அண்மைகாலமாக இலங்கையில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இதன் காரணமாக இள வயதினரே அதிகளவில் மரணத்தினை தழுவுவதோடு மட்டும் அல்லாது அதிகளவிலான இளவயதினர் பாரதூரமான காயங்களுக்கும் உள்ளாகின்றனர். அதிகளவு காலம் வைத்திய சாலையில் தங்கிநின்று சிகிச்சை பெற நேரிடுகின்றது இதனால் உறவினர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாவதோடு காயம் அடைந்தவர் பல சந்தர்ப்பங்களில் ஊனம் அடையவும் நேரிடுகின்றது. இந்த பதிவு எழுதப்படும் பொழுதும் இவ்வாறான ஓர் விபத்தில் மன்னார் மாவட்டத்தில் இருவர் பலியாகி உள்ளனர்.
இவ்வாறான மோட்டார் சைக்கிள் விபத்துக்களுக்கு பிரதான காரணம் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து வீதியோரம் உள்ள மரங்கள் மற்றும் மதில் போன்றவற்றில் மோதுதல் ஆகும். பலரும் இவ்வாறு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழப்பதற்கு வேகம் தான் முக்கிய காரணம் என்று கருதுகின்றனர். அது உண்மை தான் என்றாலும் வேகம் தவிர பல்வேறு காரணிகள் இவ்வாறு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழக்க ஏதுவாகின்றது. அவற்றில் முக்கியமானவை வருமாறு
- வீதியின் அமைப்பும் வீதியின் மேற்பரப்பு தன்மையும்
நேரிய நீண்ட வீதியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது குறைவு மாறாக அதி வேகத்தில் பயணிக்கும் பொழுது வீதியில் திடீரென எதிர்ப்படும் கல், கிடங்குகள் மற்றும் விலங்குகள் போன்றவற்றில் மோதுவதினை தடுக்கும் முகமாக வேறுதிசைக்கு மோட்டார் சைக்கிளினை திருப்பும் பொழுது இவ்வாறு ஏற்படுகின்றது. அதிக வேகத்தில் பிரயாணிக்கும் பொழுது வீதியின் வளைவில் அல்லது சந்தியில் சடுதியாக மோட்டார் சைக்கிளினை திருப்பும் பொழுது பொதுவாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடினை இழந்து விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பம் அதிகம். வீதியின் மேற்பரப்பில் கிரவல் கற்கள் அல்லது ஈரலிப்பு (மழை அல்லது அதிக பனி ) காணப்படும் பொழுது இவ்வாறு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடினை இழக்கும் சந்தர்ப்பம் அதிகம் ஆகும். - வேகம்

- அதிக வேகம் ( 50km /h ) இற்கும் அதிகமான வேகத்தில் செல்லும் பொழுதுதான் இத்தகைய விபத்துக்களுக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றது. வேகமானது 60km /h இணை நெருங்கும் பொழுது இவ்வாறு கட்டுப்பாட்டினை இழத்தல் இரு மடங்காக அதிகரிக்கும். மேலும் குறித்த வேகத்தில் நேர் வீதியில் இருந்து வளைவிற்கு செலுத்தும் பொழுதும் கட்டுப்பாடினை இழக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும்.
- மோட்டார் சைக்கிளின் அமைப்பு
இன்றைய உலகில் வாடிக்கையாளரின் தேவை கருதி பல்வேறு பட்ட வடிவமைப்புகளில் மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில வகையானவை இவ்வாறு இலகுவாக கட்டுப்பாட்டினை இழந்துவிபத்துக்களாகும் தன்மை உடையவை. மேலும் டயர்களில் உள்ள தவாளிப்பு தேய்ந்து இருக்கின்றமையும் இவ்வாறு விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தினை அதிகரிக்கும்.

- விபத்து நடைபெறும் காலப்பகுதி
தற்பொழுதுள்ள தரவுகளின் பிரகாரம் இவ்வாறு கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளதால் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களிலேயே அதிகளவு நடைபெற்றுள்ளது. பொதுவாக இந்த நாட்களில் பொதுப் போக்குவரத்து குறைவாக இருப்பதன் காரணமாக மோட்டார் சைக்கில் ஓட்டிகள் அதிகளவு வேகத்தில் பயணிப்பதே காரணம் ஆகும். - மதுபானத்தின் அளவு
நாம் அருந்தும் மதுபானம் பல்வேறுவித உடலியல் மற்றும் மனோவியல் மாற்றங்களினை ஏற்படுத்தும். குறித்த செறிவில் இரத்தத்தில் உள்ள பொழுது மோட்டார் சைக்கிளோட்டிகள் ஆபத்தான தீர்மானங்களினை அல்லது முடிவுகளினை வெறுமனே துணிந்து எடுப்பர் (taking high risk behavior) இதுவும் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்கு உள்ளாவதற்கு ஓர் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.
முற்றும்
