இறந்தவர் உயிர்த்தெழுந்தாரா???

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இறந்துவிட்டார் எனக்கருதி வைத்திய சாலையின் பிரேத அறைக்கு அவரின் சடலம் அனுப்பப்பட்டது. அங்கு அவரின் உறவினர்கள் அவரின் சடலத்தினை பார்வையிட சென்ற பொழுது அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது அதனை தொடர்ந்து அவர் மீளவும் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவ்வாறான சம்பவங்கள் பல உலகில் இடம்பெற்றுள்ளன. ஏன் இவ்வாறு நடைபெற்றது என்பது பற்றிய விளக்கமே இப்பதிவு ஆகும்.


மருத்துவ உலகில் இவ்வாறு நடைபெறுவதினை SUSPENDED ANIMATION (APPARENT DEATH) என்றழைப்பர். அதாவது சில செயற்பாடுகளின் பொழுது எமது இருதய துடிப்பு மற்றும் சுவாசம் போன்றன தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது மிகக் குறைந்த வேகத்தில் மேற்படி செயற்பாடுகள் நடைபெறும். சாதரணமாக ஓர் நபரில் இறப்பினை உறுதிப்படுத்தும் மருத்துவ முறைகளினால் இச்சந்தர்ப்பத்தில் இறப்பினை உறுதிப்படுத்த முடியாது, இதன் காரணமாக வைத்தியர்கள் குறித்த நபர் இறந்து விட்டதாக தவறுதலான முடிவினை எடுப்பர்.
பின்வரும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு இருதய துடிப்பு மற்றும் சுவாசம் போன்றன தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது மிகக் குறைந்த வேகத்தில் மேற்படி நடைபெறும்.
1. யோகா பயிற்சியின் பொழுது
2. ஒரு வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில்
3. நீரில் மூழ்கி இறக்கும் தறுவாயில்
4. மின்சார தாக்குதலுக்கு உள்ளாகும் பொழுது
5. அதீத குளிர் அல்லது வெப்பத்திற்கு உள்ளாகும் பொழுது
6. பொது மயக்க மருந்து கொடுத்தலின் பொழுது
7. வலிப்பு வரும் பொழுது
9. பாம்பு கடித்தலின் பொழுது
10. நஞ்சினை அல்லது சிலவகையான போதை பொருட்களை உட்கொள்ளும் பொழுது
11. உடல் ஏதாவது ஓர் காரணத்தினால் அதிர்ச்சிக்கு (Shock) உள்ளாகும் பொழுது- உதாரணமாக வயிற்றோட்டம், வாந்தி போன்றவற்றினால் அதிக நீரிழப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில்

மேற்குறித்த சந்தர்ப்பங்களில் குறித்த நபரில் இறப்பு ஏற்பட்டுள்ளதா? என வைத்தியர்கள் கவனமாக பரிசோதிக்க வேண்டும் அத்துடன் குறித்த நபருக்கான உயிர் காப்பு சிகிச்சை முறையினை குறிப்பிட்ட மணி நேரத்திற்கு கொண்டு நடாத்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மீளவும் சுவாச மற்றும் இருதய செயற்பாடுகள் மீளவும் சாதாரண நிலைமைக்கு வரலாம்.
ஓர் நபருக்கு மேற்குறித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் கட்டாயம் SUSPENDED ANIMATION (APPARENT DEATH) என்ற நிலைமை வரும் என்றில்லை, குறித்த சில நபர்களுக்கே இந்த நிலைமை உண்டாகும். இதன் காரணமாகவே முன்னைய காலங்களில் இறந்த நபரின் உடலினை 02 மணித்தியாலங்களாக வைத்திய சாலையின் விடுதியில் வைத்திருந்த பின்னரே வெளியில் கொண்டுசெல்ல அனுமதிப்பர். ஆனால் தற்காலத்தில் நவீன முறைகள் மூலம் மரணம் உறுதிப்படுத்த படுவதினால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது அரிது.
முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.