நேற்றைய தினம் தமிழ் நாட்டின் கரூரில் நடிகர் விஜய் அவர்களின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி பலர் இறந்துள்ளனர். பலருக்கு ஏன் சன நெரிசலின் பொழுது இவ்வாறான இறப்புக்கள் ஏற்படுகின்றன என்பது பற்றிய விளக்கமின்மை நிலவுகின்றது அத்தோடு சனநெரிசலில் இருந்து எவ்வாறு உயிர் தப்புவது என்ற அறிவும் குறைவாக உள்ள நிலையில். அதனை போக்கும் முகமாக இந்த பதிவு அமைகின்றது.

பெரும்பாலும் இத்தகைய சம்பவங்கள் சிறிய, மூடிய கட்டிடங்களில் இடம்பெறுகின்றது. அதுவும் குறிப்பாக குறுகிய பாதையினுடாக/வாசலினுயூடாக அதிகளவான மக்கள் வெளியேறும் பொழுது அல்லது உள் நுழையும் பொழுது ஏற்படுகின்றது. மேலும் குறித்த கட்டிடம் அல்லது இடமானது தாங்கக்கூடிய சனத்தொகையினை விட அதிகளவு மனிதர்கள் கூடும் பொழுதே ஏற்படுகின்றது. திறந்த வெளிகளில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது அரிது.
இவ்வாறான சம்பவத்தின் பொழுது compressive or restrictive asphyxia என்பதே பலரின் மரணத்திற்கு காரணமாக இருந்து விடுகின்றது. compressive or restrictive asphyxia என்றால் என்ன? நாம் சாதாரண நிலைகளில் சுவாசிக்கும் பொழுது அதாவது உட்சுவாசம் செய்யும் பொழுது முறையே எமது நெஞ்சறையானது வெளிநோக்கி மற்றும் மேல்நோக்கி அசையும் அவ்வாறே வெளிச்சுவாசம் செய்யும் பொழுது முறையே உள்நோக்கி மற்றும் கீழ்நோக்கி அசையும். மேலும் நாம் வலிந்த சுவாசம் (Forced respiration) செய்யும் பொழுது எமது கைகளில் உள்ள சில தசைகளும் வேலை செய்யும். சனநெரிசலின் பொழுது பிரயோகிக்கப்படும் பொழுது வெளிப்புற விசைகள் காரணமாக மிகுந்த சனநெரிசல் ஓர் குறுகிய மூடிய பிரதேசத்தில் ஏற்படும் பொழுது அங்கு கூடியிருக்கும் மனிதர்களின் சுவாச அசைவுகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது முற்றாக நிறுத்தப்படும். இதன்காரணமாக சனநெரிசலில் சிக்கி உள்ளவர்களில் சுவாசம் மட்டுப்படுத்தப்படும் அல்லது முற்றாக நிறுத்தப்படும். இதன்காரணமாக இரத்தத்தில் காபனீர்ஓட்ஸைட்டின் அளவு அதிகரித்து ஓட்ஸிசன் அளவு குறைவடையும் இதன்காரணமாக மயக்கம் அல்லது இறப்பு ஏற்படும். மேலும் மனிதர்கள் காற்றோட்டம் குறைந்த இடத்தில் கை மற்றும் கால்கள் அசைக்க முடியாமல் நிமிர்ந்த நிலையில் நிற்கும் பொழுது மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவடையும் இதன் காரணமாகவும் மயக்கம் ஏற்படும்.
மயக்கம் ஏற்பட்டு ஒருவர் விழும் பொழுது சனநெரிசலில் “domino effect” காரணமாக மேலும் பலர் விழுவார்கள். இவ்வாறு ஒருவர் மேல் ஒருவர் விழும் பொழுது மேலும் நசிபடுவர்களினால் தொடர்ந்து சுவாசிக்க முடியாது இறப்பு ஏற்படும்.

மேலே உள்ள படமானது டோமினோ விளைவு எவ்வாறு சனநெரிசலில் ஆபத்தினை விளைவிக்கின்றது என்பதை காட்டுகின்றது.
மேலும் ஒருவர் மயக்கம் அடைந்து விழும் பொழுது பதட்டமடையும் அருகில் உள்ளவர்களினால் இந்த நிலை மோசமடையும். மேலும் விழுந்தவர்களின் மேல் மற்றைய மனிதர்கள் ஏறி நிற்கும் பொழுது இந்த நிலை மேலும் மேலும் மோசமடையும் அத்துடன் அவர்களின் உள்அவயவங்கள் காயங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பமும் உண்டு.
மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் கூடிய கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தும் மின்சார கம்பிகள் அறுந்து வீழ்ந்து மின்சாரம் பாய்ந்தும் இறப்பு ஏற்பட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. இது தவிர இவ்வாறான நெருக்கடியில் நெரிபடுபவருக்கு மன அதிர்ச்சி ஏற்பட்டு இயற்கை நோய்களான மாரடைப்பு, இரத்தத்தில் சீனி அதீதமாக குறைவடைதல், காக்கைவலி, ஆஸ்துமா மற்றும் மூளையில் இரத்த கசிவு என்பன ஏற்பட்டும் இறப்பு ஏற்படலாம். மேலும் இவ்வாறன சனநெரிசலில் சிக்கும் இருதய நோயாளிகள் போன்றோர் தமது நோய் நிலைமை மோசமடைந்து மரணித்த சம்பவங்களும் உண்டு.
மக்களுக்கு இவ்வாறு ஆபத்தினை விளைவிக்கும் வகையில் நிகழ்வினை ஒருங்கமைத்த ஏற்பாட்டாளர்கள் மீதே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
எவ்வாறு கூட்டம் ஒன்றில் சன நெரிசலினை குறைக்கலாம்
1. நிகழ்ச்சி ஒருங்கமைப்பு – நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே நன்றாக திட்டமிடவேண்டும் குறிப்பாக நுழைவாயில், வெளிச்செல்லேம் வழி, பங்குபற்றும் நபர்களின் எண்ணிக்கை என்பன குறித்து திட்டமிடவேண்டும். நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் எல்லோரையும் உடனே வெளியேற அனுமதிக்க கூடாது. வெளிச்செல்லும் வாசல் எப்பொழுதும் அகலமானதாக இருக்க வேண்டும். சன நெருக்கடியான வேளைகளில் தற்காலிக வெளிச்செல்லும் வாசல்களை ஏற்படுத்த வேண்டும். அனுபம் மிக்க ஊழியர்களை இதில் ஈடுபடுத்த வேண்டும்.
2. கூட்ட அடர்த்தியைக் கண்காணிக்கவும் நெரிசலைக் கணிக்கவும் AI-இயங்கும் கண்காணிப்பு கருவிகள் , ட்ரோன்கள் மற்றும் CCTV தரவு பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தவும். மேலும் நிகழ்நேர கூட்டக் கண்காணிப்புக்கு RFID (Radio Frequency Identification) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும்.
3. கூட்டத்தில் பங்குபற்றுபவர்களுக்கு சனநெருக்கடியான நேரத்தில் தெளிவான, இலகுவில் விளங்கக்கூடிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். சாதாரண நெரிசல்கள் இவ்வாறான தொடர்பாடல் பிரச்னைகள் காரணமாக மோசமடைந்தமைக்கான சான்றுகள் நிறையவே உண்டு. மேலும் இவ்வாறான சனநெருக்கடியான நேரத்தில் தொலைபேசிகள் பொதுவாக இயங்க முடியாத நிலைக்கு சென்றுவிடும் ஏனெனில் குறித்த பிரதேசத்தில் அதிகளவு கைத்தொலைபேசி பாவனை வலைத்தள நெருக்கடிகாரணமாக ஆகும். எனவே ஒலிபெருக்கிகள் தான் சிறந்த தொடர்பாடல் முறை ஆகும்.
4. மக்களுக்கு அறிவுட்டல் – கூட்டம் நடைபெறும் இடத்தின் அமைவிடம், வெளிச்செல்லும் வாசல்களின் அமைவிடம் போன்றவற்றினை மக்களுக்கு கூட்டம் தொடங்கும் முன்னரே அறிவிக்க வேண்டும். கூட்டத்தின் அமைவிடம் உரிய மக்களின் எண்ணிகையினை அடைந்ததும் எக்காரணம் கொண்டும் மேலதிக மக்களை அனுமதிக்க கூடாது. மேலும் இவ்வாறான பாரிய கூட்டம் நடைபெறும் இடங்களில் முதலுதவி படைகளை வாடகைக்கு அமர்த்தல் வேண்டும்
எவ்வாறு உயிர் தப்பித்து கொள்வது
- மற்றையவர்களின் மேல் விழாமல் தனது சொந்தக்காலில் இறுதிவரை நிக்க முயற்சிக்க வேண்டும்
- சனத்திரல் அசையும் திசையில் அசைய வேண்டும். எதிர் திசையில் ஒருபோதும் அசையக்கூடாது.
- நெஞ்சிற்கு குறுக்காக கைகளை கட்டி கொள்ள வேண்டும் இதன் காரணமாக சுவாசிக்க நெஞ்சின் அசைவு ஏற்பட வழி உண்டாகும்.
- கைப்பாசைகள் மூலமே தொடர்புகொள்ளவேண்டும். கத்தி குளறுவதன் மூலம் உடலில் இருந்து சக்தி இழப்பு ஏற்படும்
- சுவர் மற்றும் தூண்களுடன் தற்காலிகமாக தொடர்பில் இருப்பதன் மூலம் சனத்திரளின் ஒட்டத்தில் அள்ளுப்பட்டு, நெரிபட்டு போகாமல் தப்பிக்கலாம்
முற்றும்
