அண்மைக்காலங்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காட்டு விலங்குகளின் தாக்குதலினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் காயம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அண்மையில் மன்னார் மாவட்டத்தில் இவ்வாறு காட்டு விலங்கு ஒன்றின் தாக்குதலினால் இறந்த ஒருவரின் உடலமானது மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஊடகங்கள் அவர் கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகியே மரணித்ததாக செய்திகளை வெளியிட்டன. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது அவரின் உடலில் ஏற்பட்ட காயங்களை அடிப்டையாகக் கொண்டு அவர் யானையின் தாக்குதலினாலேயே இறந்ததாக முடிவெடுக்கப்பட்டது.
இப்பொழுது என்னதான் பிரச்சனை? யானையோ அல்லது கரடியோ தாக்கி ஒருவர் உயிர் இழந்துவிட்டார், இனி அதனை கதைத்து அல்லது ஆராய்ந்து என்னதான் பிரயோசனம் ? இவ்வாறு ஆராய்ந்து எந்த விலங்கின் தாக்குதலினால் இறந்தார் என கண்டறிந்தால் மட்டுமே நாம் மேலும் இவ்வாறான விலங்குகளின் தாக்குதல்களினை தடுக்க முடியும். ஒவ்வோர் விலங்குகளின் தாக்குதல்களையும் தடுப்பதற்கான வழிமுறைகள் தனித்துவமானவை. இலங்கையின் நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் இவ்வாறு ஒருவர் காட்டு விலங்கின் தாக்குதலினால் இறப்பார் எனில் அவரது மரணம் சம்பந்தமாக மரண விசாரணை மேற்கொள்ளப்படுவதோடு உடற் கூராய்வு பரிசோதனையும் மேற்கொள்ளபட வேண்டும்.
பொதுவாக யானை ஆனது பொதுவாக மனிதனை தனது தும்பிக்கையினால் தூக்கி எறியும் அல்லது தூக்கி அடிக்கும் அதன் பின்னர் காயம் அடைந்திருக்கும் மனிதனை கால்களினால் தூக்கி மிதிக்கும், இதன் காரணமாக இறந்த மனிதனில் ஏற்படும் காயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட விலா எலும்புகளில் ஏற்படும் முறிவு (multiple rib fracture) கை மற்றும் கால்கள் போன்ற (long bone fracture) அவயவங்களில் ஏற்படும் எலும்பு முறிவு, முள்ளந்தண்டில் ஏற்படும் (compression/burst fracture) எலும்பு முறிவு மற்றும் உடல் உள் அங்கங்களில் ஏற்படும் மிக மோசமான சிதைவுகள் (including acceleration and deceleration injuries) போன்றன மூலம் ஓர் திறமையான சட்ட வைத்திய வைத்திய அதிகாரி இனம் கண்டுகொள்ளவர்.

கரடியின் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மேற்குறித்த வகையான காயங்கள் காணப்படாது. இறுதியாக இவ்வாறான உடற்கூராய்வு பரிசோதனை முடிவுகளை பயன்படுத்தி இவ்வாறு விலங்குகளினால் ஏற்படும் உயிர் இழப்புக்களினை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முற்றும்
