சிறுவன் பட்டினி சாவா? உண்மை நிலவரம் என்ன?

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கிழக்கிலங்கையில் சிறுவன் ஒருவன் பட்டினியால் மரணத்தினை தழுவியதாக முகநூல் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் கூட தென்னிலங்கையில் இவ்வாறு மரணங்கள் சம்பவித்ததாக செய்திகள் பரவிய பின்னர் அவ்வாறு நடைபெறவில்லை என சுகாதார அமைச்சு மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது இவ்வாறான நிலையில் உண்மையிலேயே இவ்வாறு பட்டினி சாவுகள் நடைபெறுமாக இருந்தால் அது மிகவும் கவலை தரும் விடயமாகும். இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் பல சிறுவர்களின் வீடுகளில் வறுமை நிலை இருக்கின்றது, இவ்வாறு வறுமை இருக்கும் பொழுது மரணிக்கும் சிறுவர்கள் அனைவரும் வறுமையால்  தான் மரணித்தனர் அதாவது  பட்டினி சாவடைந்தனர் என கூறுவது விஞ்ஞான ரீதியில் பொருத்தம் அற்றது. பலரும் இறந்தவர்களின் உடல் மிக கடுமையாக மெலிவடைந்து இருக்கும் இடத்து எவ்விதமான பரிசோதனைகளும் இன்றி இறந்தவர் பட்டினி சாவின் மூலமே மரணமடைந்துள்ளார் என கூறுகின்றனர். இது மிகவும் தவறாகும்.

ஒருவரின் நாளாந்த வாழ்க்கைக்கு தேவையான போசாக்கு உணவுகள் தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு கிடைக்காமல் போகும் பொழுது அந்த நபர் பட்டினி சாவினை எதிர் கொள்வர்.

ஒருவர் பல்வேறு மருத்துவ காரணங்களினால் போதிய உணவு இருந்தும் அதனை உண்ண முடியாத நிலையில் இருப்பர் உதாரணமாக Anorexia nervosa, Dementia மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற மன நோய்கள் உள்ளவர்கள் போதிய உணவு மற்றும் நீர் உள்ளெடுக்க மாட்டார்கள் இதன் காரணமாக அவர்கள் மரணம் அடைந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

வேறுசிலருக்கு உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் சில நோய்கள் காரணமாக அவர்களினால் உணவினை சமிபாடு அடையவோ அல்லது சமிபாடு அடைந்த உணவினை அகத்துறிஞ்சவோ முடியாமல் இருக்கும் உதாரணமாக Ulcerative colitis, Crohn’s disease நோய் உள்ளவர்கள்.

இது தவிர ஏதாவது ஒரு காரணத்தினால் உணவினை விழுங்க முடியாமல் இருக்கின்றவர்கள் உதாரணமாக உணவினை வாய்க்குழியில் இருந்து இரைப்பைக்கு கடத்தும் களம் என்ற உணவு குழாயில் கட்டி அல்லது விழுங்குவதில் உள்ள பிரச்சணைகள் காரணமாக அதாவது நரம்பு சம்பந்தமான பிரச்சனை காரணமாக (Parkinson’s disease, multiple sclerosis, dementia, and motor neurone disease) அவர்கள் போதிய உணவினை மற்றும் நீரினை உட்கொள்ள முடியாமல் இருக்கும்.

மேலும் கடுமையான நோய்கள் காரணமாக படுத்த படுக்கையில் இருக்கும் நோயாளிகள், ஈரல் நோயாளிகள்  போதிய உணவு மற்றும் நீரினை உள்ளெடுக்க மாட்டார்கள். மேலும் சிறுவர்களை பொறுத்த வரை பிறப்பில் இருக்கும் பல்வேறு குறைபாடுகள் காரணமாக (Cerebral palsy, cleft lip and palate, and other congenital disorders) அவர்களினால் போதிய உணவு மற்றும் நீரினை உள்ளெடுக்க முடியாத நிலைமை காணப்படும்.

இவ்வாறு பல்வேறு மருத்துவ காரணங்களினால் ஒருவர் போதிய உணவு மற்றும் நீரினை நீண்ட காலத்திற்கு உள்ளெடுக்க முடியாமல் போகும் பொழுது அவர்களின் புற உடல்  உருவவியல் தோற்றம் பட்டினி சாவினை எதிர்நோக்கும் ஒருவரின் புற உடல் உருவவியல் தோற்றத்தினை நிச்சயம் ஒத்திருக்கும். இவ்வாறான நிலைமைகளில் நாம் உரிய உடற்கூராய்வு பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் குறித்த நபர் பட்டினி சாவடைந்தார் என கூறுவது விஞ்ஞான ரீதியில் ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு அன்று.

நிலநடுக்கம்  அல்லது மண்சரிவு காரணமாக கட்டிட  இடிபாடுகளில் உயிருடன் சிக்கி உயிரிழந்த நபர் ஒருவரின் புற உடல் உருவவியல் தோற்றப்பாட்டிற்கும் அதாவது சடுதியாக பட்டினி (Acute starvation) சாவடைந்த ஒருவரின்புற உடல் உருவவியல் தோற்றப்பாட்டிற்கும் நீண்டகாலமாக (Chronic starvation) போதிய நீர் மற்றும் உணவு கிடைக்காமல் பட்டினி சாவடைந்த ஒருவரின்புற உடல் உருவவியல் தோற்றப்பாட்டிற்கும் பாரிய வேறுபாடு உண்டு.

சிறுவர்களில் ஏற்படும் பட்டினி சாவென்பது எதிர்வுகூறத்தக்கது, முற்றாக தடுக்கப்பட கூடியது. மேலும் ஓர் இடத்தில் சிறுவர்களின் பட்டினி சாவென்பது நிகழுமாயின் அந்த பிரதேசத்தில் உள்ள சுகாதார கட்டமைப்பு மற்றும் அரச சிவில் நிர்வாக கட்டமைப்பு ஆகியன செயற்பாடு அற்ற நிலைமையிலேயே உள்ளன என்பதே உண்மை ஆகும்   

முற்றும்  

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.