அதீத மதுப்பாவனையும் குடலில் ஏற்படும் இரத்த போக்கும்

அண்மையில் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்  இறந்தமை யாவரும் அறிந்த விடயம். அவர் இறந்தவுடன் பல சமூக ஊடகங்கள், மற்றும் தனிநபர்களின் முக நூல்கள் அவர் பல்வேறுவிதமான நோய்களினால் இறந்தார் என முகநூலில் கருத்து தெரிவித்திருந்தனர். அவற்றில் பலரின் கருத்துக்கள் தற்போதைய மருத்துவ அறிவிற்கு பொருத்தமானதாக தெரியவில்லை. இவ்வாறு கருத்து தெரிவித்தவர்கள் அவர் மஞ்சள் காமாலை நோய், சிரோசிஸ் (Cirrhosis), குடலில் ஏற்பட்ட குருதி பெருக்கு (gastrointestinal bleeding), உள் அவயவங்களின் செயலிழப்பு ( multi organ failure), ஈரலில் கொழுப்பு படிந்தமை ( fatty liver), GORD (Gastro-Oesophageal Reflux Disease ) என்றவாறு பல்வேறு நோய் நிலைமைகளினால்  இறந்தார் என விபரித்து இருந்தனர். இதன் உண்மைத்தன்மை பற்றி இப்பதிவு ஆராய்கின்றது.

முதலாவதாக அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியசாலையின் பொறுப்புவாய்ந்த அதிகாரி கூறுகையில் அவருக்கு குடலினுள் இரத்த போக்கு  ஏற்பட்டு அவயவங்கள் செயலிழந்தமை (massive gastrointestinal bleed and multiorgan dysfunction secondary to a complex abdominal condition) மற்றும் வயிற்றுனுள் உள்ள சிக்கலான நிலைமைகள் காரணமாக இறப்பு ஏற்பட்டதாக உத்தியோகபூர்வமாக கூறினார். மனிதரின் இறப்புக்கான காரணம் மருத்துவ ரீதியாக அனைவரினாலும் இலகுவாக விளங்க கூடியதாகவும் ஏற்றுக்கொள்ள கூடியதாகவும் இருக்க வேண்டும் இதன் காரணமாகவே உலக சுகாதார நிறுவனம் (World Health organization) மரணத்திற்கான காரணத்தினை சர்வதேச நியமம் (WHO format for Medical Certificate of Cause of Death – MCCD) ஒன்றில் வழங்க கூடியதாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இனி ஒவ்வொரு நோய் நிலைமைகளும் மரணத்தினை ஏற்படுத்துமா என பார்ப்போம்

1. மஞ்சள் காமாலை நோய் (Jaundice )

இது மனிதனின் ஈரல் செயலிழந்துள்ளமையினை வெளியில் தெரிவிக்கும் நோயின் குணங்குறி (sign/symptoms) ஆகும். மருத்துவ ரீதியாக இது ஓர் நோய் நிலைமை அல்ல மாறாக நோயின் அறிகுறி. எனவே அவரின் மரணத்திற்கான காரணம் மஞ்சள் காமாலை  என கூறுவது மருத்துவரீதியில் பொருத்தம் அற்றது

2. ஈரலில் கொழுப்பு படிந்தமை (Fatty liver)

இவ்வாறு ஈரலில் கொழுப்பு படிக்கின்றமையை மருத்துவத்தில் fatty liver என்று அழைப்பர். Fatty Liver அதாவது கொழுப்பு ஈரல் (கல்லீரல்) என்பது ஈரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதாகும். இது பொதுவாக மது அருந்துபவர்களுக்கு ஏற்படலாம் (Alcoholic fatty liver) அல்லது மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் (nonalcoholic fatty liver) ஏற்படலாம். முறையற்ற உணவுப் பழக்கம், உடலுழைப்பின்மை, உடல் பருமன், நீரிழிவு போன்ற காரணங்களால் இது பெரும்பாலும் வருகிறது. இது ஈரலை பாதித்து, நீண்ட காலப்போக்கில் சிரோசிஸ் (cirrhosis), ஈரல்  செயலிழப்பு (liver failure) போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இறுதியில் இறப்பு  இழைநார் வளர்ச்சி (cirrhosis) , ஈரல்  செயலிழப்பு (liver failure) ஆகியற்றினால்த்தான் ஏற்படும். இறப்பு ஏற்படும் பொழுது அவருக்கு fatty liver என்ற நோய் நிலைமை இருக்காது. எனவே அவரின் மரணத்திற்கான காரணம் கொழுப்பு ஈரல் என கூறுவது மருத்துவரீதியில் பொருத்தம் அற்றது

3. GORD (Gastro-Oesophageal Reflux Disease) 

இரைப்பையும் உணவுக் குழாயும் (களம்) சந்திக்கும் இடத்தில் இயல்பான நிலையில் ஒரு இறுக்கி (spincter) காணப்படுகிறது.  இது இயல்பான நிலையில் இறுக்கமாகக் காணப்படுவதால் இரைப்பை-உணவுக்குழாய்ச் சந்தி மூடப்பட்டுக் காணப்படும்.  இச் செயற்பாட்டின் காரணமாக இரைப்பையில் சுரக்கப்படும் அமிலம் மேல்நோக்கிச் செல்வது தடுக்கப்படுகிறது. இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கி தளர்வடைந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் இரைப்பையில் உள்ள உணவு, இரைப்பைச்சாறு போன்ற அடக்கங்கள் இறுக்கியின் திறந்த வழியூடாக மேல்நோக்கிச் செல்லுகின்றன. இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்படுகின்றது, இதன்போது நெஞ்செரிவு நோயாளியால் உணரப்படுகின்றது. இந்த நோய் நிலைமை  மிக அரிதாகவே இரைப்பையினுள் இரத்த பெருக்கினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.

4. சிரோசிஸ் (Cirrhosis)

சிரோசிஸ் (Cirrhosis) என்பதன் தமிழ் அர்த்தம் ஈரல் இழைநார் வளர்ச்சி ஆகும். இது கல்லீரல் திசுக்களில் வடு (scar)ஏற்படுவதைக் குறிக்கும் ஒரு ஈரல் நோயாகும், இது ஈரலின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. ஈரலில் ஏற்படும் பலவிதமான நோய்கள் (நீண்டகால ஹெபடைடிஸ், மது அருந்துதல், கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவை) சிரோசிஸ் ஏற்பட காரணமாகலாம். ஈரலின் சாதாரன செல்கள் அழிக்கப்பட்டு, அதன் இடத்தில் வடு திசுக்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஈரலின் தொழில்பாடு படிப்படியாக குறைவடைந்து செல்லும்.

இயற்கையாகவே எமது ஈரல் தன்னில் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மீளும் தன்மையுள்ளது ஆனால் ஒருவர் மது அருந்துதல் போன்ற ஈரலுக்கு ஊறு விளைவிக்கும் செயற்பாட்டினை மேற்கொள்வாராயின் இறுதியில் ஈரலின் புத்துஉயிர்க்கும் தன்மை அற்று போகும். அந்தநிலையில் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை), வயிற்று வலி மற்றும் வீக்கம், கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம், அரிப்பு, சோர்வு போன்றவை ஏற்படலாம். ஒருநிலையில் இறப்பு ஏற்படும்.

சிரோசிஸ் ஏற்படும் பொழுது ஈரலிற்கு உணவு கால்வாய் தொகுதியில் இருந்து போசணைப்பொருட்கள் அடங்கிய குருதியை வழங்கும் தொகுதிப்பெருநாடியில் குருதி அழுத்தம் அதிகரிக்கும் இதன் காரணமாக உணவுக்கால்வாய் தொகுதியில் வெரிகோஸ் ஏற்பட்டு இரத்த குழாய் வெடிப்பினால் இரத்த போக்கு ஏற்படும். இவ்வாறு இரத்த போக்கு ஏற்படும் பொழுது நோயாளிக்கு எந்த வலியும் இருக்காது மேலும் குறித்த அளவு இரத்தம் வெளியேறிய பின்னரே களைப்பு, மயக்கம், அதிகளவு வியர்த்தல், நெஞ்சு படபடப்பு என்பன ஏற்படும். மேலும் இரத்த வாந்தி, மலம் தார் போன்று  கறுப்பாக வெளியேறல் போன்றன ஏற்படும். மேலும் குருதி அதிகளவு வெளியேறும் பொழுது உடலின் முக்கிய அவயவங்களுக்கு செல்லும் குருதியின் அளவு குறைவடையும் இதன் காரணமாக மூளை, சிறுநீரகம்.. போன்ற அங்கங்கள் செயலிழக்கும் இவ்வாறு செயலிழத்தலினை மருத்துவத்தில் multiorgan dysfunction/ Failure என்றழைப்பர். இவ்வாறு பல  அங்கங்கள் செயலிழந்த நோயாளியினை அதிதீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வழமையாக சிகிச்சை அளிப்பர். அவர்களின் உடல் நிலையினை பொறுத்து அவர்களின் விதி தீர்மானிக்கப்படும்.  

சாதாரணமாக சிரோசிஸ் ஏற்பட்ட உடனேயே இறப்பு ஏற்படாது ஏனெனில் ஈரல் தன்னால் இயன்ற அளவு வேலைகளை இறுதி வரைக்கும் (Compensated liver cirrhosis) செய்யும் குறித்த நபர் மதுபானம் போன்றவற்றினை தொடந்து பாவிக்கும் நிலையில் ஈரலின் தொழில்பாடு முற்றாக பாதிக்கப்படும் இந்நிலை மருத்துவத்தில் decompensated liver cirrhosis  என்றழைக்கப்படும் இதன் பின்னரே மரணம் ஏற்படும். சிரோசிஸ் ஏற்பட்ட பின்னர் மேற்குறித்த முறை தவிர வேறு முறைகளிலும் ( mechanisms of death) இறப்பு ஏற்படலாம். 

நன்றி 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.