உடலுறவும் சம்மதமும் (பகுதி 1)

கடந்த வாரம் இலங்கை கிரிக்கட் வீரர் ஒருவர் அவுஸ்ரேலிய சுற்று பயணத்தின் பொழுது பெண் ஒருவரினை பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது குறித்த இருவரும் TINDER என்ற செயலியின் மூலம் தொடர்பு கொண்டபின்னர் தனியே குறித்த பெண் வீட்டில் சந்தித்து கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் குறித்த வீரர் அந்த பெண் மணியிடம் பல  தடவைகள் அப்பெண்ணின் சம்மதம் இன்றி உடலுறவு கொண்டமை, உடலுறவின் பொழுது மூச்சு திணறலை ஏற்படுத்தியமை  மற்றும் கொண்டோம் என்ற ஆணுறை அணிய மறுத்தமை போன்ற பல்வேறு  குற்றசாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாலியல் ரீதியான தாக்குதலில் பாலியல் வல்லுறவு தவிர்ந்த பல்வேறு பாலியல் சார்ந்த குற்றங்கள் உள்ளடங்குகின்றன. முக்கியமாக பாரதூரமான பாலியல் குற்றங்கள், இரத்த உறவுகளுக்கு இடையிலான உறவுகள்…. போன்றன அடங்கும்.

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டின் பொழுது பாதிப்பிற்கு உள்ளான பெண்ணின் சம்மதம் குறித்து சட்டவாளர்கள் அக்குவேறு ஆணிவேராக அலசுவார்கள். உலகில் ஒவ்வொருநாடுகளும் தமது குற்றவியல் கோர்வையில் பாலியல் வல்லுறவு என்றால் என்ன என்பதை சட்ட ரீதியில் வரைவிலக்கணப்படுத்தி உள்ளார்கள் அத்துடன் கூடவே பெண்ணின் “சம்மதம்” (CONSENT) என்பது பற்றியும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். பெண்களின் உரிமைகளிற்கு முன்னுரிமை அளிக்காத  நாடுகளின் சட்டங்கள்  வெறுமனே பெண் குறித்த ஆணினை திருமணம் செய்திருந்தால் அப்பெண் குறித்த ஆணுடன் எந்நேரமும் உடலுறவு கொள்ள சம்மதம் கொடுத்தவளாகவே கருதுகின்றன. பெண்களுக்கான உரிமை வலுப்பெற்ற நாடுகளில் ஓர் ஆண் சட்ட ரீதியாக திருமணம் செய்த தனது மனைவியை கூட அவளின் சம்மதம் இன்றி குறித்த ஆண் அவளுடன் உடலுறவு கொண்டால் அதனை பாலியல் வல்லுறவாக கருதுகின்றன அதனை அந்த நாடுகள் ” MARITAL RAPE ” என்று சட்ட ரீதியாக வரைவிலக்கணப்படுத்தி உள்ளார்கள். மேலும் தனி மனித உரிமைகளில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் ஒருபடி மேலே சென்று உறுதியான சம்மதம் (AFFIRMATIVE CONSENT) பற்றி தமது சட்டங்களில்  திருத்தத்தினை மேற்கொண்டுள்ளன. அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலமும் கடந்த வருடம் இவ்வாறான ஓர் சட்டத்திருத்தத்தினை அமுல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

உறுதியான சம்மதம் என்னவென்றால் ஓர் பெண் ஆனவள் செக்ஸில் ஈடுபடுவதற்கு எவ்விதமான மன, உடல் ரீதியான அழுத்தங்களுக்கும் உட்படாமல் தன்னிச்சையாகவே சம்மதம் தெரிவிக்க வேண்டும் அத்துடன் மேலும் செக்ஸின் பொழுது ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருடையேயும் தொடர்ச்சியான மற்றும் புரிந்துணர்வான தொடர்பாடல் நிலவவேண்டும் எனவும் ஒவ்வொரு பாலியல் செயற்பாட்டின் பொழுதும் சம்மதம் அவசியம் என வலியுறுத்துகின்றது. அதாவது சுருக்கமாக சொன்னால் பெண்ணின் சம்மதமானது அனுமானத்தின் அல்லது யூகத்தின் அடிப்படையில் பெறப்பட்டதாக இருக்க கூடாது. மாறாக உடலுறவு செயற்பாட்டின் பொழுது இருவருக்குமான தொடர்ச்சியான புரிந்துணர்வு அடிப்டையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் அது சம்மதம் இன்றிய உடலுறவாக கருதப்படும் அதாவது சட்டத்தின் பார்வையில் பாலியல்வல்லுறவாக கருதப்படும்.

“AFFIRMATIVE CONSENT” சட்ட வடிவில் உள்ள நாடுகளில் உடலுறவின் பொழுது ஓர் குறித்தவகையான ஓர் செயற்பாட்டிற்கு சம்மதம் வழங்கினால் அதனை மட்டுமே மேற்கொள்ள முடியும் அதனை விடுத்து வேறு முறைகளில் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக உறவு கொள்ள முயன்றால் அது குற்றமாகி விடும்.  உடலுறவின் பொழுது கழுத்தை நெரித்தல் அல்லது வேறுவழிகளில் மூச்சு திணறலை ஏற்படுத்தி பயப்பீதியினை உருவாக்கி அதன்மூலம் சம்மதம் அல்லது சம்மதமின்றி உடலுறவு கொள்வது குற்றமாகும். மேலும் மேற்குறித்த நாடுகளில் பெண்கள் உடலுறவு கொள்ளும் பொழுது ஆணுறை அதாவது கொண்டம் அணிந்தால் தான் உடலுறவு கொள்ள சம்மதம் தெரிவிப்பார்கள். அவ்வாறான நிலையில் ஆணுறை அணியாமல் அல்லது வேண்டும் என்றே சேதப்படுத்திய ஆணுறையுடன் உடலுறவு கொள்ளுதல் குற்றமாகும். இதனை ஆங்கிலத்தில் “STEALTHING” என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறான செயற்பாட்டினால் குறித்த பெண் ஆனவள் விரும்பத்தகாத கர்ப்பத்தினை சுமக்க வேண்டிய நிலையும் எய்ட்ஸ் பாலியல் நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பமும் அதிகரிக்கும். எனவேதான் இச்செயற்பாடானது ஓர் பாரதூரமான குற்ற செயலாக மேற்குறித்த நாடுகளில் பார்க்கப்படுகின்றது.  

இப்பதிவினை வாசிக்கும் பலரும் உடலுறவின் பொழுது நாம் பேனாவும் கொப்பியும் எடுத்து எழுத்து வடிவில் சம்மதம் வாங்க வேண்டுமா? என்று கூட யோசிப்பார்கள். உண்மையில் அவ்வாறு இல்லை. அடுத்த பதிவில் இலங்கை சட்ட திட்டத்தில் பெண்ணின் உடலுறவுக்கான சம்மதம் எவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் சாதாரணமாக சம்மதம் பெறப்படும் பொறிமுறை (Process of consent) பற்றியும் பார்ப்போம்

தொடரும்   

One thought on “உடலுறவும் சம்மதமும் (பகுதி 1)

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.