நவீன உலகில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனிதர்கள் தமது உடலில் போதைப்பொருளினை மறைத்து வைத்து கடத்தும் பொழுது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக நாம் அறிந்திருக்கின்றோம். எம்மில் கூட பலர் இதனை செய்திருக்கின்றனர், ஆனால் இதனால் உடலிற்கு ஏற்படும் பாதக விளைவுகள் பற்றி நாம் அறிவதில்லை. இதனை செய்பவர்களின் நோக்கமே தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை கடத்துவதன் மூலம் பணம் ஈட்டுவதுதான். மிக அரிதாகவே கடத்துபவர்கள் அந்த போதைப்பொருளினை பாவிப்பார்கள். இவர்கள் பொதுவாக மலவாசல், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு (Vaginal canal) , இரைப்பை போன்றவற்றில் மறைத்து வைத்து கடத்துவார்கள். இவர்கள் இதற்கென வடிவமைக்கப்பட்ட கொள்கலங்களை அல்லது விசேட ரப்பர் வகையினை (multilayered latex, rubber or condoms) பாவிப்பர். பொதுவாக ஆணுறைகளில் போதை மருந்தினை இறுக்க கட்டி முடிந்தபின்னர் அதனை விழுங்கியோ அல்லது மலைவாசலில் செருகியோ கடத்துவர். பொதுவாக வறிய மக்களே இவ்வாறு பணத்திற்காக போதை மருந்தினை கடத்துவார்கள். இவர்களில் பலவகையினர் உள்ளனர்
1. body packers – இவர்கள் உடலில் உள்ள எந்தவோர் துவாரத்தில் போதை மருந்தினை அடைத்து மறைத்த நிலையில் அல்லது வாயின் மூலம் விழுங்கிய நிலையில் குறித்த தடை செய்யப்பட்ட போதைப்பொருளினை கடத்துவர்.
2. body stuffers – இவர்கள் தமது உடைமையில் தடை செய்யப்பட்ட போதை மருந்தினை வைத்திருந்து கடத்துவர். இவர்கள் போலீசாரிடம் அல்லது சுங்க அதிகாரிகளிடம் மாட்டுப்படும் பொழுது சடுதியாக அப்போதைப்பொருளினை விழுங்கி விடுவார்கள் அல்லது மலைவாசலில் செருகி விடுவார்கள் . இவர்கள் மிகவும் மருத்துவ ரீதியாக ஆபத்தினை எதிர்நோக்குவர் ஏனெனில் அவர்கள் போதைப்பொருளினை தகுந்த முறையில் பொதிசெய்வதில்லை, இதன் காரணமாக போதை மருந்தானது அதிகளவில் உடலில் சேர்வடையும் (intoxication)
இனி இவர்களில் இந்த செயற்பாடானது உடலியல் ரீதியில் எவ்வாறான தாக்கங்களினை ஏற்படுத்தும் என பார்ப்போம்
1. குடலில் ஏற்படும் அடைப்பு (intestinal obstruction) – இவர்கள் விழுங்கும் போதைப்பொருட்கள் அடங்கிய பொதி மனித சமிபாட்டுத்தொகுதியில் எந்தவொரு இடத்திலும் பௌதிக ரீதியில் அடைப்பினை உருவாக்கி, இறப்பினை ஏற்படுத்தக்கூடும்.
2. சடுதியான நஞ்சாதல் (intoxication) – இவர்கள் விழுங்கும் போதைப்பொருட்கள் அடங்கிய பொதி ஆனது சமிபாட்டுத்தொகுதியில் வெடிக்கலாம், இதன் காரணமாக பொதியிலிருந்த போதைப்பொருட்கள் சமிபாட்டுத்தொகுதியில் விடுவிக்கப்பட்டு சடுதியாக உடலினுள் உறிஞ்சப்படும். இச்செயற்பாடு காரணமாக கோமா அல்லது இறப்பு ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருளானது சிறிதளவில் உறிஞ்சப்படும் இதனால் பொதியில் இருந்த போதைப்பொருளின் தன்மைக்கு ஏற்ப நோயாளி பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாவர். இவ்வாறான நோய் நிலைமை body packers syndrome என்று மருத்துவத்தில் அழைக்கப்படும்.
3. பொதுவாக நீண்ட விமான பயணம் மூலம் கடத்தப்படும் பொழுது குடலில் இருந்து போதைப்பொதி வெளித்தள்ளப்படுவதினை குறைக்க பல்வேறுபட்ட மருந்து வகையினை பாவிப்பர். அதன் காரணமாக பல்வேறு பட்ட பக்க விளைவுகளுக்கு உள்ளாவர்.
இவ்வாறு போதை மருந்துகளை கடத்துபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலான ஓர் விடயமாகும் ஏனெனில்
1. பொதுவாக இவ்வாறு மருந்துகளை கடத்துபவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பொழுது அவர்களுக்கு தாங்கள் என்ன வகையான போதை மருந்தினை கடத்தினார்கள் என்பது பற்றி தெரிவதில்லை.
2. கடத்தலை மேற்கொள்ள வைக்கும் நபர்கள் (முதலாளி) இது சம்பந்தமான தகவல்களை அவர்களுக்கு வழங்குவதில்லை.
3. மேலும் போதைப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் பெரும்பாலும் தூய நிலையில் போதைப்பொருட்களை உற்பத்தி செய்வதில்லை. அவர்கள் ஓர் குறித்த போதைப்பொருளுடன் மற்றைய போதைப்பொருட்கள் மற்றும் பல்வேறுவகையான நோய்களிற்கு பாவிக்கும் மருந்துகளை கலப்பார்கள். இச்செயற்பாடு cutting என்றழைக்கப்படும். இதன் காரணமாக குறித்த ஓர் போதை மருந்திற்கென சிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொள்ள முடிவதில்லை.

மேலுள்ள கதிர்ப்படத்தில் மனிதன் ஒருவனின் சமிபாட்டுத்தொகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் போதைப்பொருட்கள் இருப்பதனை நாம் காணலாம்.

மேலுள்ள படத்தில் மனிதன் ஒருவன் இவ்வாறு சட்ட விரோதமான முறையில் போதைப்பொருட்களினை கடத்தும் பொழுது பொதியின் உறை வெடித்ததன் காரணமாக இறந்தான். இறந்த நிலையில் அவனது இரைப்பையில் போதை மருந்துகள் இருப்பதனை மேற்படி படம் காட்டுகின்றது.
முற்றும்
