அன்றும் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஒருபுறம் நோயாளர் விடுதிகளில் இருந்து வந்திருந்த நோயாளர்கள் மறுபுறம் உடற்கூராய்வு பரிசோதனைக்காக உறவினர்களும் போலீசாரும் வந்திருந்தனர். பலரின் மத்தியில் இளவயது பெண்மணி ஒருத்தி இடுப்பில் இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒருத்தியுடனும் மறுகையில் ஓர் துணிப்பையுடனும் நுழைந்து வைத்தியரின் அறைக்கு வருகின்றாள், அங்கு அவள் குறித்த வைத்தியரின் பெயரினைக்குறிப்பிட்டு நீங்கள் தான் அவரா? என கேட்கின்றாள், வைத்தியரும் ஆம் என பதிலளிக்க, அவள் மீண்டும் தன்னை தெரிகின்றதா? என வினவுகின்றாள். வைத்தியரும் சில பெயர்களை கூறி நீங்கள் அவர்தானே எனக்கேட்க, இல்லை என பதிலளிக்கின்றாள். சில வினாடிகளில் வைத்தியர் தலையில் கைவைத்து சொறிய அவள் தனது பெயரினை கூறுகின்றாள். அவளின் பெயரினை கேட்டவுடன் வைத்தியர் ஒருகணம் கதிரையில் எழும்பி இருக்கின்றார்.
ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்னர் அவள் கணவனினால் கொடூரமாக கத்தியினால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறாள். பலமணி நேர சத்திர சிகிச்சையின் உயிர் தப்புகின்றாள். அதன் பின்னர் சட்ட வைத்திய பரிசோதனை, பொலிஸாரின் விசாரணை, நீதிமன்ற விசாரணை என பலவற்றிற்கு முகம் கொடுக்கின்றாள். இவை தவிர கையில் ஏற்பட்ட காயத்திற்கு பிளாஸ்ட்டிக் சத்திர சிகிச்சை பெற கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த அவள் யாரின் துணை இன்றி கொழும்பு செல்லவேண்டிய நிர்ப்பந்தம். அவளின் கல்வித்தகமை ஆண்டு எட்டு வரையுமே. அவளுக்கு மொத்தம் 43 காயங்கள் அதில் 8 காயங்கள் பாரதூரமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான குடும்ப வன்முறைகளினால் மனம் சோர்வுற்றிருந்த அவள் சட்ட வைத்திய அதிகாரி கொடுத்த மனத் தைரியத்தினாலும் பெண்கள் உரிமை அமைப்பு ஒன்று வழங்கிய வழிகாட்டலினாலும் வீறுகொண்டெழுந்து, தனது கணவனுக்கு எதிராக நீதிமன்றில் போராடினாள். சில வருடங்களின் இறுதியில் அவள் அதில் வெற்றியும் பெற்றாள்.


சில மாதங்களில் மாற்றலாகி சென்ற சட்ட வைத்தியருக்கு பின்னர் நடந்த சம்பவங்கள் பற்றி தெரியவில்லை. எனினும் அவள் வைத்திய சாலைக்கு வரும் பொழுது எல்லாம் குறித்த வைத்தியரினை பற்றி வைத்தியசாலை ஊழியரிடம் விசாரிப்பாள். அன்றும் அவ்வாறு விசாரித்த பொழுது குறித்த வைத்தியர் அயலில் உள்ள மாவட்டத்தில் வேலை செய்வது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து அவள் வைத்தியருக்கு பயணத்தடை காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்று நினைத்தோ ஒரு கையில் அரிசிப் பையுடன் வந்திருந்தாள்.
இறுதியாக எல்லாவற்றையும் அமைதியாக அவதானித்து கொண்டிருத்த அலுவலக பெண் ஊழியருக்கு மனம் குறுகுறுத்தது, அவளும் வெட்கத்தினை விட்டு கேட்டு விட்டாள், மடியில் இருந்த குழந்தை யாருடையது என்பது பற்றி. பெண்ணும் வெட்கத்துடன் அது வந்து சேர், வந்து சேர் … என முகம் குனிந்து நாணினாள். அவளது வாழ்வில் மறுமணம் தென்றலாக வீச தொடங்கி விட்டது என்பது மட்டும் சட்ட வைத்திய அதிகாரிக்கு நிச்சயமாக தெரிந்தது. அவர் ஆத்ம திருப்தியுடன் தனது கடமைகளை தொடர்ந்தார்.
முற்றும்
