பெண் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர், நடுத்தர வயதுடைய ஓர் பெண்மணி அவரின் இரட்டை பிள்ளைகளுடனும் மற்றைய அவரின் இரு பிள்ளைகளுடனும் சகிதம் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தார். ஏன் அவர்கள் வந்தார்கள் என்று விசாரித்த பொழுது தான் விடயம் தெரிய வந்தது. அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் DNA பரிசோதனைக்காக இரத்தத்தினை வழங்கும் பொருட்டு வந்திருந்தனர். பெண்மணியின் கணவர் போதைக்கு அடிமையானவர் அத்துடன் தனது மனைவியின் நடத்தை மீது ஒருசில வருடங்களாகசந்தேகம் கொண்டு நாளாந்தம் சண்டை இடுபவர். இறுதியில் கொடுமை தாங்காத மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றினை நாட, அங்கு கணவன் தரப்பு விவாதத்தினை கேட்ட நீதிமன்றம் DNA பரிசோதனை செய்யுமாறு கட்டளையிட்டது. அதனை நிவர்த்தி செய்வதற்காகவே அவர்கள் வந்திருந்தனர.
வந்ததில் இருந்து அந்த பெண் அழுத்தவண்ணமே இருந்தாள். அவளிடம் வைத்தியர் தகவல்களை பெறுவது என்பது மிகக் கடினமானதாகவே இருந்தது. இவ்வாறான உணர்ச்சிமயமான சூழ்நிலைகளில் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் மிக ஆதரவோடும் பரிவோடும் கதைத்து தகவல்களை பெற்றுவிடுவார்கள், அவர்களை இந்த விடயத்தில் கில்லாடிகள் என்றே சொல்லவேண்டும். இங்கும் இவ்வாறே ஓர் பெண் ஊழியர் தகவல்களை பெற்றார்.

மேலும் அந்த பெண்மணி வைத்தியரிடம் ஓர் வேண்டுகை விடுத்தார். அது யாதெனில் இரட்டை குழந்தைகளில் ஒருவரான ஆண் குழந்தைக்கு DNA பரிசோதனை செய்ய வேண்டாம் என்பதே, அதனை தொடர்ந்து அவர் கூறிய தகவல் ஆச்சரியம் தருவதாய் இருந்தது. அந்த பெண் 2008 ம் ஆண்டில் வன்னி பிரதேசத்தில் திருமணம் செய்தார். 2009ம் ஆண்டின் தொடக்கத்தில் குறித்த பெண்ணின் கணவர் மட்டும் இராணுவ கட்டுப்பாட்டிற்கு செல்ல அவள் மட்டும் தனியே தங்கி விட்டாள். யுத்தத்தின் காரணமாக அவள் எவ்விதமான தாய் சேய் கிளினிக்குக்கோ வேறு பரிசோதனைகளுக்கோ செல்லவில்லை, இவ்வாறக இருந்த அவள் 2009ம் ஆண்டின் தொடக்கத்தில் பிரசவத்திற்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பொழுது தான் அந்த சம்பவம் நடைபெற்றது. அவள் தங்கியிருந்த கட்டிலின் அருகே இருந்த காயமடைந்த கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை காயங்களினால் மோசமடையத்தொடங்கியது அதனை தொடர்ந்து வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையினை பிரசவித்தனர், தூரதிஷ்டாவசமாக அந்த குழந்தையின் தாயார் மரணித்து விடுகின்றார். அதனைத் தொடர்ந்து சில நாட்களில் இந்த பெண்மணிக்கும் குழந்தை பிறக்கின்றது. அந்த இரு குழந்தைகளையும் தனது குழந்தைகளாக பதிவு செய்து வளர்த்து வருகின்றாள். இந்த விடயம் கணவனுக்கு கூட தெரியவில்லை மேலும் யுத்தத்தின் காரணமாக உறவினர் ஒருவரும் வைத்திய சாலையில் தங்கியிருக்கவில்லை அதன் காரணமாக இந்த சம்பவம் பற்றி அவளைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரியவில்லை. இவ்விடயம் காரணமாகவே அவள் பயமும் கவலையும் கொண்டிருந்தாள். இறுதியாக போலீஸ் உத்தியோகத்தரின் அறிக்கையின் படி கடைசி பிள்ளையின் பிறப்பு சம்பந்தமாகவே கணவர் கணவர் சந்தேகம் கொண்டிருந்தார் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அக்குறித்த பிள்ளையின் இரத்த மாதிரியினை பெற்று அதற்கு மட்டும் DNA பரிசோதனை செய்வது என தீர்மானிக்கப்பட்டு அதன் பிரகாரம் இரத்த மாதிரிகள் குறித்த போலீசாரிடம் DNA பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது. குறித்த பெண்மணி தனது எல்லா பிள்ளைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றபயம் காரணமாகவும் வைத்தியரிடம் உண்மை கூறவேண்டும் என்பதாலுமே இவ்விடயத்தினை கூறவேண்டி வந்திருக்கலாம். DNA பரிசோதனைகள் பல குடும்பங்களை பிரித்தும் சில குடும்பங்களை சேர்த்தும் வைத்துள்ளன.
முற்றும்
