மட்டு- இளைஞன் பொலிஸாரினால் கொல்லப்பட்டாரா?

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை இரவு புலனாய்வுப்பிரிவினர் எனக்கூறிவந்தவர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட 22 வயதுடைய இளைஞன் ஒருவர் போலீஸ் நிலையத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த இளைஞர் கைது செய்யப்படும் பொழுது பொலிஸாரினால் தாக்கப்பட்டதாகவும் அத்தாக்குதலில் விளைவாக ஏற்பட்ட காயங்களின் காரணமாகவே குறித்த இளைஞர் இறந்ததாகவும் போலீசார் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த இளைஞனின் உடற் கூராய்வு பரிசோதனைகள் முடிவுற்ற நிலையில் குறித்த இளைஞன் அதிகளவு ஐஸ் என்ற போதை பொருளினை உட்கொண்டதனால் தான் மரணம் அடைய நேர்ந்தது என்று இணையத்தள செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.

Methamphetamine Use and Cardiovascular Disease | Arteriosclerosis,  Thrombosis, and Vascular Biology

மெத்அம்பிற்றமைன் என்ற போதைப்பொருளே இவ்வாறு ஐஸ், Black Beauties, L.A. Ice, Speed , Crystal … போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.இப்பதிவில் ஐஸ் என்றழைக்கப்டும் போதைப்பொருளானது எவ்வாறு சடுதியான மரணத்தினை விளைவிக்கும் என பார்ப்போம்.

  1. இந்த ஐஸ் போதைப்பொருளானது தொடர்ச்சியாக பல வருடங்களாக பாவித்து வரும் பொழுது அவை இருதயத்திற்கு குருதியினை வழங்கும் முடியுரு நாடிகளில் கொலஸ்டரோல் படிவினை தூண்டும் (accelerated atherosclerosis) இதன் காரணமாக குறித்த நபர் மிகவிரைவாக மாரடைப்பு ஏற்பட்டு இறப்பினை தழுவுவார்.
  2. மேலும் ஒரு நபர் பலவருடங்களாக ஐஸ் போதைப்பொருளை பாவிக்கும் பொழுது அது அவரின் முடியுரு நாடிகளில் (coronary artery spasm) சுருக்கத்தினை ஏற்படுத்தும், இதன் காரணமாக குறித்த நபர் தீடீர் மரணத்தினை தழுவ நேரிடும்.
  3. இது தவிர ஐஸ் போதைப்பொருளானது நீண்ட நேரத்திற்கு இருதய துடிப்பில் ஒழுங்கற்ற தன்மையினை கொண்டுவரும் (refractory ventricular fibrillation) இதன் காரணமாகவும் சடுதியான மரணம் சம்பவிக்கலாம்.
  4. மேலும் நீண்டகால ஐஸ் பாவனையாளர் ஒருவர் dilated cardiomyopathy என்ற இருதய நோய் நிலைமைக்கு உட்பட்டும் சடுதியாக மரணத்தினை தழுவ நேரிடலாம்.
  5. இது தவிர ஐஸ் பாவனையாளர் ஒருவர் கடுமையாக வேலை செய்யும் பொழுது அல்லது அதிக மனக்கிலேசத்திற்கு (physical/ mental strain) உள்ளாகும் பொழுது அவரின் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கும், இதன் காரணமாகவும் இருதய துடிப்பில் ஒழுக்கற்ற ரிதம் உருவாகி சடுதியான இறப்பு ஏற்படும். பொதுவாக பொலிஸாரினால் கைது செய்யப்படும் பொழுது இவ்வாறு தான் இறப்பு ஏற்படுகின்றது.
  6. மேலும் சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்படும் பொழுது தமது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருளினை மிக அவசரமாக விழுங்கி விடுவார்கள். இவ்வாறு உட்கொள்ளப்பட்ட போதைப்பொருளானது அவர்கள் ஒருதடவை பாவிக்கும் போதைப்பொருளின் அளவினை விட கூடுதலாக இருக்கும் பொழுதும், போதைப்பொருள் சுற்றப்பட்ட உறை எமது சமிபாட்டு தொகுதியில் கரையும் பொழுதும் அதில் அடங்கியிருந்த அதிகளவான போதைப்பொருள் சமிபாட்டு தொகுதியினுள் வெளியேற்றப்பட்டு உடலினுள் அகத்துறிஞ்சப்படும். இதன் காரணமாக குறித்த நபர் சடுதியான நஞ்சாதலுக்கு உள்ளாவர் (Acute Intoxication ) இதன் காரணமாக அவர் சடுதியாக மரணத்தினை தழுவ நேரிடும்.
  7. ஐஸ் பாவனையின் பொழுது சடுதியாக எமது உடலில் குருதி அழுத்தம் அதிகரிக்கும் இதன் காரணமாகவும் மூளையில் இரத்த கசிவு ஏற்படல் (intra cerebral haemorrhage) மற்றும் இருதய நோய் போன்றவற்றினாலும் சடுதியான மரணம் சம்பவிக்கலாம்
    மேற்குறித்தவாறு ஐஸ் போதைப்பொருளானது நபர் ஒருவரில் சடுதியான மரணத்தினை விளைவிக்கும்.
Why Methamphetamine Changes a Person's Physical Appearance - Family First  Intervention

இனி முக்கிய விடயத்திற்கு வருவோம் பொலிஸார் தாக்கியதால் தான் ஒருவர் இறந்தார் என்பதினை எவ்வாறு சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் எவ்வாறு உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கண்டுபிடிப்பார்? உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது உடலில் வெளியில் தெரியும் காயம், மற்றும் அதற்கு கீழே உள்ள உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயம் என்பன பற்றி ஆராயப்படும். சாதாரணமாக மனித உடலில் ஏற்படுத்தப்படும் சகல காயங்களும் மரணத்தினை விளைவிக்காது. மரணத்தினை விளைவிக்கும் காயங்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் மட்டுமே அம்மரணமானது காயத்தினால் ஏற்பட்ட மரணம் எனக்கொள்ளப்படும்.

பொதுவாக போலீசார் கைது செய்வதற்கு முன்னரே போதைப்பொருள் பாவனையாளர் அவற்றினை விழுங்கி விடுவார்கள். மேலும் இவர்கள் இவ்வாறு விழுங்கியதை வெளியில் சொல்லுவதில்லை. இதன்காரணமாக அவர்கள் போலீஸ் நிலையத்தில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவ நேரிடுகின்றது. இவ்வாறான சம்பவங்களின் பொழுது அரசியல்வாதிகள் மற்றும் சட்டதரணிகள் உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையினை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே கருத்து தெரிவிப்பது நன்று. அவர்கள் தமது சுயலாபம் கருதி செயற்படுவார்களாயின் அச்செயற்பாடு ஏற்கனவே சிதைந்து போயுள்ள நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையீனத்தினை மேலும் அதிகரிக்கும்.
முற்றும்

  1. https://wordpress.com/post/tamilforensic.wordpress.com/71
  2. https://wordpress.com/post/tamilforensic.wordpress.com/1381

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.