அதிக தோப்புக்கரணங்கள் உயிரிழப்பினை ஏற்படுத்துமா?

மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் 13 வயது மாணவி பள்ளிக்குத் தாமதமாக வந்ததை காரணமாகக் கொண்டு, பள்ளி நிர்வாகம் அவருக்கு கடுமையான தண்டனையை வழங்கியது. அவர் சுமந்திருந்த புத்தகப் பையை முதுகில் வைத்தபடியே 100 முறை தோப்புக்கரணம் செய்ய பள்ளி கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதியில் கடுமையான கழுத்து மற்றும் முதுகு வலியுடன் வீடு திரும்பிய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் மரணத்தினை தழுவினார்.

இவ்வாறே சில வருடங்களுக்கு முன்னர் யாழ் குடாநாட்டு பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர், மாணவன் ஒருவருக்கு 200 தடவைகள் தோப்புக்கரணம் போடும் படி தண்டனை வழங்கியமை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றது. பல பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இது என்ன தண்டனை, நாம் போடாத தோப்புக்கரணமா என குசுகுசுத்து கொண்டனர். நாம் ஏன் இவ்வாறன அதிக உடலியல் ரீதியான தண்டனைகளை எதிர்க்க வேண்டும் என்பது பற்றி இப்பதிவு ஆராய்கின்றது. பல வருடங்களுக்கு முன்னர் பேராதனை பல்கலை கழக மாணவன் வரப்பிரகாஷ் என்பவர் இவ்வாறான ஓர் காரணத்தினாலேயே இறக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்மில் பலருக்கு அதிக எண்ணிக்கையிலான தோப்புக்கரணங்கள் எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது தெரியாது. முக்கியமாக வழங்கும் நபர்களுக்கு கூட அவ்விடயம் தெரியாது அதன் காரணமாகவே அவர்களும் இறப்புக்கு காரணமாக அமைந்துவிடுகின்றனர்.
இப்பதிவில் அதிக எண்ணிக்கையிலான தோப்புக்கரணங்கள் எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.


அதிக எண்ணிக்கையிலான தோப்புக்கரணங்கள் போடும் பொழுது அவர்களின் வன்கூட்டு தசைகள் அழிவடைய ஆரம்பிக்கும். இச்செயற்பாடு மருத்துவரீதியில் Exertional Rhabdomyolysis (ER) என்றழைக்கப்படும். இதன் பொழுது எமது கை மற்றும் கால் போன்றவற்றில் உள்ள தசைகளில் இருந்து பின்வரும் நச்சு பதார்த்தங்கள் creatine kinase (CK),  myoglobin (Heme/Iron) எமது இரத்த சுற்றோடடத்தினுள் விடுவிக்கப்படும். இவை சிறுநீரகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறுதியாக இறப்பினை ஏற்படுத்துகின்றது. இப்பதார்த்தங்கள் ஏற்கனவே எமது உடலில் இருந்தாலும் அவை கலங்களினுள் சேமிக்கப்பட்டிருப்பதினால் அது சிறுநீரகத்திற்கு நச்சு தன்மையினை உண்டு பண்ணுவதில்லை.
சாதாரணமாக தீவிர உடல் வேலை செய்யும் பொழுது எமது உடலில் சேதமடையும் தசைநார்கள் புதுப்பிக்க குறித்த கால அவகாசம் தேவை. ஆனால் மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான தோப்புக்கரணங்களை தொடர்ச்சியாக போடும் பொழுது அவர்களுக்கு தசை அழிவடைந்து சிறுநீரக செயலிழப்பு எற்பட்டு இறப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

Understanding kidney failure caused by complications of muscle injuries -  Keio Research Highlights

மேலும் விஞ்ஞான ரீதியில் குறித்த மாணவருக்கு இவ்வளவு எண்ணிக்கையிலான தோப்பு கரணங்கள் தான் பாதுகாப்பானது அதனை மீறி அதிகரித்த எண்ணிக்கையில் செய்யும் பொழுதே சிறுநீரக பாதிப்பு வரும் என்று எவ்விதமான கணிப்பும் இல்லை.
இலங்கையில், கல்வி அமைச்சின் 2005/17 இலக்கமுடைய சுற்றறிக்கை மூலமும் இலங்கை தண்டனை சட்ட கோவையின் பிரகாரமும் (Penal Code Amendment Act No. 22 of 1995) சிறுவர் சாசனம் (Article 71 of the Children and Young Persons Ordinance) மூலமும் உடல் ரீதியான தண்டனைகளை வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவேதான் ஆசிரியர்கள் வேறுவழிகள் மூலம் மாணவரினை நல்வழிப்படுத்த முயல வேண்டும்.

முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.