இந்தமாதம் பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள் பாவனையால் மாதாந்தம் 2 முதல் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.இது மிகவும் உயர்ந்த மரண வீதம் ஆகும். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 20 தொடக்கம் 25 மற்றும் 40 தொடக்கம் 45 வயதுகளை உடையவர்கள்.இந்த விடயத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர கூறியுள்ளார் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு இறந்தவர்கள் மருத்துவ ஆலோசனை இன்றி பாலுணர்வை ஏற்படுத்தும் மாத்திரைகளை உட்கொண்டவர்கள். மருத்துவ ஆலோசனையின்றி பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை உபயோகிப்பதும், தரமற்ற மருந்துகளை உட்கொள்வதுமே இவ்வாறான இறப்புகளுக்கு முக்கிய காரணமாக காணப்படுகிறது என்று மேலும் கருத்து தெரிவித்தார்.
“வயாகரா” என்ற பெயரில் முதன் முதல் சந்தைக்கு வந்த Sildenafil citrate என்ற மருந்தே முதன் முதலாகவும் ஆண்களில் விறைப்பு குறைபாட்டினை மருத்துவ ரீதியில் அனுமதிக்கப்பட்டது. இன்று இந்த மருந்தானது பல்வேறு பட்ட வர்த்தக நாமங்களில் கிடைக்கபெறுகின்றது. அந்திசாயும் பொழுது மருந்தகங்களுக்கு வரும் நடுத்தர வயதுடைய ஆண்கள் பலரும் இவ்வாறான மாத்திரைகளை வாங்குவதினை நாம் அவதானிக்கலாம்.

Sildenafil citrate என்ற பாலுணர்வை தூண்டும் மாத்திரையானது எவ்வாறு இறப்பினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.
முதலில் ஏன் அதிகளவிலான ஆண்கள் இந்த பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை பாவிக்கின்றார்கள் என்றால், 40 வயதிற்கு மேற்பட்ட 30% ஆண்கள் இந்த விறைப்பு குறைபாட்டினை கொண்டிருக்கின்றனர். எனவே தான் குறித்த ஆண்கள் இந்த பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை பாவிக்கின்றனர்.
Sildenafil citrate மாத்திரையானது ஏனைய வகை மாத்திரைகளுடன் குறிப்பாக நைட்ரைடு (nitrates) வகை மாத்திரைகளுடன் தாக்கம் புரிந்து குருதி அழுத்தத்தில் சடுதியான குறைவினை ஏற்படுத்தும் இதன்காரணமாக மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற பிரதான அவயவங்களுக்கு வழங்கப்படும் குருதியின் அளவு குறைவடையும் இதனால் மேற்குறித்த அவயவங்கள் செயலிழந்து இறப்பு நேரிடும்.
மேலும் Sildenafil citrate ஆனது இருதய தசையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருதய துடிப்பின் ரிதத்தில் மாற்றங்களை கொண்டுவரும் இதன் காரணமாகவும் சடுதியான இருதய இறப்பு ஏற்பட்டு திடீர் மரணம் சம்பவிக்கும்.
மேலும் குணம் குறியற்ற நிலையில் ஆண்களில் காணப்படும் மாரடைப்பு நோயுடன் விறைப்பு குறைபாடும் சேர்ந்தே காணப்படும். இவ்வாறான ஆண்கள் தமக்கு மாரடைப்பு நோய் இருப்பதனை அறியமாட்டார்கள். இவர்கள் மேற்குறித்த பாலுணர்வினை தூண்டும் மாத்திரையினை பாவித்து அதிக நேரம் உடலுறவு கொள்ளும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் சம்பவிக்கின்றது. குறிப்பாக உடலுறவின் பொழுது இருதய துடிப்பு மற்றும் குருதி அழுத்தம் அதிகரிக்கின்றன இதன் காரணமாக இருதயம் அதிகளவு வேலை செய்யவேண்டிய தேவை உள்ளது. இதன்காரணமாக இருதயத்திற்கு ஏற்படும் அதிகரித்த ஓட்ஸிசன் தேவைப்பாட்டினை நிவர்த்தி செய்ய முடியாமல் மாரடைப்பு ஏற்படுகின்றது.
எனவே மருத்துவர்களின் ஆலோசனை இன்றி இவ்வாறான பாலுணர்வினை தூண்டும் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. மேலும் இருதய, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் கட்டாயம் வைத்தியர் ஒருவரின் சிபார்சுடனேயே இவ்வகையான மாத்திரைகளை குறித்த அளவில் பாவிக்க வேண்டும்.
முற்றும்
