கடந்த வாரத்தில் வடமராட்சி கிழக்கு கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட கண்ணாடி போத்தல் ஒன்றினை கண்டெடுத்த மீனவர்கள் அதனை மதுபானம் என நினைத்து பருகினர். இதன் பொழுது ஏற்பட்ட அனர்த்தத்தில் இவ்வாறு பருகிய இருவர் இறந்தனர் மேலும் சிலர் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற நேரிட்டது. மீனவர்களின் கருத்துப்படி வழமையாக இவ்வாறாக மதுபான போத்தல்கள், வைத்தியசாலையில் பாவிக்கப்படும் பொருட்கள் மற்றும் பொலித்தீனினால் பொதி செய்யப்பட்ட உணவு பொருட்கள் கரை ஒதுங்குகின்றமையும் அவற்றினை மக்கள் எடுத்து பாவிப்பது வழமை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இப்பதிவில் எவ்வாறு ஓர் மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காண்பது என்பது பற்றி பார்வையிடுவோம். பொதுவாக வைத்தியசாலையில் புண்களுக்கு மருந்து கட்டிட பாவிக்கப்படும் திரவங்கள், விவசாயத்தில் பாவிக்கப்படும் கலை கொல்லிகள், பீடை நாசினிகள், நஞ்சு பதார்த்தங்கள் மற்றும் ஏனைய திரவ மருந்து வகைகள் கறுப்பு அல்லது மண்ணிற கண்ணாடி அல்லது பிளாஸ்ட்டிக்கினால் ஆன போத்தல்களில் இருக்கும். இவ்வகையான போத்தல்களினை கண்டவுடன் நாம் உசார் அடையவேண்டும். மேலும் இவ்வாறான போத்தல்களில் சிவப்பு, நீலம், பச்சை அல்லது மஞ்சளினால் ஆன லேபிள் இருக்கும். பொதுவாக ஆங்கில மொழியில் தான் போத்தலினுள் இருக்கும் பதார்த்தம் பற்றிய விபரங்கள் இருக்கும். ஆனால் மேற்குறித்த நிறங்களினை காண்பதன் மூலம் ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட மிக இலகுவாக போத்தலினுள் இருப்பது மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காணலாம்.
மேலும் சில போத்தல்களில் மண்டை ஒட்டு குறியின் உடனான கோட்டு படம் (நஞ்சு பதார்த்தத்தினை குறிக்கும்), ஆச்சரிய குறியின் கோட்டு படம் ( ஆபத்தான உடல் நலக்குறைவுகள் ஏற்படுத்தும் பதார்த்தம்) போன்றன இருக்கும் இவற்றினை வைத்தே மிக இலகுவாக போத்தலினுள் இருப்பது மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காணலாம்.

மேலும் மனித நுகர்வுக்கு பொருத்தமான பதார்த்தத்தினை கொண்டிருக்கும் போத்தல் அல்லது வேறு பொதி செய்யபட்ட உணவு பொதி ஒன்று காணப்படுமாயின் கூட அதனை எடுத்து நாம் மனித நுகர்விற்கு பயன்படுத்தல் ஆகாது ஏனெனில் அவை நீண்ட காலமாக அதிக வெப்பநிலை, ஈரப்பதன் மற்றும் நீர் என்பவற்றுடன் தொடுகையில் இருப்பதன் காரணமாக அவற்றினுள் இருக்கும் மனித நுகர்வுக்கு பொருத்தமான பதார்த்தம் ஆனது மனித நுகர்விற்கு பொருத்தம் அற்றதாகவும் சிலவேளை நச்சு பதார்த்தம் ஆகவும் மாறி இருக்கலாம்.
முற்றும்
