எனக்கொரு girl/boy friend வேண்டும்

அன்று விடுமுறையாகயாகவிருந்தும் பாடசாலை சிறுமி ஒருத்தியை அவளது பெற்றோர் சகிதம் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தனர். அந்த மாணவி இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்த பாடசாலை ஒன்றில் தரம் பத்தில் கல்வி கற்று வருகின்றாள்.

அவள் தினமும் பாடசாலைக்கு உந்துருளியிலேயே செல்லும் வழக்கமுடையவள். அவளது சிநேகிதிகளும் அவ்வாறே செல்வார்கள். அவளது வகுப்பில் எல்லோருமே பதின்ம வயதுடையவர்கள் என்பதினால் என்றுமே வகுப்பு கலகலப்பாகவும் கிளுகிளுப்பாகவும் இருக்கும். அவர்களது பாடசாலைக்கு முன்பாக உள்ள ஓட்டோ தரிப்பிடத்திலேயே குறித்த இளைஞனும் தனது முச்சக்கர வண்டியினை நிறுத்திவைத்து சேவையில் ஈடுபட்டிருந்தான். அவனுக்கு 26 வயது ஆகியிருந்ததுடன் அவன் ஒரு பிள்ளையின் தகப்பனும் கூட. அத்துடன் அவன் போதைக்கு வேறு  அடிமையாகி இருந்தான்.

ஏறத்தாழ ஒரு வருடங்களுக்கு முன்னர் அவளது வகுப்பில் படிக்கும் அவளது ஒரு நண்பியினை பார்த்து வீதியோரத்தில் அவன் அடிக்கடி சிரிப்பான், அவளது நண்பியும் மெலிதாக சிரிப்பாள். ஓர் குறித்த நாளின் பின்னர் அவளின் நண்பி பாடசாலைக்கு வரவில்லை. அவள் விசாரித்து பார்த்ததில் குறித்த நண்பி அந்த ஓட்டோ சாரதியினை திருமணம் செய்துவிட்டதாக கேள்விப்பட்டாள். ஆனால் ஒருசில மாதங்களின் பின்னர் குறித்த ஓட்டோ சாரதி மீண்டும் அதே இடத்தில் வேலைக்கு வந்து நின்றான். ஆனால் அவளது நண்பி மட்டும் மீண்டும் பாடசாலைக்கு வரவில்லை, இவள் பல முறை தொடர்பு கொண்டும் பதில் ஏதும்மில்லை. இம்முறையும். அவன் குறித்த மாணவியின் வகுப்பிற்கு ஒருதரம் குறைவாக படிக்கும் மாணவி ஒருத்தியினை நோக்கி அவன் சிரிப்பான் சிலசில கதைகள் சொல்வான். காலப்போக்கில் அவள் அறிந்து கொண்டால் குறித்த மாணவி அந்த ஓட்டோ சாரதியை காதலிப்பதாக, முன்பு நடந்தவாறே இந்த மாணவியும் திடீர் என்று பாடசாலை வருவதினை நிறுத்தி விட்டாள், விசாரித்த பொழுது குறித்த மாணவி அந்த ஓட்டோ சாரதியை திருமணம் செய்து கொண்டதாக. இவ்வாறே மேலும் சில மாதங்கள் உருண்டோடின திடீர் என குறித்த ஓட்டோ சாரதி மீண்டும் ஓர்நாள் தென்பட்டான்.

Image titled Know That Your Boyfriend Really Loves You Step 1

இந்த முறை குறித்த ஓட்டோ சாரதி இவளை பார்த்து சிரித்தான் எதோ கதைக்க முற்பட்டான், இவள் ஏனைய இரு மாணவிகளின் கதையினை அறிந்திருந்தவள் என்பதினால் முதலில் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனினும் நாட்கள் செல்ல செல்ல அவன் அவளினை பின்தொடர்வதுவும் கதைக்க முற்படுவதும் அதிகமாகின. அவளின் வகுப்பு தோழிகளும் குறித்த ஓட்டோ சாரதியை காதலிக்கும் படி வற்புறுத்தினார்கள். மேலும் அவளது வகுப்பு தோழிகள் ஒவ்வொருவரும் ஓர் ஆண் நண்பனை அல்லது காதலனை வைத்திருக்கும் பொழுது தான் மட்டும் எதோ தனியாக இருப்பது பிழையாக அவளுக்கு தென்பட்டது. மேலும் சினிமா படங்களும் வீட்டில் பார்க்கும் மெகா சீரியல்களும் தன்னை போன்ற பாடசாலை மாணவர்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதினை தப்பாக பிழையான கண்ணோட்டத்தில் காட்டவில்லையே என்ற எண்ணம் அவளின் மனதில் படிப்படியாக வளர்ந்தது  . ஓர் நாள் பாடசாலை விட்டு வெளியேறி ஆள் நடமாட்டம் குறைந்த ஒழுங்கையில் செல்லும்  பொழுது குறித்த ஓட்டோ சாரதி, அவளினை வழிமறித்தான். ஒருசில கணங்களில் கையில் வைத்திருந்த பிளேட்டினால் தனது கழுத்தினை சரசரவென அறுத்து கொண்டான். பயத்தில் இவள் உறைந்து நிற்க அவன் கூறினான் நீ காதலிக்காவிட்டால் நான் தற்கொலை செய்வேன் என்று, இவளும் குறித்த ஓட்டோ சாரதி தற்கொலை செய்துகொண்டால் தன்னை போலீசார் விசாரிப்பார்கள் என்ற பயத்தில் உடனே சம்மதித்து விட்டாள். ஒரு சில வாரங்களின் பின்னர் குறித்த ஓட்டோ சாரதியுடன் அவளினை கூட்டி சென்று திருமணம் செய்துகொண்டான். அவளுக்கு 16 வயதிற்கு குறைவு என்பதினாலும் பெற்றோர் தேடியதினாலும் அவளை பல கிலோமீட்டர் தள்ளி உள்ள ஓர் கிராமத்திலேயே குறித்த ஓட்டோ சாரதி தங்க வைத்திருந்தான். அந்த வாழ்க்கை ஒரு சில நாட்களே இனித்தது அவளுக்கு.  மாலை நேரத்தில் வேலை முடிந்து நிறை போதையில் வந்து நிற்பான் அவன் அத்துடன் பெரும்பாலான நேரத்தில் கைகலப்பு நடக்கும். இது தவிர இரவு நேரத்தில் அதீத செக்ஸ் வெறி. இவற்றினால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவள் ஓர் நாள் தானும் தனது மணிக்கட்டினை  பிளேட்டினால் அறுத்து கொண்டாள் அதனை தொடர்ந்து வைத்திய சாலையில் அனுமதிக்கபடுகின்றாள். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பொழுது அவள் கர்ப்பிணி என வைத்தியர்கள் கண்டறிகின்றனர். இனியும் அவளின் எதிர்காலம் பற்றி கூற வேண்டுமா?

முற்றும்

      

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.