நேற்றுமுன்தினம் வவுனியாவில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் எருக்குவியல் ஒன்றின் மீது இருந்த இளைஞர் ஒருவர் சடுதியாக மூச்சு திணறலுக்கு உட்பட்ட நிலையில் உயிரிழந்தார். எமது மக்களில் பலருக்கு ஏன் அவர் இறந்தார் என்பது பற்றிய போதிய அளவு விளக்கம் இல்லை. மிக அண்மைக்காலத்தில் கூட வவுனியாவில் நகரசபைக்கு சொந்தமான கொல்களத்தில் கழிவுகளை அகற்றும் பொழுது வெளியேறிய விஷவாயுவினை சுவாசித்த நிலையில் 04 இளம் குடும்பத்தலைவர்களான தொழிலாளர் இறந்தனர். மக்களிற்கு இது சம்பந்தமான தொழில்நுட்ப அறிவின்மை மற்றும் உரிய நிர்வாக தரப்புக்கள் இது சம்பந்தமாக தொழிலாளருக்கு அறிவூட்ட அலட்சியம் காட்டுகின்றமை போன்றவற்றினால் இத்தகைய முற்றாக தவிர் படக்கூடிய இறப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
பொதுவாக விலங்குக் கழிவுகள், தாவரக் கழிவுகள் என்பன உக்கி அழிவடையும் பொழுது பல்வேறுபட்ட வாயுக்கள் இயற்கையாகவே வெளியேற்றபடும். உக்கி அழிவடைதல் (Decomposition) என்ற செயற்பாடு உலகில் இயற்கை சமநிலையினை பேண மிகமுக்கியமானதொன்றாகும். இவ்வாறு நடைபெறும் பொழுது பல நச்சு (Toxic)மற்றும் நச்சு அல்லாத வாயுக்கள்(non toxic) வெளியேற்றப்படும்.

முதலில் எருக்குவியலில் இருந்து வெளிவரும் எவ்வாறான வாயுக்கள் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என பார்ப்போம்.
1. ஹைட்ரஜன் சல்பைட்
அழுகிய கூழ் மூட்டை மணம் உடைய வாயு ஆகும். இது சாதாரண வளியினை விட பாரம் கூடியது என்பதினால் எருக்குவியலின் மேற்பரப்பில் அதிக செறிவில் காணப்படும். அத்துடன் ஒருவர் தொடர்ந்து அதிக செறிவில் இவ்வாயுவினை சுவாசிக்கும் பொழுது அவரது மணத்திற்குரிய நரம்புகள் செயல் இழக்கும் இதன்காரணமாக அவர் தன்னை அறியாமலே தொடர்ந்து இவ்வாயுவினை சுவாசிப்பர். மேலும் இவ்வாயு சுவாசத்தொகுதி மற்றும் கண்கள் போன்றவற்றில் எரிவினை ஏற்படுத்தும். இவ்வாயு மனிதனின் இரத்தத்தில் நேரடியாக இணைந்து கல சுவாச செயற்பாட்டினை பாதிக்காவிடினும் மூச்சு திணறலினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும். மேலும் இவ்வாயுவினை தொடர்ந்து சுவாசிப்போர் களைப்பான மயக்க நிலைக்கு செல்வதினால் அவர்களினால் ஆபத்தில் இருந்து வெளியேற முடிவதில்லை.
2. அமோனியா
மிகவும் காரமான மனமுடைய வாயு இதுவாகும். இதுவும் மனிதனின் சுவாசத்தொகுதி மற்றும் கண்ணில் கடுமையான எரிவினை ஏற்படுத்தும்.
3. கார்பன் டயோக்சிட்
இவ்வாயுவானது சாதாரண வளியினை விட பாரம் கூடியது என்பதினால் எருக்குவியலின் மேற்பரப்பில் அதிக செறிவில் காணப்படும் அத்துடன் இது மணம் அற்றது. மேலும் இது சூழலில் உள்ள ஓட்ஸிசனின் அளவினை குறைத்து மூச்சுத்திணறலினை ஏற்படுத்தும்.
4. மீதேன்
இதுவும் மணம் அற்ற வாயு ஆகும் அத்துடன் இது இலகுவில் தீப்பற்றி எரியும் தன்மை உடையது. எனவே தான் எருக்குவியலிற்கு அருகில் செல்லும் பொழுது சுருட்டு அல்லது பீடி போன்றவற்றினை புகைத்தல் தீ விபத்து ஆபத்தினை ஏற்படுத்தும்.
இங்கு குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஏருக்குவியலின் மேல் ஏறி அமர்ந்து இளைப்பாறியுள்ள நிலையிலேயே மூச்சு திணறலுக்கு உள்ளாகி இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஈறுக்குவியலின் மேற்பரப்பில் தான் மேற்குறித்த நச்சு மற்றும் மனிதனின் சுவாசத்திற்கு உதவாத வாயுக்கள் அதிக செறிவில் காணப்படும் இதனால் அவற்றினை அவன் அதிக அளவில் சுவாசித்திருக்க நேர்ந்திருக்கலாம். மேலும் பலமாதங்களாக இருந்த எருக்குவியலின் உள்ளே தோன்றிய வாயுக்கள் அடைபட்டு ஓர் சமநிலையில் இருந்திருக்கும் இவ்வாறு ஏறி அமரும் பொழுது உள்ளே இருந்த வாயுக்கள் வெளி அழுத்தம் காரணமாக அதிகளவில் வெளியேறி உயிர் ஆபத்தினை விளைவிக்கும்.
முற்றும்

It is good to bring cases like this to the notice of the public. Public should be aware of the dangers in day to day life. Thank you for publicising.
LikeLiked by 1 person