அவள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியதில் இருந்து பல ஆண்டுகள் வேலையற்ற பட்டதாரியாக இருந்தாள், இந்த இடைப்பட்ட காலத்தில் அவளுக்கு திருமணமும் நடைபெற்றிருந்தது. எனினும் மூன்று வருடங்களாக அவர்களுக்கு பிள்ளைகள் எதுவும் இல்லை. பல வைத்தியரினை சந்தித்து சிகிச்சை பெற்ற பின்னரே இந்த குழந்தை உருவாகியது. குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதுதான் அவளுக்கு பட்டதாரி நியமனமும் கிடைத்தது. பிள்ளையின் பலனால்தான் வேலை கிடைத்தது என்று அதிகம் மகிழ்ந்து இருந்தவளுக்கு மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை. அவள் வேலை செய்யும் அரச நிறுவனத்தின் மேலதிகாரி பல சந்தர்ப்பங்களில் அவளினை வசை பாடினார். அதுவும் முதன் முதலாக அவள் வேலைக்கு வரும் பொழுதே கர்ப்பிணி என்பதை சுட்டிக் காட்டி பேசினார். அதனால் மிக மன அழுத்தத்திற்கு உள்ளான அவள் அதிகளவிலான வலி நிவாரணிகளை உட்க்கொண்டதினால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் டாள். அதனை தொடர்ந்து இனப்பெருக்க உரிமை பற்றியும் கர்ப்பிணி பெண்ணுக்கு அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகள் பற்றியும் சட்டத்தரணி ஒருவரினால் மேலதிகாரிக்கு எடுத்து விளக்கப்பட்டது. அதன் பின்னரே விடயம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

எம்மில் பலருக்கு இனப்பெருக்க உரிமை (Reproductive rights) என்பது பற்றி பெரிதளவில் தெரியாது. இதன்காரணமாக அவ்வுரிமை மீறப்படும் பொழுது அதற்கு எதிராக குரல் கொடுக்க தவறிவிடுகின்றனர். மேலும் பல பெண்கள் தமது தலைவிதி என நொந்துகொள்கின்றனர். பலசந்தர்ப்பங்களில் பல பெண்கள் தாம் முடிவெடுக்காது கணவனின் முடிவுக்கோ வைத்தியரின் முடிவுக்கோ எதுவிதமான மறுப்பும் இன்றி கட்டுப்படுகின்றனர். இனப்பெருக்கம் எனப்படுவது இரு உயிரிகள் கூடிக்கலப்பதன் மூலம் தம்மை ஒத்த உயிரிகளை உருவாக்கும் செயற்பாடு ஆகும். இனப்பெருக்க உரிமை என்பதில் பல்வேறு விடயங்கள் உள்ளடப்பட்டுள்ளன. அவற்றில் சில வருமாறு
1. தமக்கு பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை, பிள்ளைகளுக்கு இடையிலான காலம், பிள்ளைகள் பிறக்கும் காலம் என்பவற்றினை தீர்ந்தமானித்துக்கொள்ளும் உரிமை.
2. தமக்குரிய இனப்பெருக்கத்திற்குரிய உச்சமான சுகாதார வசதிகளை அனுபவிக்கும் உரிமை
3. தமக்கு தேவையான உரிய கருத்தடை முறைகைளை கைக்கொள்ளும் உரிமை
4. பலவந்தமான கருத்தடை முறைகளில் அல்லது ஏமாற்றும் வகையில் மேற்கொள்ளப்படும் கருத்தடைகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் உரிமை
5. பாலியல் நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் உரிமை
6. உரிய பாலியல் கல்வியினை மற்றும் தகவல்களினை பெற்றுக்கொள்ளும் உரிமை
இவ்வாறு இனப்பெருக்க உரிமை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வுரிமை மீறப்படும் பொழுது குரல் கொடுப்பது அவசியம் ஆகும்.
முற்றும்
