவிர உடற் கூராய்வு பரிசோதனைகளினால் ஏற்படும் வேறு நன்மைகள் யாவை? உதாரணமாக பண்ணை ஒன்றில் உள்ள ஆயிரக்கணக்கான கோழிகள் இனம் காணப்படாத நோயினால் இறக்குமானால், அவை எந்த நோயினால் இறந்தது , நோயினால் விலங்கில் ஏற்பட்ட தாக்கம் என்ன, என்ன வகை மருந்தினால் சிகிச்சை வழங்க முடியும் போன்ற தகவல்களை உடற் கூராய்வு மூலம் நாம் பெற்றுக் கொள்ளலாம்.
நாம் எமது தனிப்பட்ட காரணம் ஒன்றிற்காக ஓர் விலங்கினை உடற் கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்த விரும்பினால் அருகில் உள்ள கால்நடை வைத்தியரை நாடவேண்டும். சில சந்தர்ப்பத்தில் நீதிமன்றினால் உத்தரவிடப்படும் ஆணைக்கு அமையவும் விலங்குகளில் உடற் கூராய்வு பரிசோதனை நடைபெறும்.
பொருளாதார ரீதியாக விலங்குகளை வளர்த்து அதன் மூலம் அனுகூலம் அடைபவர்கள் நிச்சயம் இவ்வாறான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் அவர்களின் விலங்குகளில் ஏற்படும் அநியாய உயிரிழப்புக்களை தடுக்கலாம்.
முற்றும்
