இந்தியாவின் கிராமங்கள் தோறும் நடைமுறையில் இருக்கும் கட்டப்பஞ்சாயத்து முறைமை யாவரும் அறிந்ததே . இதில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் பெரும்பாலான தீர்ப்புக்கள் நகைப்புக்குரியதாகவும் இலகுவாக சவாலுக்கு உட்படுத்த கூடியதாகவும் உள்ளது. எனினும் கிராம மக்களின் சிறுசிறு பிரச்சனைகளை இலகுவாக தீர்த்து வைக்கும் இடமாக கட்டப்பஞ்சாயத்து முறைமை இருப்பதினால் பெருமளவிலான மக்கள் அதன் மூலம் பயன் பெறுவதோடு அந்த முறைமை நீடித்து நிற்கின்றது.
இலங்கையில் அரசமைப்பு ரீதியாக இவ்வாறான ஓர் முறைமை இல்லை. பொதுவாக சமூகத்தில் அதிக அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது வேறு நபர்கள் தனிப்பட்டவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதினை “கட்டப்பஞ்சாயத்து” தீர்ப்பு என கூறுவர்.
இலங்கையில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இவ்வாறான ஓர் புதிய கலாச்சாரம் உருவெடுத்து வருகின்றது. முக்கியமாக சிறுவர் துஸ்பிரயோகம் அதிலும் பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் நடைபெறும் பொழுது அதனை நடைமுறையில் இருக்கும் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தாமல் அதற்கு வெளியிலேயே தீர்வு காணும் நடவடிக்கைகள் நடைபெறுவத்தினை அவதானிக்க கூடியதாக உள்ளது.
யார் தான் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்? குறிப்பாக பாடசாலை அதிபர்கள், போலீசார், கிராமசேவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் மத தலைவர்கள்போன்றோரே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களின் முக்கிய நோக்கமே இவ்வாறான சம்பவத்தினை வெளி உலகத்திற்கும் நீதிமன்றிற்கும் தெரியாமல் மறைப்பது தான். இவர்கள் குற்றம் புரிந்த தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு ஆகியோரிடம் கலந்துரையாடி ஒருசில பயமுறுத்தல்களுடன் குற்றம் புரிந்த தரப்பிற்கு சார்பான தீர்ப்பொன்றினை திணிப்பர். இதன் பொழுது பாதிக்கப்பட்டவருக்கு பணம், ஆடு போன்ற கால்நடைகள் மற்றும் வீடமைப்பு உதவிகள் போன்றன வழங்கப்படும்.
இவ்வாறான கட்டப்பஞ்சாயத்து முறையினால் சமூக ரீதியில் பல தாக்கங்கள் ஏற்படும், அவற்றில் ஒரு சில
- குறிப்பாக பாதிக்கப்பட நபர்களிற்கு உரிய நியாயமான தீர்வு கிடைக்காது மேலும் அதுகுறித்து அவர்கள் முறையிடாது இருக்க பயமுறுத்தப்படுவர்.
- குறித்த துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இதன் காரணமாக பாதிப்பட்ட நபர் வன்முறையான முறையில் தீர்வினை காண விளையலாம் அல்லது இயலாமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம்.
- மேற்படி மாவட்டங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் அவர்களிடத்து கடுமையான கலாச்சார சீரழிவினை ஏற்படுத்தும்.
- பாலியல் குற்றம் புரிந்தவர் சுதந்திரமாகவும் பாதிப்பட்ட நபர் அடங்கி வாழவும் நேரிடும் இதன் காரணமாக இவ்வாறான பல சம்பவங்கள் நடைபெறும்.
- பாலியல் துஸ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பெற மறுப்பதினால் அவர் தொடர்ச்சியான உடல் மற்றும் உள தாக்கங்களுக்கு உட்படுவர்.

மக்களும் இவ்வாறான முறைமைகளை நாட பல்வேறு காரணிகள் எதுவாக அமைந்து விடுகின்றன. அவற்றில் ஒருசில வருமாறு
1.பல்வேறு காரணங்களினால் இலங்கையின் நீதித்துறை மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையீனம்.
2. நீதிமன்றில் தீர்ப்புக்கள் வழங்க பலவருடங்கள் காலதாமதம் ஆகின்றமை.
3. பாலியல் துஸ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு சமூகத்தில் கிடைக்கும் அவமரியாதைகள் மற்றும் அசௌகரியங்கள்.
4. உரிய நீதியினை பெற அதிக செலவீனங்கள் ஏற்படுகின்றமை
எனவே நாம் இவ்வாறான பல தீமைகளை ஏற்படுத்தும் கட்டப்பஞ்சாயத்து முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதினை ஊக்குவிக்க கூடாது.
முற்றும்
