துகில் உரியப்பட்ட சிறுமி

அன்று வழமைபோல் அந்த 10 வயது சிறுமி தனது வீட்டின் முன்னால் மற்றைய சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த பொழுதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கும் அவளுக்கு தெரிந்த நபர் ஒருவரினால் அவள் தந்திரமான முறையில் தூர அழைத்து செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டாள். அந்த காமுகனிடம் இருந்த தப்பிய சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை தாயிடம் சொன்னாள். உடனே அவளின் தாய் நீ ஏன் வெளியில் நின்று விளையாடினாய் என்று கேட்டவாறு வேலியில் நின்ற மரத்தின் கிளையினை முறித்து விளாசித்து தள்ளினாள். வேதனையில் துடித்த சிறுமி அழுதவாறே தூங்கிவிடடாள். சம்பவம் அறிந்து சிறிது நேரத்தில் வீடு திரும்பிய தகப்பன் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை திட்டியவாறே பெல்ட்டினால் பலதடவை விளாசினார். சம்பவம் அறிந்து அவளது வீட்டில் ஒன்றுகூடிய அவளது உறவினர்கள் எல்லோரும் அவளை திட்டி தீர்த்தனர். அவர்கள் அவளை சீரழித்தவன் பற்றி ஓர் வார்த்தை கூட பேசவில்லை. இதன் பின்னர் உறவினர் ஒருவர் அவளை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். முதலில் வந்த ஆண் போலீஸ் உத்தியோகத்தர் அந்த சிறுமியை நோக்கி கேட்டார் “உனக்கு இந்த வயதில் இது தேவையா?” என்று. அவளது மறுமொழி அழுகை மட்டுமே. அதனை தொடந்து அங்கு வந்த போலீஸ் நிலைய பெண் போலீசார் சிறுமியிடம் ஆதரவாக கதைத்து வாக்குமூலத்தினை பெற்றுக்கொண்டனர், அதனடிப்படையில் சந்தேக நபர் உடனடியாகவே கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர் போலீசார் சிறுமியையும் சந்தேக நபரினையும் ஒரு வாகனத்தில் ஏற்றி வைத்தியசாயில் அனுமதித்தனர். வாகனத்தில் செல்லும் பொழுது சிறுமி மிக பயந்தவாறே பிரயானித்தாள்.

The Secret of Sexual Assault in Schools - NEA Today

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தான் அவள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக நேர்ந்தது. வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர், ஊழியர்கள் அதன் பின்னர் விடுதியில் இருந்த வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள், தாதிய மாணவர்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் அவளை கேள்வி கேட்டே துளைத்து எடுத்து விட்டார்கள். அவர்கள் அவளிடம் நடந்த சம்பவத்தினை கேட்டு விட்டு உனக்கு இது தேவை தானா? என்ற பாணியில் ஏசிவிட்டே சென்றார்கள். இறுதியாக சட்ட வைத்தியரின் அலுவலகத்திற்கு வருகை தந்த சிறுமி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு பயந்த நிலையில் இருந்தாள். பலத்த சிரமத்தின் மத்தியிலேயே அவளிடம் வாக்கு மூலம் பெற முடிந்தது.
இன்றைய எமது சமூகத்தில் இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்தினால் பாதிக்கப்படும் சிறுவர்கள் மற்றும் பெண்களை குற்றவாளியாக பார்க்கும் மனோ நிலை வளர்ந்து வருகின்றது. படித்த வைத்தியர்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த மனோநிலை நிலவுகின்றது. உண்மையில் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களே தவிர குற்றவாளிகள் அல்லர்.
மேலும் எம்மில் பலர் இவ்வாறான சம்பவங்களை கேட்டறிந்தது சுய இன்பம் அடைபவர்களாகவே இருக்கின்றனர். அத்துடன் பலர் ஒருசில அனுதாப வார்த்தைகளை கூட பேசுவதற்கு பின்னிற்கின்றனர். மேலும் ஒருசிலர் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை சமூக, கலாச்சார மற்றும் சமய காரணங்களைக் காட்டி சமூகத்தில் குற்ற வாளியாகக் முற்படும் நிலை (Secondary victimization and victim-blaming) மிக மோசமான கலாச்சார சீரழிவிற்கு இட்டுச்செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

                                                        முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.