அண்மையில் முள்ளியவளைப் பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் தீயில் முற்றாக கருகி மரணம் அடைந்தது பலரும் அறிந்ததே. இச்சம்பவத்தில் 21 வயதான ஒருவரே பரிதாபகரமான முறையில் பலியானவர் ஆவார் .

மேலே உள்ள படங்களில் பெற்றோல் எவ்வாறு பரவி தீப்பிடித்தது என்பதனையும் பெற்றோல் தாங்கியின் மூடி பல மீற்றர் தூரத்தில் காணப்படுவதினையும் காணலாம்.
அவர் விபத்துக்குள்ளான சீன தயாரிப்பான மோட்டார் சைக்கிளினை ஒருசில மணித்தியாலங்களுக்கு முன்னரே இன்னொரு நபரிடம் இருந்து கொள்வனவு செய்த நிலையிலேயே விபத்து ஏற்பட்டது. இனி விடயத்திற்கு வருவோம், எவ்வாறு மோட்டார் சைக்கிளில் தீ பற்றியது? இளைஞன் மோட்டார் சைக்கிளினை செலுத்திய பொழுது முன்னே சென்ற உழவு இயந்திரத்தின் பெட்டியில் மோதி வீதியில் கீழே சரிந்து வீழ்ந்தான். அந்த மோட்டார் சைக்கிளில் பெற்றோல் தாங்கியின் மூடி இறுக்க மூடாதபடி பழுதடைந்திருந்தது, இது தவிர தாங்கியில் கணிசமான அளவு பெற்றோல் இருப்பில் இருந்தது (அண்ணளவாக 4L தொடக்கம் 5L ). இதன் காரணமாக சரிந்து வீழ்ந்த இளைஞன் மீதும் வீதியிலும் பெற்றோல் சிந்தியது. மேலும் அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த புளக் இற்கும் பாதுகாப்பு கவசம் போடப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக ஒருசில செக்கன்களில் தீயின் நாக்குகள் அவனை சூழ்ந்து கொண்ட நிலையில் அவனால் தப்பி ஓட முடியவில்லை. பரிதாபகரமான முறையில் மரணத்தினினை தழுவினான். கீழே உள்ள படங்களில் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற முறையில் மற்றும் பாதுகாப்பான முறையில் அமைந்த plug இணை நாம் காணலாம்

எம்மில் பலருக்கு நாம் செலுத்தும் மோட்டார் சைக்கிள் எப்பொழுது, எவ்வாறான சந்தர்ப்பங்களில் தீப்பற்றும் என்பது பற்றி தெரியாது. அவற்றில் சிலவற்றினை பார்ப்போம்.
- மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அல்லது சீற்றின் அடியில் நாம் பெற்றோல் அல்லது மண்ணெண்ணெய் போன்ற இலகுவில் தீப்பற்றும் திரவங்களை கொண்டு செல்லும் பொழுது அவை கசிவடைந்தது சூடான என்ஜின் மீது அல்லது சைலன்சரின் மீது விழும் பொழுது.
- சிலவகை மோட்டார் சைக்கிளில் காபரேட்டறில் தங்கும் மேலதிக பெற்றோலினை வெளியேற்றும் குழாய் மோட்டார் சைக்கிளின் பிளக் இற்கு மிக அருகாமையில் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளின் அக்ஸிலேட்டரினை அதிகம் முறுக்கி சடுதியாக குறைக்கும் பொழுது தீ விபத்து ஏற்படும் சந்தர்ப்பம் அதிகமாகும்.
- அதி வேகமாக செல்லும் பொழுது ஏற்படும் விபத்துகளின் பொழுது சில சந்தர்ப்பங்களில் பெற்றோல் தாங்கியில் இருந்தது இன்ஜினீற்கு பெற்றோலை கொண்டு செல்லும் குழாய் கழன்று விடுவதன் காரணமாக பெற்றோல் இன்ஜின் மீது சிந்தி தீ விபத்து ஏற்படுகின்றது.
- பாதுகாப்பு கவசம் அற்ற புளக் உள்ள மோட்டார் சைக்கிளினை நிறுத்தாது பெற்றோல் தாங்கியில் பெற்றோல் நிரப்பும் சந்தர்ப்பங்களில்.
- அரிதாக மோட்டார் சைக்கிளில் ஏற்படும் மின் ஒழுக்கின் காரணமாகவும் தீ விபத்து ஏற்படலாம்
முற்றும்
