எமது மனித வாழ்க்கையில் பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் வேதனையினை அதாவது நோவினை அனுபவித்து இருக்கின்றோம். சிறுவயதில் விளையாடி தவறுதலாக வீழ்ந்து காயப்படுவதில் ஏற்பட ஆரம்பிக்கும் நோ ஆனது மரணம் வரை பல்வேறுபட்ட வழிகளில் ஏற்படுகின்றது. குறிப்பாக நாற்பது வயதின் பின்னர் எமது எலும்புத்தொகுதியில் உள்ள மூட்டுக்கள் அதிகம் தேய்மானம் அடைவதன் காரணமாக அவற்றில் பொதுவாக நோ ஏற்பட ஆரம்பிக்கும். முக்கியமாக பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னர் இவ்வாறு அதிகரித்த அளவில் மூட்டுக்களில் நோ ஏற்படும்.
சிலர் அதிகளவிலான நோவினையும் தாங்கும் திறமை உடையவராக இருப்பர் மறுபுறத்தில் பலர் சிறிதளவிலான நோவினையும் தாங்கும் சக்தி அற்றிருப்பர். இவ்வாறு பல்வேறு காரணங்களினால் ஏற்படும் நோவு காரணமாக பலரின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் பாதிக்கப்படுவதினை நாம் அன்றாடம் காண்கின்றோம்.
இவ்வாறு அதிகரித்த நோ காரணமாக ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். இளவயதில் செய்த சில காரியங்களை செய்ய முடியாமல் இருக்கும். மேலும் சிலர் படுத்த படுக்கையிலேயே வாழ்க்கையை கடத்த வேண்டி இருக்கும். இவ்வாறு பல்வேறு காரணங்களினால் ஏற்படும் நோ ஆனது பலரின் வாழ்க்கையினை புரட்டி போட்டிருக்கும்.

சில சந்தர்பங்களில் நோவின் வேதனை தாங்க முடியாத நிலைக்கு வரும் பொழுது சிலர் தற்கொலை கூட செய்து கொள்ள தயங்க மாட்டார்கள். நோவு என்பது மனிதனின் மனதிற்கு ஏற்படும் ஓர் சந்தோசம் அற்ற உணர்ச்சி ஆகும். இதன்காரணமாக அவ் உணர்சியினை நீக்க பல்வேறுபட்ட சிகிச்சை முறைகளை மேற்கொள்வார் அதற்கு அவர்கள் அதிகளவு பணமும் செலவிட தயங்க மாட்டார்கள்.பொதுவாக எம்மில் பலர் நோவிற்கு தாங்களே சுய வைத்தியம் செய்துகொள்வார்கள். இவ்வாறு சுய வைத்தியம் செய்து கொள்வதினால் ஏற்படும் சில பிரச்சனைகளை இப்பதிவு விளக்குகின்றது
1. எம்மில் பலர் வைத்தியர் ஒருவரிடம் சிகிசசை பெறும் பொழுது தாம் ஏற்கனவே வலிநிவாரணி (pain killers) மருந்துகளை பாவிப்பதினை தெரிவிக்க மாடடார்கள். இதன் காரணமாக மீண்டும் மீண்டும் வைத்தியர்கள் ஒரே வகையான வலிநிவாரணி மருந்துகளை பரிந்துரை செய்வர், இறுதியில் வலிநிவாரணி மருந்துகளை பாவிக்கும் நோயாளியே பாதிப்புக்களாவர்.
2. நோவினை தாங்குவதில் எமது மனோ திடகாத்திரமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன் காரணமாகவே பலர் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த விபத்து அல்லது வேறு ஏதாவது ஓர் காயம் அடைந்த சம்பவத்துக்கு இன்றும் வலி நிவாரணிகளை பாவித்துக் கொண்டிருக்கின்றோம்.
3. எம்மில் பலர் உடம்பில் நோவு என்றவுடன் தனியார் மருந்தகங்களில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்கப்படும் புருவன் (brufen) போன்ற NSAID வகையினை சேர்ந்த வலி நிவாரணி மருந்துகளை வைத்தியரின் எவ்விதமான அறிவுரையும் இன்றி பல நாட்களுக்கு பாவிக்கின்றோம். இதன் காரணமாக இறுதியில் பாதிப்படைவது நாமே.
4. புருவன் (brufen) போன்ற NSAID மருந்துகளை கட்டுப்பாடு இன்றி பாவிப்பவர்கள் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயிற்கு உள்ளாகும் (chronic kidney disease) சந்தர்ப்பம் அதிகமாகும். மேலும் எமது பிரதேசத்தில் நிலவும் அதிக வெப்பநிலை, நீரில் அதிகம் காணப்படும் கல்சியம் மற்றும் கிருமிநாசினிகள் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பினை துரிதப்படுத்த வல்லன.
5. எம்மில் பலரும் நினைக்கின்றனர் நோவு என்றால் அது எமது தசை, நரம்பு மற்றும் எலும்பு போன்றவற்றில் இருந்து தான் வருகின்றது என்று. அண்மையில் நாற்பது வயதுடைய ஒருவர் தனக்கு ஏற்பட்ட நெஞ்சு நோவினை பல தைலங்கள் பூசி சுய வைத்தியம் செய்தார். பலனளிக்காத நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படடார். அப்பொழுது அவருக்கு ஈசிஜி பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு மாரடைப்பு வந்திருந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் சில மணித்தியாலங்களில் அவர் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவியிருந்தார். எனவே இவ்வாறு நெஞ்சு நோ, அதிக தலையிடி போன்றவற்றுக்கு சுய வைத்தியம் செய்வது ஆபத்தில் முடியும், ஏனெனில் இந்த குணம் குறிகள் ஆபத்தான நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
எனவே எமக்கு நோவு ஏற்படும் சந்தர்ப்பங்களில் உரிய வைத்திய ஆலோசனை பெற்று உரிய அளவில் வலி நிவாரணிகளை பாவிப்போம். அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இலங்கையின் ஒரு சில வைத்திய சாலைகளிலும் இவ்வாறு நோவிற்கு என தனியான சிகிச்சை பிரிவுகள் மற்றும் கிளினிக்குகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் தற்போதைய நவீன காலத்தில் நோவிற்கு மருந்து மாத்திரை தவிர பல்வேறு பட்ட சிகிச்சை முறைகள் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முற்றும்
