அண்மையில் ஓர் தாயார் எனது அலுவலகம் வந்திருந்தார், கூடவே அவருடன் அவரின் மகனும் வந்திருந்தார். வந்திருந்த தாயார் மகனை அலுவலகத்தின் வெளியே இருக்க சொல்லிவிட்டு என்னிடம் உரையாட தொடங்கினார். அவர் கூறிய விடயங்களாவது தனது 24 வயதுடைய மகனின் நடத்தையில் அண்மைக்காலமாக வித்தியாசம் தெரிவதாக கூறினார். குறிப்பாக அடிக்கடி கோபப்படுவதாகவும், வேலைக்கு ஒழுங்காக செல்வதில்லை எனவும் தெரிவித்தார். மேலும் அந்த தாயார் குறிப்பிடுகையில் பிளாஸ்டிக் சோடா போத்தல் ஒன்றினுள் தண்ணீர் விட்டு குழாய் ஒன்றினை அதனுள் செலுத்தி அதன் மறுமுனையினை வாயில் வைத்து குமுழி விளையாடுவதாகவும் கூறினார். மேலும் நான் தொடர்ந்து வினாவுகையில் குறிப்பாக மாலை வேளைகளில் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார் மேலும் மகனின் அறையில் அதிகளவான பாவித்த சொக்லட் அலுமினிய பேப்பர் இருப்பத்தினையும் தாயார் அவதானித்தாக கூறினார். இதன் பிற்பாடு அவரின் மகனை அழைத்து நான் போதைப்பொருள் பாவனை தொடர்பாக வினாவிய பொழுது அவர் தான் எந்த விதமான போதைப்பொருள் பாவனையும் செய்யவில்லை என கூறிய நிலையில் அவரின் சிறுநீர் மாதிரியினை பரிசோதனைக்கு உட்படுத்தினேன். அதன் பிற்பாடு தான், அவர் போதைப்பொருள் பாவிப்பதினை ஒத்துக்கொண்டார். இவ்வாறு பல பெற்றோர், மனைவிமார் தங்கள் பிள்ளைகள் அல்லது கணவர் வீட்டில் போதைப்பொருள் பாவிப்பதினை அறியாமல் உள்ளனர்.

Drug paraphernalia என்பதன் தமிழ் அர்த்தம் போதைப் பொருட்களைத் தயாரிக்க, மறைக்க அல்லது பயன்படுத்த உதவும் உபகரணங்கள் அல்லது பொருட்கள் என்பதாகும். இது போதைப் பொருள்களை உபயோகிக்க உதவும் எந்தவொரு கருவியையும் குறிக்கும். உதாரணமாக, போதைப் பொருட்களை உள்ளிழுக்க உதவும் அல்லது செலுத்தும் குழாய்கள், சூடாக்க உதவும் சிறிய உலோக கரண்டிகள் அல்லது போத்தல்களின் உலோக மூடிகள் , சோதனை குழாய்கள், பின்பக்கம் அகற்றப்பட்ட தங்குதன் (tungsten-halogen bulb) மின்குமிழ்கள் சிறிய பைகள் அல்லது வெற்றுப் பெட்டிகள், தீப்பெட்டி, லைட்டர், தராசுகள், உடலினுள் மருந்து செலுத்த உதவும் ஊசிகள், இரத்தத்தினை துடைக்கும் பஞ்சு/ துண்டுகள், கையினை கட்டிட உதவுவம் நூல் (tourniquet) போன்றவை இதில் அடங்கும்.

குறிப்பாக போதைப்பொருள் புகையினை சேகரித்து நுகரும் வர்த்தக ரீதியாக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களும் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலசந்தர்ப்பங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் தமது அறிவினையும் இணையத்தில் இருக்கும் விளக்கங்களையும் கொண்டு தங்களின் தேவைக்கு ஏற்ப இவ்வாறான உபகரணங்களை வடிவமைப்பர்.
மேலும் போதைப்பொருள் தயாரிக்க உதவும் பொருட்கள், மறைக்க உதவும் பொருட்கள் மற்றும் உபயோகிக்க உதவும் பொருட்கள் யாவும் Drug paraphernalia என்பதில் சட்ட ரீதியாக உள்ளடங்குகின்றது. இப்பொருட்களை தனித்தனியாக நோக்கும் பொழுது அவை பெரும்பாலும் வீட்டு உபயோக பொருட்களாகவே இருக்கும் எனினும் சேர்த்து நோக்கும் பொழுது தான் அவை என்ன நோக்கத்திற்காக பாவிக்கப்படுகின்றது என்பதினை கண்டு பிடிக்கலாம்.
அண்மையில் நடந்த இன்னோர் சம்பவத்தில் வீட்டு காவலில் வைக்கப்பட்ட நபர் ஒருவர் நாணயத்தாளினை சுருளாக சுற்றி போதைப்பொருள் நுகர்ந்தமை தெரியவந்துள்ளது. இன்றைய நிலைமையில் போதைப்பொருள் பாவனையானது எங்கும் பரவியுள்ளது மற்றும் சமூகத்தில் உள்ள பலரும் வேறுபாடுகளை களைந்து இந்த போதைப்பொருள் பாவனையாளர்களாகி அடிமையாளர்களாக மாறியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் சமூகத்தில் உள்ளவர்கள் இவ்வாறன போதை நுகர உதவும் பொருட்கள் சம்பந்தமான அறிவினை கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும்.
(சமூக நலன் கருதி விரிவான விளக்கங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன)
நன்றி
