ஆசிரியர் மாணவரினை உடல் ரீதியாக தண்டிக்கலாமா?

கடந்த சில தினங்களில் யாழ் குடாநாட்டில் ஆசிரியர் மற்றும் வணக்கத்திற்குரிய மதகுரு ஆகியோர் பாடசாலை மாணவன் ஒருவனை குரூரமான முறையில் தாக்கியதில் மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் பலரிடத்தும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மாணவர்களுக்கு இவ்வாறு உடல் ரீதியான தண்டனை வழங்குதல் (corporal punishment) சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் பலர் தங்களின் மனவக்கிரங்களை தீர்க்கும் கருவியாக இந்த உடல் ரீதியான தண்டனையினை மாணவர் மீது வழங்கி வருதல் அவதானிக்கத்தக்கது.

  1. ஏன் இலங்கை உட்பட பல நாடுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகளை தடை செய்துள்ளன?
    இவ்வாறு உடல் ரீதியான தண்டனை வழங்களினால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் ஆகும். மேலும் விஞ்ஞான ரீதியாக நடாத்தப்பட்ட ஆய்வுகளில் இவ்வாறான தண்டனைகளினால் மாணவர்கள் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே உடல் ரீதியான தண்டனைகளை வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  2. இலங்கையில் எந்த சட்ட பிரிவுகளில் உடல் ரீதியான தண்டனை வழங்கல் தடை செய்யப்பட்டுள்ளது?
    கல்வி அமைச்சின் 2005/17 இலக்கமுடைய சுற்றறிக்கை மூலமும் இலங்கை தண்டனை சட்ட கோவையின் பிரகாரமும் (Penal Code Amendment Act No. 22 of 1995) சிறுவர் சாசனம் (Article 71 of the Children and Young Persons Ordinance) மூலமும் உடல் ரீதியான தண்டனைகளை வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  3. உடல் ரீதியான தண்டனைகளை வழங்காமல் மாணவர்களினை நன்வழிப்படுத்த முடியுமா? ஆம். பல ஆசிரியர்கள் மற்றும் பலர் நினைத்துக்கொள்கின்றனர் உடல் ரீதியான தண்டனைகளை வழங்கியே மாணவர்களினை நன்வழிப்படுத்த முடியும் என்று, அது மிகவும் தப்பானது.உடல் ரீதியான தண்டனைகளுக்கு பதிலாக மாணவர்கள் பிழை விடும் பொழுது அவர்களை புறக்கணிப்பதன் மூலமும் நற்காரியங்கள் செய்யும் பொழுது அவர்களை தட்டி கொடுப்பதன் மூலமும், நன்மாணாக்கரினை உதாரணம் காட்டுவதன் மூலமும், அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் மூலமும், சிறுவர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிப்பதன் மூலமும், வழிகாட்டல் மற்றும் ஆற்றுப்படுத்தல் (guidance and counseling methods) மூலமும் மாணவர்களினை நன்வழிப்படுத்த முடியும். திறமை மற்றும் ஆற்றல் அற்ற ஆசிரியர்களே உடல் ரீதியான தண்டனைகளை வழங்கி மாணவர்களினை நன்வழிப்படுத்த முடியுமென நினைக்கின்றனர்.
  4. உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன? மற்றவர்களை உடல் ரீதியான தண்டனை வழங்கி தண்டிக்க முடியும் என்ற பிழையான நிலைப்பாட்டிற்கு இட்டுச்செல்லும். இன்றைய ஆசிரியர்கள் பலர் இவ்வாறு உடல் ரீதியான தண்டனையை அனுபவித்தவர்கள் என்பதன் காரணமாகவே அவர்கள் அதனை உதாரணமாக கொண்டு உடல் ரீதியான தண்டனையை வழங்கவும் அதனை ஆதரிக்கவும் முற்படுகின்றனர்.
    உடல் ரீதியான தண்டனை வழங்கல் மாணவர் – ஆசிரியர் உறவினை நீண்ட காலம் தொடர விடாது. மேலும் உடல் ரீதியான தண்டனை வழங்களின் பொழுது மாணவர்கள் உடற் காயங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகமாகும். முக்கியமாக கண் மற்றும் காது போன்றன காயமடையலாம். இவ்வாறு உடல் ரீதியான தண்டனை வழங்கல் உடல் ரீதியான சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு நிச்சயம் இட்டுச்செல்லும்.
    மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கும் பொழுது அவர்கள் அதில் இருந்து தப்புவதற்கு விடயங்களை மறைத்தல், பொய் சொல்லுதல் போன்ற தீய பழக்கவழக்கங்களை பழகுவார்கள். மேலும் உடல் ரீதியான தண்டனை வழங்கல் குறிப்பிட்ட காலம் வரையுமே மாணவர்களை நன்வழிப்படுத்தும் அதாவது மாணவர்களை நன்மாணாக்கர் மாதிரி நடிக்க வைக்கும்.
    உடல் ரீதியான தண்டனை வழங்களின் பொழுது ஏற்படும் உள ரீதியான பாதிப்புக்கள் மாணவர்களுக்கு நீண்ட காலம் நீண்ட காலம் நிலைத்து நிற்கும், இதன் காரணமாகவே அன்றைய மாணவர்களாகிய இன்றைய ஆசிரியர்கள் உடல் ரீதியான தண்டனையை வழங்கவும் அதனை ஆதரிக்கவும் முற்படுகின்றனர்.
  5. ஒழுக்கமான மாணவர் சமுதாயத்தினை கட்டியெழுப்புவது எவ்வாறு?
    ஒழுக்கமான மாணவர் சமுதாயத்தினை ஓரிரு நாட்களில் கட்டியெழுப்ப முடியாது. சிறுவயது முதலே பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் (மாதா, பிதா, குரு…) முன்னுதாரணமாவார்களாக (Role model ) செயற்படுவதன் மூலமே பணிவான, ஒழுக்கமான மாணவர் சமுதாயத்தினை கட்டியெழுப்ப முடியும்.
  6. சிறிதளவான உடல் ரீதியான தண்டனைகளை வழங்க முடியுமா?
    உடல் ரீதியான தணடனைகள் இலங்கையில் உள்ள சட்டங்களின் பிரகாரம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறிதளவான உடல் ரீதியான தண்டனைகளை வழங்கல் என்பது கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் இவ்வாறு தண்டனை வழங்களின் போது ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்படும் வார்த்தை பிரயோகம் காரணமாக மாணவர்கள் பாடசாலையினை விட்டு இடைவிலகியமை மற்றும் தற்கொலை செய்தமை போன்ற சம்பவங்கள் நிறையவே நடைபெற்றுள்ளன.
    முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.