மரணித்தோருக்கு மரியாதை


இது அவளுக்கு இரண்டாவது கர்ப்பம். பல வருட இடைவெளியின் பின்னர் உருவாகிய பிள்ளை என்பதினால் அவள் பலத்த எதிர்பார்ப்புகளுடன் பிரசத்திற்காக காத்திருந்தாள். எதிர்பாராத விதமாக அவளது குழந்தை பிரசத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே கருப்பையினுள் இறந்து விடுகின்றது. இச்சம்பவம் அவளுக்கும் அவளின் கணவருக்கும் பேரிடியாக அமைந்து விடுகின்றது. பலத்த சிரமத்தின் மத்தியில் இறந்த குழந்தை பிறப்பிக்க படுகின்றது அதன் பின்னர் பிரசவ வேதனையிலும் அவள் வைத்திய சாலை ஊழியரிடம் இறந்த தனது குழந்தையினை காட்டிடுமாறு கேட்கின்றாள். அப்பொழுது ஊழியர் தனது ஓர் கையினால் ஓர் கடதாசி பெட்டியில் ஓர் இறந்த குழந்தையினை இலையான் மொய்த்த வண்ணம் உள்ளபோது காண்பித்தார். இறந்த விலங்குகளின் குட்டி மாதிரி தனது பிள்ளையினை அம்மணமாக காட்டியது அவளின் மனஅழுத்தத்தினை மேலும் அதிகமாகியது, என்னவென்றாலும் பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளையல்லவா. அவள் ஊழியரிடம் கூறினாள் குழந்தைக்கு வாங்கிய உடுப்புகள் உள்ளன அவற்றினை உடலிற்கு அணிவித்து விடுமாறு மன்றாடினாள் . இது இறுதியில் வாய்த்தர்க்கத்தில்தான் முடிந்தது. அவளின் மனநிலை காரணமாக குழந்தையின் உடலினை உறவினர்களினால் வீட்டிற்கு கொண்டுபோக முடியவில்லை. ஒரு சில வாரங்களின் பின்னர் அவளின் விருப்பத்தினை சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் நிவர்த்தி செய்தனர். அதன் பின்னரே அவளினால் அந்த இழப்பில் இருந்து விரைவாக மீண்டெழ முடிந்தது.


ஓர் நபர் தனது வாழ்நாளில் எமக்கு நண்பனாக இருந்திருக்கலாம் அல்லது பரம எதிரியாக இருந்திருக்கலாம் ஆனால் குறித்த நபர் மரணம் அடைந்த பின்னர் அவரின் உடலுக்கு அல்லது அவரிற்கு மரியாதை செலுத்துவது என்பது வளர்ச்சியடைந்த நாகரீகம் ஒன்றின் பண்பாகும். இறந்த ஒருவருக்கு மரியாதை அல்லது கணம் செலுத்துதல் என்பது பல்வேறு விடயங்களை கொண்டுள்ளது. அவற்றில் சில வருமாறு

  1. இறந்தவர்களின் உடல்களை அவர்களின் இறுதி விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களின் இன , மத மற்றும் மொழி பண்பாடுகளுக்கு அமைய அடக்கம் செய்தல்.
  2. இறந்தவர்களின் நினைவாக நினைவிடங்கள் போன்றன அமைத்தலும் அவர்களினை நினைவு கூரலும்.
    இவற்றினை பொதுவாக சகல மதங்களும் பண்டைக்காலம் தொட்டு போதித்து வருகின்றன. உதாரணமாக துட்டகைமுனு மன்னன் தனது எதிரியான எல்லாள மன்னனை போரில் வென்ற பின்னர் அவனுக்கு சமாதி அமைத்த பின்னர் அச்சமாதி அமைந்துள்ள வீதி வழியாக செல்லும் சகலரையும் அதற்கு மரியாதை செய்யுமாறு பணித்தான். ஆனால் இன்று துட்டகைமுனுவின் வழித்தோன்றல்களாக கூறிக்கொள்பவர்கள் இவற்றினை கடைப்பிடிப்பதில்லை. அத்துடன் பெரும்பாலான வைத்தியசாலை ஊழியர்களும் கடைப்பிடிப்பதில்லை என்பது கவலை தரும் விடயமாகும்
    முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.