மதுபானம் + கண் = விபத்து

உலகளாவிய ரீதியில் நடைபெறும் வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபான பாவனையின் காரணமாகவே நடைபெறுகின்றது என்றால் மிகையல்ல. ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு 52 நிமிடங்களுக்கும் ஒரு நபர் மதுபானத்தினால் ஏற்படும் வீதி விபத்தினால் இறக்கின்றனர். மதுபானம் ஆனது வெவ்வேறு செறிவுகளில் மனித உடலில் வெவ்வேறு உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாகவே பல்வேறு நாடுகளில் உள்ள சட்ட திட்டங்கள் வீதியில் வாகனத்தினை செலுத்துவதற்கு மனித உடலில் உள்ள ஆகக் கூடிய மதுபான (எதைல் ஆல்கஹால்) அளவினை வெவ்வேறு அளவில் வரையறுத்து உள்ளன. சில நாடுகள் வீதியில் வாகனத்தினை செலுத்துவதற்கு மனித உடலில் இருக்க வேண்டிய மதுபான அளவினை பூச்சியமாகவே வைத்துள்ளன. இலங்கையில் ஒருவர் வாகனத்தினை வீதியில் செலுத்தும் பொழுது அவரது உடலில் இருக்க வேண்டிய ஆகக் கூடிய மதுபானத்தின் அளவு 80mg/100ml ஆகும். அதாவது மதுபானத்தின் அளவு 80mg/100ml இணை விட கூடுதலாக இருந்தால் அவர் வீதி போக்குவரத்து சட்ட திட்டங்களின் பிரகாரம் அவர் குற்றவாளி ஆகின்றார். விபத்து கட்டாயம் நடைபெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கையில் நடைபெறும் வீதி விபத்துக்களுக்கு பெரும்பாலானவை மதுபான பாவனையினால் ஏற்படுகின்றது என்றால் அது மிகையல்ல. ஆனால் எம்மில் பலருக்கு எவ்வாறு மதுபானம் ஆனது எமது கண்ணினை அதாவது பார்வையினை பாதித்து வீதி விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றது என்பது பற்றி தெரிவதில்லை. இப்பதிவானது மதுபானம் அருந்திய ஒருவரின் கண்ணில்  மதுபானம் ஆனது எவ்வாறான விளைவுகளை உண்டுபண்ணி விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றது என்பது பற்றி விளக்குகின்றது 

ஒருவர் மதுபானத்தினை அருந்தி ஒருசில மணித்தியாலங்களில் பின்வரும் மாற்றங்கள் கண்களில் ஏற்படும்

1. மதுபானம் ஆனது எமது கண்ணினை தாங்கி கண்ணின் அசைவுகளுக்கு உதவும் தசைகளை பலவீனப்படுத்தி  ஒருங்கமைந்த அசைவுகளை பாதிக்கும்      இதன் காரணமாகபொருட்கள் தெளிவற்றதாகவும் சில சந்தர்ப்பங்களில் இரட்டை பொருட்களாவும் (double vision) தென்படும். சில சந்தர்ப்பங்களில் வீதியின் கரையோரங்களில் இருக்கும் அல்லது பயணிக்கும் வாகனங்கள் தெரிவதில்லை. இவ்வாறான நிலை tunnel vision என்றழைக்கப்படும். இது ஓர் ஆபத்தான நிலை ஆகும் இதனால் விபத்துக்கள் நிச்சயம் ஏற்படும். மேலும் மதுபான பாவனையின் பின்னர் கண் ஆனது கட்டுப்பாடு இன்றி அசையும் நிலையும் (Nystagmus) ஏற்படலாம் இதன் காரணமாக விபத்து ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும்.  

2. மேலும் மதுபானம் ஆனது கண்ணில் இருந்து மூளைக்கு கணத்தாக்கசெய்தி  கடத்தப்படும் நேரத்தினை அதிகரிக்கும் இதன்காரணமாக மதுபானம் அருந்திய சாரதி உடனடியாக (ஒரு சில மில்லி செக்கன்களில்) திறம்பட செயற்பட மாட்டார்.

3. மேலும் மதுபானம் அருந்திய சாரதியின் கருவிழியானது (Iris ) உடனடியாக சுருங்கி  தொழிற்பட மாட்டாது இதன் காரணமாக மதுபானம் அருந்திய சாரதி அதிக வெளிச்சத்திற்கு உட்படும்  அவரின் கருவிழியானது உடனடியாக தொழில் படாது இதன்காரணமாக எதிரே வரும் பொருளினை தெளிவாக பார்க்க முடியாத நிலைமை (accommodation reflex) ஏற்படும். இதன் காரணமாக விபத்து ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும்.

4. பார்வை திறன் குறைவடைவதன் காரணமாகவும் (decreased visual acuity) மதுபானம் எமது மூளையில் சோர்வினை உண்டு பண்ணுவதாலும் வாகன சாரதியினால் மிக திறம்பட செயற்பட முடியாது. இதன் காரணமாக விபத்துக்கள் அதிகரிக்கும்.

5. சிலருக்கு அதிகளவு மதுபானம் அருந்திய பின்னர் அவர்களின் கண் மடலானது துடிக்கும் (myokymia) இதன் காரணமாக பார்வை சடுதியாக மறைக்கப்படுவதினால் விபத்து ஏற்படும்.

6. மேலும் மதுபானம் ஆனது கண்ணின் கண்ணீர் சுரப்பினை குறைக்கும் இதன் காரணமாக மதுபான பாவனையின் பின்னர் கண் இலகுவில் வரட்சியடையும் இதனால் சாரதியானவர் இலகுவில் கண்யர்ந்து விடுவார்.   

Alcoholic Eyes

இது தவிர நீண்ட காலமாக மதுபானத்திற்கு அடிமையான ஒருவருக்கு விழித்திரையில் மற்றும் கண்ணின் நரம்பு (Optic neuropathy ) பகுதிகளில் மதுபானமானது பல்வேறு மாற்றங்களை உண்டு பண்ணி பார்வையினை குறைக்கும். மேலும் நீண்ட காலமாக குடிப்பவர் ஒருவருக்கு விட்டமின் B1 மற்றும் விட்டமின் A  போன்ற குறைபாடுகள் ஏற்படும் இதன் காரணமாகவும் அவர்களின் பார்வை குறைவடையலாம்.

முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.