மோட்டார் வண்டியில் இருந்த பெட்ரோல் வாசனையை முகர்ந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஒருசில நாட்களுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம், தம்புள்ளை – வெலமிடியாவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவத்தில் தம்புள்ளை – வெலமிடியாவ ஆரம்பப்பள்ளியில் தரம் இரண்டில் கல்வி கற்கும் சஜித் குமார முனசிங்க என்ற 7 வயதுச் சிறுவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுவன் நேற்று மதியம் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தொட்டியில் இருந்து மூடியை அகற்றி பெட்ரோல் வாசனை முகர்ந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து மயக்கமடைந்த சிறுவனை கலேவெல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்மில் பலருக்கு இவ்வாறு பெற்றோலிய பொருட்களின் வாசனையினை அதிகளவில் முகர்ந்தால் சடுதியாக மரணம் ஏற்படும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு பெற்றோல், மண்ணெண்ணெய், டிசல், டின்னர், தேர்ப்பன்டைன், ஒயில் பெயிண்ட் போன்ற பெற்றோலிய பொருட்களை மற்றும் சில சேதன கரைப்பான்களை (organic solvents) அதிகளவு நுகரும் பொழுது சடுதியாக சடுதியாக மரணம் சம்பவிக்கும். ஒருசிலர் இவ்வாறன பாதார்த்தங்களினை விரும்பி முகர்வர். இவ்வாறு முகரும் பொழுது அவர்களுக்கு அவர்களுக்கு இனம் புரியாத சந்தோச உணர்வு ஏற்படுவதே (distortion of consciousness) ஆகும். காலப்போக்கில் இச்செயற்பாட்டுக்கு அவர்கள் அடிமையாகும் தன்மை ஏற்படும் (volatile substance abuse).
இனி ஏன் அவர்களுக்கு இவ்வாறு சடுதியாக மரணம் சம்பவிக்கின்றது என பார்ப்போம்
- இங்கு முகரப்படும் சேதன கரைப்பான்கள் எமது இருதயத்தில் தாக்கமடைந்து இருதயத் தசையினை எமது உடலில் உள்ள அட்ரினலின் மற்றும் நோர் அட்ரினலின் ஆகியவற்றின் இலகுவான தாகத்திற்கு உள்ளாக்கும். இதன் காரணமாக எமது இருதயத் துடிப்பின் ரிதம் மாற்றம் அடையும் அதன் காரணமாக சடுதியான இறப்பு ஏற்படும்.( Any of the solvents appears to have the ability to sensitize the myocardium to the action of catecholamines,)
- சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான பெற்றோலிய பொருட்கள் மனிதனின் இருதயத்தில் கணிசமான அளவு நோய்த்தாக்கத்தினை (chemical mediated myocarditis) ஏற்படுத்தியும் இறப்பினை ஏற்படுத்தியுள்ளன.
- பல சந்தர்ப்பங்களில் பலர் பொலித்தீன் பைகளில் இவ்வாறான திரவங்களினை இட்டு முகருகின்றனர். இவ்வாறு செய்யும் பொழுது அவர்கள் அதிக செறிவில் தொடர்ச்சியாக அந்த பெற்றோலிய பொருளினை முகருவத்தினாலும் மூச்சு திணறல் ஏற்படுவதினாலும் சடுதியான இறப்பு ஏற்படும். மேலும் குறித்த நேர இடைவெளியின் பின்னர் சுயநினைவு மாற்றம் அடைவதன் காரணமாக அவர்களை நெருங்கும் ஆபத்தில் இருந்து அவர்களால் விலக முடிவதில்லை. இவ்வாறு பரிதாபகரமாக மரணத்தினை தழுவிக்கொள்கின்றனர் (plastic bag asphyxia).
- சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இவ்வாறு சுயநினைவு இழந்து இருக்கும் சந்தர்ப்பத்தில் வாந்தி எடுக்க நேரிடும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் வாந்தியானது சுவாச குழாயினுள் இறங்கி மூச்சுத்திணறலினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.
எனவே இவ்வாறான ஆபத்தான பழக்க வழக்கங்களினை விரும்பியோ அல்லது தற்செயலாகவோ கைக்கொள்ளாமலே எமது உயிரினை பாதுகாப்போம்
முற்றும்
