தென்கொரியா – சனநெரிசல் மரணத்திற்கு காரணம் என்ன?

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தென்கொரியாவின் தலைநகர் சியோலின் ஒரு பகுதியில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் பொழுது ஏற்பட்ட எதிர்பாராத சன நெரிசலில் சிக்கி ஏறத்தாழ 150 இற்கும் அதிகமானவர்கள் குறிப்பாக இளவயதினர் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவியுள்ளனர். இந்தநிலையில் தென்கொரிய நாடே சோகத்தில் உள்ளது. பலருக்கு ஏன் சன நெரிசலின் பொழுது இவ்வாறான இறப்புக்கள் ஏற்படுகின்றன என்பது பற்றிய விளக்கமின்மை நிலவுகின்றது. அதனை போக்கும் முகமாக இந்த பதிவு அமைகின்றது.


பெரும்பாலும் இத்தகைய சம்பவங்கள் சிறிய, மூடிய கட்டிடங்களில் இடம்பெறுகின்றது. அதுவும் குறிப்பாக குறுகிய பாதையினுடாக/வாசலினுயூடாக அதிகளவான மக்கள் வெளியேறும் பொழுது அல்லது உள் நுழையும் பொழுது ஏற்படுகின்றது. மேலும் குறித்த கட்டிடம் அல்லது இடமானது தாங்கக்கூடிய சனத்தொகையினை விட அதிகளவு மனிதர்கள் கூடும் பொழுதே ஏற்படுகின்றது. திறந்த வெளிகளில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது அரிது.
இவ்வாறான சம்பவத்தின் பொழுது compressive or restrictive asphyxia என்பதே பலரின் மரணத்திற்கு காரணமாக இருந்து விடுகின்றது. compressive or restrictive asphyxia என்றால் என்ன? நாம் சாதாரண நிலைகளில் சுவாசிக்கும் பொழுது அதாவது உட்சுவாசம் செய்யும் பொழுது முறையே எமது நெஞ்சறையானது வெளிநோக்கி மற்றும் மேல்நோக்கி அசையும் அவ்வாறே வெளிச்சுவாசம் செய்யும் பொழுது முறையே உள்நோக்கி மற்றும் கீழ்நோக்கி அசையும். மேலும் நாம் வலிந்த சுவாசம் (Forced respiration) செய்யும் பொழுது எமது கைகளில் உள்ள சில தசைகளும் வேலை செய்யும். சனநெரிசலின் பொழுது பிரயோகிக்கப்படும் பொழுது வெளிப்புற விசைகள் காரணமாக மிகுந்த சனநெரிசல் ஓர் குறுகிய மூடிய பிரதேசத்தில் ஏற்படும் பொழுது அங்கு கூடியிருக்கும் மனிதர்களின் சுவாச அசைவுகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது முற்றாக நிறுத்தப்படும். இதன்காரணமாக சனநெரிசலில் சிக்கி உள்ளவர்களில் சுவாசம் மட்டுப்படுத்தப்படும் அல்லது முற்றாக நிறுத்தப்படும். இதன்காரணமாக இரத்தத்தில் காபனீர்ஓட்ஸைட்டின் அளவு அதிகரித்து ஓட்ஸிசன் அளவு குறைவடையும் இதன்காரணமாக மயக்கம் அல்லது இறப்பு ஏற்படும். மேலும் மனிதர்கள் காற்றோட்டம் குறைந்த இடத்தில் கை மற்றும் கால்கள் அசைக்க முடியாமல் நிமிர்ந்த நிலையில் நிற்கும் பொழுது மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவடையும் இதன் காரணமாகவும் மயக்கம் ஏற்படும்.
மயக்கம் ஏற்பட்டு ஒருவர் விழும் பொழுது சனநெரிசலில் “domino effect” காரணமாக மேலும் பலர் விழுவார்கள். இவ்வாறு ஒருவர் மேல் ஒருவர் விழும் பொழுது மேலும் நசிபடுவர்களினால் தொடர்ந்து சுவாசிக்க முடியாது இறப்பு ஏற்படும்.


மேலே உள்ள படமானது டோமினோ விளைவு எவ்வாறு சனநெரிசலில் ஆபத்தினை விளைவிக்கின்றது என்பதை காட்டுகின்றது.

மேலும் ஒருவர் மயக்கம் அடைந்து விழும் பொழுது பதட்டமடையும் அருகில் உள்ளவர்களினால் இந்த நிலை மோசமடையும். மேலும் விழுந்தவர்களின் மேல் மற்றைய மனிதர்கள் ஏறி நிற்கும் பொழுது இந்த நிலை மேலும் மேலும் மோசமடையும் அத்துடன் அவர்களின் உள்அவயவங்கள் காயங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பமும் உண்டு.
மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் கூடிய கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தும் மின்சார கம்பிகள் அறுந்து வீழ்ந்து மின்சாரம் பாய்ந்தும் இறப்பு ஏற்பட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. மேலும் இவ்வாறன சனநெரிசலில் சிக்கும் இருதய நோயாளிகள் போன்றோர் தமது நோய் நிலைமை மோசமடைந்து மரணித்த சம்பவங்களும் உண்டு.
மக்களுக்கு இவ்வாறு ஆபத்தினை விளைவிக்கும் வகையில் நிகழ்வினை ஒருங்கமைத்த ஏற்பாட்டாளர்கள் மீதே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.