அண்மையில் தென்னிலங்கையில் வைத்தியர் ஒருவர் அரசியல்வாதியான நோயாளி ஒருவரினை பார்வை இட மறுத்த சம்பவம் பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்து இருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பலரும் குறித்த வைத்தியர் மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். இப்பதிவில் வைத்தியர் – நோயாளர் உறவு முறை அதாவது தொழில்முறையிலான உறவுமுறை எப்பொழுது வைத்தியரினால் நிராகரிக்கப்படலாம் என விளக்குகின்றது.
ஆங்கில வைத்திய முறையினை பின்பற்றும் வைத்தியர்கள் ஒவ்வொருத்தரும் கடமை ஏற்கும் பொழுது ஹிப்போகிரடீஸ் உறுதிமொழியினை ஏற்றே பதவி ஏற்கின்றனர்.ஹிப்போகிரடீஸ் சத்திய பிரமாணம்/ உறுதிமொழியின் பிரகாரம் ஓர் வைத்தியர் இனம், மதம், மொழி, நிறம் மற்றும் அரசியல் வேறுபாடுகளை களைந்தே நோயாளிகளுக்கு சேவை ஆற்ற வேண்டும் என வலியுறுத்த படுகின்றது. இந்நிலையில் வைத்தியர் ஒருவரை நாடி நோயாளி ஒருவர் செல்லும் பொழுது வைத்தியர் எவ்வாறு அந்த நோயாளியினை பார்வையிடாது/ சிகிச்சை அளிக்காது மறுக்கலாம் என்பதே பலரின் கேள்வியாகும்.
ஹிப்போகிரடீஸ் சத்திய பிரமாணத்திற்கு அப்பாலும் மருத்துவ ஒழுக்கவியல் கோர்வையினால் மருத்துவர்கள் கட்டுப்பட்டுள்ளனர் என்பதே உண்மையாகும். இங்கு மருத்துவ அவசர நிலையின் பொழுது அரச வைத்திய சாலையில் அல்லது தனியார் வைத்திய சாலையில் மருத்துவர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது.
மருத்துவ ரீதியாக அவசரமற்ற நோய் நிலையின் பொழுதும் அரச வைத்திய சாலை ஒன்றில் கடமை நேரத்தில் மருத்துவர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆனால் தனியார் வைத்திய சாலையில் மருத்துவ ரீதியாக அவசரமற்ற நோய் நிலையின் பொழுது வைத்தியர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கலாம் அதாவது வைத்தியர் நோயாளர் உறவு முறையினை ஆரம்பிக்க மறுப்பு தெரிவிக்கலாம் . அதில் மருத்துவ ஒழுக்கவியல் ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ எவ்விதமான தவறுகளும் இல்லை.

வைத்தியர் ஒருவர் பொதுமகன் ஒருவரை நோயாளியென கருதி அவரினை பார்வையிட்டு சிகிச்சை அளிக்க தொடங்கும் பொழுதுதான் வைத்தியர் – நோயாளர் என்ற தொழில் ரீதியான உறவுமுறை ஆரம்பிக்கின்றது. இவ்வாறான தொழில் முறை உறவினை நிராகரிக்கவும் வைத்தியர்களுக்கு உரிமை உண்டு என்பதே உண்மை. மேலும் குறித்த சம்பவத்தில் அரசியல்வாதியானவர் ஏற்கனவே குறித்த வைத்தியரின் நோயாளியாக இருப்பாரானால், அந்த நோயாளி வேறு தகுதி வாய்ந்த வைத்தியரினை தேடி சிகிச்சை பெறும் வரை குறித்த நோயாளிக்கு சிகிச்சை வழங்க வேண்டிய கடப்பாடு குறித்த வைத்தியருக்கு உண்டு. அதாவது அக்குறித்த வைத்தியர் வைத்தியர் – நோயாளி உறவினை உடனடியாக முறிக்க முடியாது. உதாரணமாக வைத்தியர் ஒருவரிடம் வரும் நோயாளி ஒருவர் குறித்த வைத்தியரின் நிபுணத்துவ துறைக்கு அப்பாற்படடவராக இருந்தால் வைத்தியர் குறித்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் நோயாளியினை நிராகரிக்கலாம். இவ்வாறு வைத்தியர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு.
தொடரும்..
