ஊடகவியாலாளர் -கொலை செய்யப்பட்டாரா?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பு மாநகரின் சந்தடிமிக்க பகுதியான சுதந்திர சதுக்கத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அதனை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் இல்லை கொலை செய்யப்பட்டு வீசப்பட்டார் எனவும் பல சர்ச்சைகள் கிளம்பின. இப்பதிவில் இவ்வாறு ஒருவர் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்படுவார் எனின் எவ்வாறு சட்ட வைத்திய நிபுணர் மற்றும் தடயவியல் நிபுணர்கள், இறந்த நபர் எவ்வாறன சூழ்நிலையில் (Circumstance of death) அவர் இறந்தார் என்பதை எவ்வாறு கண்டறிவார்கள் என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.
பொதுவாக துப்பாக்கி மூலம் தம்மை தாமே சுட்டு தற்கொலை செய்பவர்கள் ஏற்கனவே ஆயுதங்களை கையாளும் பயிற்சி பெற்றவர்களாகவும் அனுமதி பெற்றோ அல்லது அனுமதி பெறாமலோ துப்பாக்கி வைத்திருப்பார்கள். மேலும் பொதுவாக அவர்கள் கைத்துப்பாக்கியினை பயன்படுத்துவார்கள். சில சந்தர்ப்பங்களில் இராணுவ வீரர்கள் தங்களின் தொழில் முறை துப்பாக்கியினை ஓர் இடத்தில் நிலையாக பொருத்தி (Fixed) அதனை தூர இருந்து கம்பி அல்லது கயிறு மூலம் இயக்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் உண்டு. மேலும் துப்பாக்கிகளினை காலிற்கு இடையில் வைத்து இயக்கி தற்கொலை செய்த சம்பவங்களும் உண்டு. எனவே AK 47 அல்லது T 56 போன்ற துப்பாக்கிகளினால் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்பது ஏற்றுக்கொள்ள தக்க விவாதம் அல்ல.
பொதுவாக தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிக மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்களுக்கு நாடப்பட்ட தீரா நோய்களும், அதிகளவு கடன், காதல் தோல்வி போன்றன காணப்படலாம்.
மேலும் பொதுவாக தற்கொலை செய்து கொள்பவர்கள் ஓர் ஒதுக்கு புறமான, ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியினை தான் தெரிவு செய்வார்கள். விதிவிலக்காக சிலர் பிரபல்யமான ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியினை தெரிவு செய்வதும் உண்டு. பொதுவாக தற்கொலை செய்துகொள்ளபவர்கள் வாயின் உட்பகுதி, தொண்டை, நெற்றியின் பக்கப்பகுதி (temple), கழுத்து, நெஞ்சு போன்ற பகுதிகளைத்தான் தெரிவு செய்துகொள்வார்கள். பல சந்தர்ப்பங்களில் தற்கொலை செய்து கொள்பவர்கள் தமது தற்கொலைக்கான காரணத்தினை கடிதம் மூலம், முகநூல் பதிவு மூலம் அல்லது கைத்தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவர்.

Does A Gunshot Wound To The Head Mean Instant Death?
பொதுவாக தற்கொலை செய்து கொள்ளும் இடத்தில் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி காணப்படும் அத்துடன் அப்பிரதேசம் ஒழுங்கான முறையில் (not disturbed) காணப்படும். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட முறைகளில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து இருப்பார்கள்.
மேற்கூறிய இயல்புகள் பலவும் விஞ்ஞான ரீதியான சான்றாக இருப்பதில்லை அதன் காரணமாக இவ்வாறான மரணங்களினை ஆராய்பவர்கள் எப்பொழுதும் விஞ்ஞான ரீதியான சான்றுகளை தேடுவார்கள், இதன் பொழுது அவர்கள் பயன்படுத்தும் சில முறைகள் வருமாறு
1. துப்பாக்கி ஒன்று இயங்கும் பொழுது அதில் இருந்து வெளியேறும் புகை மற்றும் காபன் போன்றன அதனை இயக்கியவரின் கையில் குறிப்பாக விரல்களில் படியும் இதனை Gun Shot Residue (GSR ) என்றழைப்பர். இறந்தவரின் விரலில் GSR காணப்படுகின்றதா என ஆராய்வதன் மூலம் யார் துப்பாக்கியினை இயக்கியது என இலகுவாக கண்டுபிடிக்கலாம்.

Analysis of gunshot residues produced by .38 caliber handguns ...

Gunshot Residue (GSR) and Testing
2. துப்பாக்கி ஒன்று மனித உடலிற்கு மிக அண்மையில் வைத்து இயங்கும் பொழுது, காயம் உண்டாகிய மனித உடலில் இருந்து அதிக வேகத்தில் மிகச் சிறிய அளவில் இரத்த துணிக்கைகள் துப்பாக்கியிலும் துப்பாக்கியினை இயக்கியவரின் கையிலும் தெறிக்கும் இதனை சட்ட மருத்துவத்தில் Back Spatter என்றழைப்பர். இந்த Back Spatter இணை ஆராய்ந்து யார் துப்பாக்கியினை இயக்கியது என்று கண்டுபிடிக்கலாம்.

Bloodstain Pattern Analysis - Independent Forensic Services
3. பல சந்தர்ப்பங்களில் இயக்கியவரின் கை ரேகையானது துப்பாக்கியில் படிந்து இருக்கும். கைரேகையானது ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமானது.
4. சில சந்தர்ப்பங்களில் துப்பாக்கி மூலம் சுட்டு தற்கொலை செய்துகொள்பவர்களின் கையில் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி அவர்கள் இறந்த பின்னரும் கூட இறுக்க பற்றிய நிலையில் இருக்கும். இவ்வாறான நிலை சட்ட மருத்துவத்தில் cadaveric spasm என்றழைக்கப்படும். இவ்வாறான நிலையினை நாம் செயற்கையான முறையில் செய்ய முடியாது. அவ்வாறு செய்தாலும் இறந்தவரின் விரல்கள் துப்பாக்கியினை இறுக்க பற்றி பிடிக்காது.

The occurrence of cadaveric spasm is a myth | SpringerLink
இவ்வாறான முறைகளை பின்பற்றுவதன் மூலம் சட்ட வைத்திய நிபுணர்களும் தடயவியல் நிபுணர்களும் மிக இலகுவாக குறித்த நபர் மரணம் அடைந்த சூழ்நிலையினை விஞ்ஞான ரீதியான ஆதாரங்களுடன் கண்டறிவர்.
முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.