திருமணம் ஆகாமலே….

அண்மையில் ஓர் பெண் திருமணம் ஆகியிராத நிலையில் பிரசவித்த சிசு ஆனது பேர்த்தியினால் கொல்லப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டமை பலரும் அறிந்தமையே. இவ்வாறான சம்பவங்களை நாம் முற்று முழுதாக எம்மால் தடுத்து விடமுடியாது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு பல்வேறுபட்ட காரணிகள் ஏதுவாயுள்ளன. அவற்றில் சில

1. தொடர்ச்சியான வறுமை நிலைமை

2. கருத்தடை சாதனங்கள் பற்றிய அறிவின்மை

3. இளவயது திருமணமும் விவாகரத்துக்களும்

4. கணவன் வெளிநாட்டில் உள்ளமை

5. பாதிக்கப்பட்ட  பெண்ணிற்கு கிடைக்கும் சேவைகள் பற்றிய அறிவின்மை 

6. திருமணம் ஆகாமல் கருத்தரித்தல் 

இவ்வாறான காரணங்களில் முக்கியமானது  “பாதிக்கப்பட்ட  பெண்ணிற்கு கிடைக்கும் சேவைகள் பற்றிய அறிவின்மை” என்பதாகும். இங்கு பாதிக்கப்பட்ட  பெண்ணிற்கு கிடைக்கும் சேவைகள் என்பது இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்தல், சட்ட ஆலோசனைகள் வழங்கல், தேவை ஏற்படின் DNA பரிசோதனை செய்தல், உளவள ஆலோசனைகள் வழங்கல்   போன்றன அடங்கும்.

சில சந்தர்ப்பங்களில் குறித்த  பெண் ஆனவள் இவ்வாறு தனக்கு பிறக்கும்  குழந்தையினை தத்து கொடுக்க விரும்பினால் அதற்கான வசதியினை ஏற்படுத்தி கொடுத்தல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தற்காலிக வதிவிடம் வழங்கல், உடை மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கல், பிள்ளை பேற்றிற்கான வசதிகள் வழங்கல், பிறக்கும் குழந்தைக்கு தேவையான பொருட்கள் வழங்கல், சட்ட ரீதியாக தத்து கொடுக்க உதவிசெய்தல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான தொழில் பயிற்சிகள், வாழ்வாதார உதவிகள்  போன்றன உள்ளடங்கும்.

மேற்குறித்த சேவைகள் யாவும்  அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. வடமாகாணத்தில் கூட இச்சேவைகளை பெறக்கூடியதாக உள்ளது. இங்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் கிடைக்கும் இச்சேவைகள் பற்றி பலருக்கும் தெரியாது என்பதே ஆகும். அத்துடன் இங்குள்ள விசேடம் என்னவெனில் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் இரகசியமாக பேணப்படும் என்பதே அத்துடன் இவர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு வெளியார் யாரும் பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை. இங்கு பல்வேறுபட்ட தொழில் வல்லுநர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணின் புனர்வாழ்விற்கு உரிய ஆலோசனைகளும் உதவிகளும் வழங்குவர்.

மேலும் சில மதரீதியான நிறுவனங்களும் இவ்வாறான சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது பிரதேச செயலகத்தினை அணுகுவதன் மூலம் (சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் … போன்றோர் மூலமாக) அல்லது சட்ட வைத்திய அதிகாரிகளை அணுகுவதன் மூலம் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

கூட்டு பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் புனர்வாழ்வு தொடர்ப்பாக அரச அதிகாரிகளுடனும் குறித்த பெண்ணுடனும் இவ்வாறான ஓர் சேவை வழங்கும் நிலையத்தில் கலந்துரையாடல் (Multi-disciplinary case conference) நடைபெறுவதினை மேற்குறித்த படத்தில் காணலாம்.

முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.