சிறுமி இஷாலினியின் மரண வாக்கு மூலம் ??

16 வயதான மலையக சிறுமி இஷாலினி தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி, தந்தை, சகோதரன் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் போலீசார் தீ காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியிடம் இருந்து உரிய வாக்குமூலத்தினை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இறக்கும் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இருந்து பெறும் வாக்கு மூலம் “மரண வாக்குமூலம்” (Dying Declaration) என்றழைக்கப்படும். இப்பதிவில் மரண வாக்கு மூலத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கப்படுகின்றது.

1. மரண வாக்கு மூலம் என்றால் என்ன?

மரண வாக்குமூலம் (Dying Declaration) எனப்படுவது சட்டத்திற்குப் புறம்பான செயலின் விளைவால் இறக்கும் நிலையிலுள்ள மனிதரிடமிருந்து அவர் இறப்புக்குக் காரணமான தகவல்களை எழுத்து மூலமாகவோ, வாய்மூலமாகவோ பெறுவது ஆகும்.

2. மரண வாக்குமூலம் வாங்கும் முறை

சட்டத்தின் பிரகாரம் மரணத்தின் விளிம்பில் உள்ள ஒருவன் தனது மரணத்திற்கு இட்டு சென்ற நிகழ்வு பற்றி உண்மையே பேசுவான் எனக்கருதியே சட்டம் செயற்படுகின்றது.

முதலில் வாக்குமூலம் தருபவர் தெளிந்த மனநிலையில் (compos mentis) தான் இருக்கிறார் என மருத்துவர் சான்றளிக்க வேண்டும். எழுதும் நிலையில் இருந்தால் வாக்குமூலம் அளிப்பவரே வாக்குமூலத்தை எழுதலாம். இல்லாத நிலையில் மருத்துவரே எழுதலாம். வாக்குமூலம் தருபவரின் சொந்த வார்த்தைகளில் தான் வாக்குமூலம் எழுதப்பட வேண்டும். வாக்குமூலம் பெறுபவர் எவ்வித மாற்றங்களையும் செய்யக் கூடாது. ஆம் இல்லை என விடைவரும் கேள்விகளையும் (leading questions) கேட்கக் கூடாது. ஒரு விடயம் தெளிவாக இல்லையென்றால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கான கேள்விகளைக் கேட்கலாம். ஆனால் கேட்கப்பட்ட கேள்வியையும் பெறப்பட்ட விடையையும் அப்படியே பதிவு செய்ய வேண்டும். இறுதியாக வாக்குமூலத்தை உரக்கப் படித்துக் காட்டி வாக்குமூலம் அளித்தவரின் பெருவிரல் ரேகை அல்லது கையெழுத்தைப் பெற வேண்டும். மருத்துவரும் இரு சுயாதீன சாட்சிகளும் கையொப்பமிட வேண்டும்.

Law related to Dying Declaration in Criminal matters or Dying Declaration  law

வாக்குமூலத்தில் இது நடந்தது என்ற தகவல்களே இடம் பெற வேண்டும். இது நடந்திருக்கலாம் எனும் ஊகக்கருத்து கூடாது. வாக்களிப்பவருக்கு அப்படி ஓர் ஊகம் இருக்குமாயின் அவ்வூகம் ஏற்படக் காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். 

3. யார் யார் மரண வாக்கு மூலத்தினை பதிவு செய்யலாம்?

யார் வேண்டுமானாலும் மரண வாக்கு மூலத்தினை பதிவு செய்யலாம்  ஆனால் மருத்துவரால் பெறப்படும் மரணவாக்கு மூலத்திற்கு அதிக மதிப்பு உண்டு. அதனை விட நீதிபதியால் பெறப்படும் மரணவாக்கு மூலத்திற்கு அதிகபட்ச மதிப்பு உண்டு.

இலங்கையில் வழமையாக பொலிஸாரினால் அல்லது சிகிச்சை அளிக்கும் வைத்தியரினால் மரண வாக்கு மூலம் பதியப்படும்

4. எவ்வாறான நோயாளிகளில் வழமையாக மரண வாக்கு மூலம் பதியப்படும்?

பெரும்பாலும் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் மரணங்களுக்கு உரிய நோயாளிகளின் மரண வாக்குமூலம் பதியப்படும். உதாரணமாக தீக்காயங்களுக்கு உள்ளாகிய பெண், நஞ்சு அருந்திய பெண்,  கடும் காயங்களுடன்  வீதியில் அநாதரவாக இருந்தவர் போன்றோரிடம் இருந்து மரண வாக்கு மூலம் பெறப்படும். இங்கு மரணம் ஏற்பட்ட சூழ்நிலையினை மரண வாக்கு மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். சிறுமி இசாலினியிடம் இவ்வாறன ஓர் மரண வாக்கு மூலத்தினை போலீசாரோ அல்லது வைத்தியர்களோ பெறவில்லை இதன் காரணமாக சிறுமியின் மரணம் பல சர்ச்சசைகளுக்கு வித்திட்டுள்ளது.

முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.