தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம்!!

இணையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓர் பதிவினை வாசிக்க நேர்ந்தது அதன் சாராம்சம் யாதெனில் தற்கொலை செய்பவர்கள் தாங்கள் தற்கொலை செய்ய முதல் அது சம்பந்தமாக ஓர் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்பதே அதாவது ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்ய நினைப்பவர்கள், அந்த நஞ்சினை ஓர் முறை அருந்தினால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள். அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு பட்ட சிகிச்சைகள் வழங்கப்படும். உதாரணமாக வாயின் ஊடக இறப்பர் குழாய் ஒன்றினை உட் செலுத்தி பலவந்தமாக வாந்தி எடுக்க வைப்பார்கள். இவ்வாறு ஒவ்வோர் செயன் முறையின் பொழுதும் மற்றும் நஞ்சின் தாக்கத்தினால் அவர்கள் வேதனைப்படுவார்கள். இதன்காரணமாக அவர்கள் எதிர் காலத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தினை கைவிட்டு விடுவார்கள் என்பதே அப்பதிவின் சாராம்சம்.
பலர் தாங்கள் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டலில் ஈடுபடும் பொழுதுதான் தவறுதலாக இறக்கின்றனர், என்பது பலருக்கு தெரியாத விடயம். சட்ட வைத்திய அதிகாரிகள் தமது கடமையின் பொழுது இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளிடம் உதாரணமாக நஞ்சு அருந்தியவரிடம் அல்லது தீயில் எரிந்து குற்றுயிராக இருப்பவரிடம், மரண வாக்குமூலத்தினை (Death declaration) பதிவார்கள். அப்பொழுது பலரும் சொல்லும் விடயம், சேர் “நான் மனைவியினை/ கணவனை/ பெற்றோரினை பயமுறுத்தவே செய்தென், தயவு செய்து காப்பாற்றி விடுங்கள்” என்பதே ஆகும். ஆனால் அது காலம் கடந்த ஞானமாகவே இருக்கும். மேலும் தற்கொலை செய்பவர்களின் உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது தற்கொலை செய்து இறந்தவரின் கணவன்/ மனைவி/ பெற்றோர் கூறுவது யாதெனில் இறந்தவர் பயமுறுத்தவே இவ்வாறு செய்தார் என்பதாகும்.

Inkedviber_image_2020-07-27_20-59-10_LI

மேலுள்ள படத்தில் உள்ள நபர் தனது வெளிநாட்டில் உள்ள காதலியினை பயமுறுத்த தொலைபேசியில் வீடியோ அழைப்பினை எடுத்த வண்ணம் தற்கொலை முயற்சி செய்த பொழுது சுருக்கு கயிறு இறுகி தவறுதலாக இறந்தார். மேலும் நாம் நஞ்சினை அருந்தும் பொழுது சாதாரண மக்களுக்கு குறித்த நச்சின் மனிதனை சாகடிக்கும் அளவு ( Lethal dose) தெரியாது. அதன் காரணமாக அதிகளவு அருந்தலாம் மேலும் சில நச்சுகள் மிக சிறிதளவு அதாவது ஒரு சில மில்லி லிட்டர் அருந்தினாலே மனிதனை சாகடித்து விடும். அத்துடன் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் தப்பியவர்கள் பிற்காலத்தில் பல்வேறுபட்ட நோய் நிலைமைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாம் மற்றவர் மீதுள்ள கோபத்தில் மற்றும் மன வெறுப்பில் இவ்வாறு மற்றவர்களை பயமுறுத்த தற்கொலை முயற்சி செய்வது பல சந்தர்ப்பத்தில் நிஜமாகி விடுவது உண்மையே. எனவே எம்மிடம் தற்கொலை எண்ணம் அல்லது முயற்சி அறவே வேண்டாம்.
முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.