உடலுறவும் சம்மதமும் (பகுதி 11)

கடந்த பதிவில் பல்வேறு நாடுகளில் தண்டனை சட்ட கோர்வையில் உடலுறவின் பொழுது பெண்ணின் சம்மதமானது எவ்வாறு வெவ்வேறு வடிவங்களில் நடைமுறையில் இருக்கின்றது என்பது பற்றி பார்த்தோம். உலகில் ஒவ்வொரு நாடுகளும் தமது நாட்டு பெண்களை பாதுகாக்கும் முகமாக தமது சட்டத்தில் உடலுறவிற்கு சம்மதம் கொடுக்கும் வயதினை தெளிவாக வரையறுத்து உள்ளன. பெரும்பாலும் பதின்ம வயது  திருமணம் ஆகாத பெண்கள் காதல் என்ற போர்வையில் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் அல்லது பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகின்றனர். பல பதின்ம வயது பெண்கள் தங்களின் ஆண் நண்பர் அல்லது காதலர் உடலுறவிற்கு கேட்ட உடனேயே சம்மதித்து விடுகின்றனர். அவர்கள் இவ்வாறான உடலுறவின் மூலம் ஏற்படும் பாதகமான விளைவுகளை கிஞ்சித்தும் பார்ப்பதில்லை. இதன் காரணமாகவே பல உலக நாடுகள் இந்த “உடலுறவுக்கு சம்மதம்” என்ற பகுதியை தமது தண்டனை சட்ட கோர்வையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளன. காதல் எனும் போர்வையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி கர்ப்பம் தரித்து வரும் பதின்ம வயது பாடசாலை மாணவிகள் பலருக்கு தாம் ஆணுடன் உடலுறவு கொண்டால் கர்ப்பம் அடைவோம் என்பதே தெரியாது. பல சந்தர்ப்பங்களில் ஒருசில மணித்தியால நட்பு, உடலுறவு வரை இட்டு சென்றிருக்கும். இதனை இட்டு பலமுறை வியந்து இருக்கின்றேன்.

சம்மதம் கொடுத்தல் அல்லது கொடுக்காமை தொடர்பாக

உங்களிற்கு உடலுறவிற்கு சம்மதம் கொடுக்கும் அல்லது சம்மதம் கொடுக்காமை தொடர்பான முழு உரிமையும் உண்டு. அதாவது ஆணின் வற்புறுத்தலுக்கு பணிந்து அல்லது ஓம் என்று சொல்லாவிட்டால் அவர் ஏதாவது தப்பாக நினைத்து விடுவாரோ/ காதலை முறித்து விடுவாரோ என பயந்து ஒருபொழுதும் உடலுறவிற்கு உடன் பட்டு விடாதீர்கள். முன்பு நீங்கள் உங்கள் ஆண் நண்பருடன் உடலுறவு கொண்டிருந்தாலும் இம்முறை நீங்கள் அதற்க்கு உடன்படாது மறுக்க முழு உரிமையும் உண்டு அத்துடன் எவ்வளவு தூரம் உடலுறவு கொள்ள நீங்கள் சம்மதம் என்பதினை உங்கள் ஆண் நண்பரிடம் தெளிவாக கூறிவிடுங்கள்.

உடலுறவிற்கு சம்மதம் கொடுக்கும் செயன்முறை

இருவரும் நாட்டில் சட்ட ரீதியாக சிறுவர்கள் அல்லாது வளந்தவர்களாகவும் உடலுறவுக்கு சம்மதம் கொடுக்க தகுதி வாய்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். ஒருவர் பற்றி ஒருவர் அறிந்தவராக இருக்க வேண்டும், இருவரும் உடலுறவு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி புரிந்துணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்.மேலும் ஒருவர் தன்னிச்சையாகவும், சுயவிருப்பத்தின் அடிப்படையிலும் எவ்விதமான வற்புறுத்தலுக்கு அடிபணியாத நிலையில் சம்மதம் வழங்க வேண்டும். சட்டத்தின் பார்வையில் சம்மதம் அற்ற உடலுறவு பாலியல் வல்லுறவாகவே கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. (Information, Competence, Understanding, Willingness, Voluntariness, Lack of Coercion…) மேலும் சம்மதமானது உடலுறவு செயற்பாட்டின் ஒவ்வோர் நிலையிலும் மாற்றம் அடையக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக தெரிய வேண்டியவை

  • ஒருவரின் உடல் மொழியோ அல்லது மௌனமோ உடலுறவிற்கான சம்மதமாக கருத்தில் கொள்ள படமாட்டாது.
  • இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட பெண் ஒருவர் தனது விருப்பத்துடன் அல்லது விருப்பம் இன்றி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் வல்லுறவு குற்றமாகும்.ஒருசில விதிவிலக்குகள் உண்டு.
  • பெண் ஒருவரினை உயிர் அச்சறுத்தலுக்கு உள்ளாக்கி அல்லது பாரிய காயங்களை உண்டுபண்ணுவதாக அச்சறுத்தி சம்மதத்தினை பெற்றால் அது கருத்தில் கொல்லப்படமாட்டாது.
  • பணத்தினை அல்லது வேறு பரிசு பொருட்களினை பெற்றுக்கொள்ளல் என்பது உடலுறவிற்கான சம்மதம் என்பது அல்ல.
  • பெண் ஒருவர் சார்பாக அவளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் மேற்படி சம்மதத்தினை தெரிவிக்க முடியாது.
  • முதலில் தெரிவிக்கப்பட்ட சம்மதமானது பிற்பாடு எந்த நேரத்திலும் மீள பெறப்படலாம்.   
  • பெண் ஒருவர் சித்த சுவாதீனம் அற்ற நிலையில் இருக்கும் பொழுது அல்லது போதையில் இருக்கும் பொழுது பெறப்படும் சம்மதமானது சட்ட ரீதியில் வலுவற்றது

உடலுறவும் சம்மதமும் பகுதி ஒன்றினை வாசிக்க

https://tamilforensic.wordpress.com/2022/11/10/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81/

முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.