அண்மைக்காலத்தில் யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் பாவனை காரணமாக சடுதியாக திடீர்ரென மரணம் அடைந்திருக்கின்றனர். அதாவது மூன்று மாத காலப்பகுதியில் ஏறத்தாழ 10 மரணங்கள். எம்மில் பலருக்கு ஏன் இவ்வாறான சடுதியான திடீர் மரணங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி போதிய விளக்கமின்மை இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இப்பதிவு அமைகின்றது.

இவ்வாறான திடீர் மரணங்கள் ஊசியின் ஊடாக போதைப் பொருளினை உட் செலுத்தும் பொழுதே பெரும்பாலும் ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் மரணங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
1. போதைப்பொருள் பாவனையின் நேரடி விளைவினால் ஏற்படும் மரணங்கள்
போதைக்கு அடிமையானவர் ஒருவர் நாளாந்தம் உள்ளெடும் போதைப்பொருளின் அளவினை அதிகரித்த வண்ணமே இருப்பார். ஓர் நிலையில் அதிகரித்த அளவானது பாவனையாளரில் சடுதியான நஞ்சாதலை (Acute toxicity) ஏற்படுத்தி இறப்பு ஏற்படும்.
மேலும் தூய போதைப்பொருளினுள் வியாபார நோக்கம் கருதி பல்வேறுபட்டபொருட்களை கலந்து விற்பனையாளர்கள் கலப்படம் செய்வார்கள். இவ்வாறு சேர்க்கப்படும் பொருட்கள் பாவனையாளரில் கடுமையான ஒவ்வாமையினை (anaphylactic shock) ஏற்படுத்தி சடுதியான இறப்பினை ஏற்படுத்தும். கெரோயின் போன்ற போதைப்பொருட்கள் சடுதியான இருதய மற்றும் சுவாச செயற்பாட்டு (Sudden cardio respiratory arrest) நிறுத்தத்தினை ஏற்படுத்தும். இவ்வாறே கொக்கெயின் போன்ற போதைப்பொருட்கள் அதிகரித்த குருதி அழுத்தத்தினை ஏற்படுத்தி மூளையில் இரத்த கசிவினை ஏற்படுத்தி சடுதியான மரணத்தினை ஏற்படுத்தும். இது தவிர கொக்கெய்ன் மற்றும் ஐஸ் என்ற அம்பிட்டமைன் வகை போதை பொருட்கள் இருதய தசையில் சடுதியான இறப்பினை (cardiac necrosis) ஏற்படுத்தும்.
2. போதைப்பொருள் பாவனையின் மறைமுக விளைவினால் ஏற்படும் மரணங்கள்
இங்கு மரணங்கள் போதைப்பொருள் பாவனையின் மறைமுக விளைவினால் அதாவது நேரடி விளைவினால் அல்லாது ஏற்படும் மரணங்களை குறிக்கும். அதிக போதையில் இருக்கும் பொழுது எடுக்கும் வாந்தி நேரடியாக சுவாச குழாயினுள் சென்று மூச்சு திணறலை ஏற்படுத்தி சடுதியான இறப்பினை ஏற்படுத்தும். மேலும் அதிக போதையில் தலை கீழாகவும் கால் மேலாகவும் தூங்கும் பொழுதும் மூச்சு திணறலை (positional asphyxia) ஏற்படுத்தி சடுதியான இறப்பினை ஏற்படுத்தும். மேலும் அதிக போதையில் நீரில் மூழ்குதல், விபத்துக்களை சந்தித்தல் , உயரமான கட்டிடங்கள் மற்றும் மரங்களில் இருந்து விழுதல் போன்றவற்றினால் தீடீர் மரணங்கள் ஏற்படும்.
3. ஊசி மூலமான போதைப்பொருள் பாவனையின் பொழுது கிருமித்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்கள்
இங்கு ஊசி மூலம் போதைப்பொருளினை செலுத்தும் பொழுது ஹெப்படைட்டிஸ், HIV போன்ற வைரசுக்கள் தொற்றி நாளடைவில் அந்த நோய்கள் காரணமாக இறப்பு ஏற்படும். இது தவிர ஊசி செலுத்தும் இடங்களில் கிருமித்தொற்று ஏற்பட்டு அது இரத்தம் மூலம் உடல் முழுவதும் பரவுவதினாலும் இருதயத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துவத்தினாலும் இறப்பு ஏற்படும். மேலும் தொடர்ச்சியான ஊசி மூலமான போதைப்பொருள் பாவனை காரணமாக எமது நுரையீரலில் குருதியின் அழுத்தம் அதிகரிக்கும் மேலும் இருதய தசையின் செயற்பாடு குறைவடையும் இதன் காரணமாகவும் இறப்பு ஏற்படும்.
மேற்குறிப்பிட்டவை யாவும் முக்கியமான ஒரு சில காரணங்களே ஆகும். மேற்குறித்தவை தவிர பல்வேறுபட்ட காரணங்களினால் போதைப்பொருளினால் இறப்பு ஏற்படலாம்.
