அண்மைக்காலங்களில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சையின் பின்னர் மரணம் அடைந்தவர்களின் மரணத்திற்கான காரணங்கள் மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலைகள் ஆகியன பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.
எம்மில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சையின் பின்னர் மரணம் அடைபவர்கள் குறித்த நோயின் காரணமாகவோ அல்லது விபத்தின் காரணமாகவோ இறத்ததாகவே நினைப்பார்கள். பெரும்பாலானவர்கள் மருத்துவ தவறின் காரணமாக ஒருவர் இறக்கலாம் என்பதினை மறந்து விடுகின்றனர். சத்திர சிகிச்சைக்கு பின்னர் ஒருவர் இறப்பார் எனில் அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றினை பார்ப்போம்
1. ஒருவருக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலை சத்திர சிகிச்சையின் பின்னர் மோசமடைதல் காரணமாக இறப்பு ஏற்படலாம் . உதாரணமாக மாரடைப்பு வந்த நோயாளி ஒருவருக்கு சத்திர சிகிச்சையின் பிற்பாடு மாரடைப்பு வந்து இறப்பு ஏற்படலாம்.
2. வைத்தியசாலையில் தங்கி இருக்கும் பொழுது டெங்கு, கொரோனா போன்ற புதிதாக தொற்று நோய்கள் ஏற்பட்டு சத்திர சிகிச்சையின் பிற்பாடு இறப்பு ஏற்படலாம்.
3. சத்திர சிகிச்சையின் பொழுது ஏற்படும் தவிர்க்க முடியாத விளைவுகள் காரணமாக இறப்பு ஏற்படலாம். உதாரணமாக சில சத்திர சிகிச்சைகளின் பொழுது ஏற்படும் அதீத குருதி பெருக்கு ஏற்பட்டு சத்திர சிகிச்சையின் பிற்பாடு இறப்பு ஏற்படலாம். இவ்வாறு உயிர் ஆபத்தினை ஏற்படுத்தும் சத்திர சிகிச்சைகள் பொதுவாக அரசாங்க வைத்திய சாலைகளில் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் தனியார் வைத்திய சாலைகளில் இவ்வாறான சத்திர சிகிச்சைகள் வருமானம் கருதி மேற்கொள்ளப்படுகின்றது என்பது பலருக்கு தெரிவதில்லை.
4. சத்திர சிகிச்சையின் பொழுது ஏற்படும் மருத்துவ தவறுகள் காரணமாக சத்திர சிகிச்சையின் பிற்பாடு இறப்பு ஏற்படலாம்.
5. சத்திர சிகிச்சையின் பொழுது வழங்கப்படும் உணர்வு அழிவியல் சிகிச்சை காரணமாகவும் சத்திர சிகிச்சையின் பிற்பாடு இறப்பு ஏற்படலாம். இதன் காரணமாகவே குறித்த நோயாளி குறித்த வகையான உணர்வு அழிவியல் சிகிச்சை முறைக்கு தகுதி வாய்ந்தவரா என சத்திர சிகிச்சைக்கு முன்னர் வைத்திய நிபுணர்கள் ஆராய்வார்கள்.
6. சத்திர சிகிச்சையின் பின்னர் குறித்த நோயாளி நீண்ட காலம் படுத்த படுக்கையாகவும் அறிவற்ற நிலையிலும், செயற்கை சுவாச உதவியுடனும் காணப்படும் பொழுது ஏற்படும் சிக்கல் நிலைமைகள் (Complications) காரணமாக இறப்பு ஏற்படலாம்.
7. காயங்களுக்கு உள்ளாகி சத்திர சிகிச்சை பெற்ற நபர் அந்த காயங்களின் விளைவு காரணமாகவும் இறக்க நேரிடலாம்.
8. சத்திர சிகிச்சையின் பொழுது வழக்கப்படும் மருத்துகள் ஒவ்வாமையின் ஏற்படுத்துவத்தினாலும் சத்திர சிகிச்சையின் பொழுது அல்லது அதன் பின்னர் இறப்பு ஏற்படலாம்.

எனவேதான் சத்திர சிகிச்சைக்கு பின்னரான இறப்புக்களில் ஏன் இவ்வாறான இறப்பு ஏற்பட்டது என்பது குறித்து ஆராயவேண்டிய தேவை உள்ளது. இதனை விடுத்து சத்திர சிகிச்சைக்கு பின்னரான மரணங்கள் எல்லாம் இயற்கையான நோய் நிலைகளினால் அல்லது காயங்களினால் ஏற்படும் என்று எண்ணுவது தவறு. பல சந்தர்ப்பங்களில் வைத்தியர்கள் இவ்வாறு சத்திர சிகிச்சைக்கு பின்னராக ஏற்படும் மரணங்களை ஆராய விரும்புவதில்லை. அதன் காரணமாக “இவரின் மரணத்தில் சந்தேகம் இல்லை” என உறவினரிடம் கையெழுத்து வாங்கி இறந்தவரின் உடலை விடுவிப்பார்கள். இது முற்றிலும் ஓர் தவறான செயற்பாடு ஆகும். மேலும் சத்திர சிகிச்சைக்கு பின்னரான மரணங்கள் சத்திர சிகிச்சையின் பொழுது அல்லது பின்னரான ஒரு மாதத்தில் கூட நிகழலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கையில் இவ்வாறு மருத்துவ தவறு காரணமாக சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்படும் இறப்புக்கள் குறித்து தெளிவான எந்தவொரு புள்ளி விபரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முற்றும்
