Mephedrone என்ற புதிய போதைப்பொருள் ஆபத்தானதா?

Mephedrone என்ற புதிய வகை போதைப்பொருளானது அண்மையில் இலங்கையின் பலஇடங்களில் கைப்பேற்றப்பட்ட போதைப்பொருளில் இருப்பது அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறு இலங்கையில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இப்போதைபொருளானது மிகமிக ஆபத்தானது என்ற வகையில் செய்திகள் வந்துள்ள நிலையில் இப்போதைப்பொருள் ஏன் ஆபத்தானது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

Mephedrone ஆனது 4-methylmethcathinone என்ற இரசாயன பெயரினால் அழைக்கப்படும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட cathinone வகையினை சேர்ந்த போதைப்பொருளாகும். போதைப்பொருட்கள் எமது உடலில் இருவகையான மாற்றங்களை உண்டுபண்ணும்

1. நரம்புத்  தொகுதியின் செயற்பாட்டினை மந்தமாக்கும் போதை பொருட்கள்  – முக்கியமாக ஹெராயின், ஓபியம் போன்றன இவற்றில் அடங்கும்

2. நரம்புத்தொகுதியில் கிளர்ச்சியினை ஏற்படுத்தும் போதைப்பொருட்கள் – இவற்றில் ஐஸ் (மெத்தமிட்டாமின், அம்மீட்டமின்) மற்றும் கொக்கைன் போன்றன இவற்றில் அடங்கும்.

Mephedrone ஆனது எமது நரம்பு தொகுதியில் கிளர்ச்சியினை அல்லது உற்சாகத்தினை ஏற்படுத்தும் ஓர் போதை மருந்தாகும். இது  drone,M-CAT, white magic, meow meow, bubble போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இது முதன் முதலாக 1929ம் ஆண்டு செயற்கையாக தொகுக்கப்பட்டது எனினும் 2000ம் ஆண்டுவரை இதன் பயன்பாடு அறியப்படவில்லை. அதன் பின்னரே இது போதை தரும் பொருளாக பாவிக்கப்பட ஒவ்வொரு நாடுகளினாலும் போதைப்பொருளாக வரையறுக்கப்பட்டு பாவனை, உற்பத்தி, கையிருப்பில் வைத்திருத்தல் மற்றும் கடத்துதல் என்பன குற்றங்களாக அறிவிக்கப்பட்டது. இந்த வகை போதைப்பொருளானது பொலிஸாரினால் கைப்பேற்றப்பட்டது தவிர எவ்வளவு தப்பி சென்றது என்பது பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் பொதுமக்கள் இது பற்றி அவதானமாக இருக்க வேண்டும். பொதுவாக இந்த போதைப்பொருள் பவுடர் வடிவத்தில் அல்லது பளிங்கு வடிவத்தில் அல்லது மாத்திரை வடிவத்தில் வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும்.

Mephedrone ஏன் ஆபத்தானது என்பது பற்றி பார்ப்போம்

1. சடுதியான இறப்பு

இது ஓர் செயற்கையாக தயாரிக்கப்படும் ஓர் போதைப்பொருள். இதனை தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஒருபோதுமே தரசான்றிதழ் பெற்றவை அல்ல. எனவே இவை தயாரிக்கும் போதைப்பொருளில் உண்மையான போதைப்பொருள் அளவு அதாவது தூய போதைப்பொருளின் அளவு (variable potency ) எப்போதும் மாறுபடும் இதன் காரணமாக முதல் பாவித்த அளவில் நபர் ஒருவர் தொடர்ந்து பாவிக்கும் பொழுது சடுதியான நஞ்சாதல் ஏற்பட்டு சடுதியான இறப்பு ஏற்படும். மற்றைய செயற்கையாக தயாரிக்கப்படும் போதைப்பொருட்களிலும் இவ்வாறு ஏற்படும்.

2.  கடுமையான உடல் பாதிப்புக்கள்

இப்போதைப்பொருள் ஆனது எமது உடலில் உள்ள இரத்த நாடிகளை சுருங்க வைக்கும் (vaso constriction) தன்மையுள்ளது இதன் காரணமாக சடுதியான மாரடைப்பு, கை மற்றும் கால்களின் விரல்கள் அழுகுதல் (dry gangrene), மூக்கின் ஊடாக நுகர்பவர்களில் மூக்கு  சவ்வு (Nasal septum) அழிவடைதல் போன்றன ஏற்படும். மேலும் எமது உடலில் சோடியம், பொட்டாசியம் போன்றவற்றின் சமநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தி வலிப்பு, சிறுநீரக செயலிழப்பு என்பவற்றினை ஏற்படுத்த வல்லது.

3. மீண்டும் மீண்டும் பாவிக்க தூண்டி அடிமையாக்கும் தன்மை

இந்த போதைப்பொருளானது மனித உடலில் 30-60 நிமிடங்கள் மாற்றத்தினை உண்டுபண்ணும் அதன் பின்னர் அதன் விளைவு படிப்படியாக அற்று போகும். இதன் காரணமாக நீண்ட நேர விளைவினை விளைவினை விரும்புபவர்கள் மற்றும் இப்போதைபொருளினை பாவித்ததினால் ஏற்பட்ட விளைவில் இருந்து தப்பிக்க அடிக்கடி பாவிக்க வேண்டி இருக்கும். எனவே மற்றைய போதைப்பொருட்கள் மாதிரி இதுவும் அடிமையாக்கும் (Addictive) தன்மை உடையது.

4. மேலும் இந்த போதைப்பொருள் எமது நரம்புத்தொகுதியில் பாலியல் நடத்தை மாற்றத்தினை ஏற்படுத்த வல்லது. பொதுவாக இந்த வகை போதைப்பொருளானது அதீத பாலியலினை தூண்டும் மேலும் வழமையாக ஒரு இன பாலியல் உறவினை மேற்கொள்பவர்கள் இதனை பாவித்து கொள்வார்கள். இவ்வாறு போதை பொருட்களினை பாவித்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுதலை chemsex என்றழைப்பர். இந்த பாலியல் நடவடிக்கையில் methamphetamine (ICE), mephedrone,  ketamine போன்ற வகை போதைப்பொருட்கள் பாவிக்கப்டுகின்றன.

நேற்றைய தினம்  mephedrone என்ற போதைப்பொருள் முதன் முதலாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உடன் மக்களுக்கு அறியத்தந்தவர்கள் எவருமே இந்த போதைபொருள் ஏன், எந்த வகையில் ஆபத்தானது (மனிதனை போதைக்கு அடிமையாக்குவதிலா, திடீர் இறப்பினை ஏற்படுத்துவத்திலா அல்லது உடல் தீங்கான பக்கவிளைவினை ஏற்படுத்துவத்திலா ) என்பது குறித்து குறிப்பிடவில்லை. நேற்றைய செய்திகளை வாசித்த போதைப்பொருள் பாவனையாளர்கள் மாறி சிந்திக்கவும் வாய்ப்புண்டு அதாவது ஐஸ், ஹெராயின், கஞ்சா போன்றவை குறைந்த அளவில் உடலுக்கு தீங்கினை ஏறப்டுத்தும் என்று. உண்மையில் இந்த போதைப்பொருட்களில் குறைந்த அளவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் மற்றும் அதிக அளவில் தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் என்று ஒன்றுமே இல்லை. எல்லா போதைப்பொருளுமே மனித உடலுக்கு பாரிய தீங்கினை ஏற்படுத்த கூடியவை. முக்கியமாக ஹெராயின் மனிதனை போதைக்கு அடிமையாக்குவதில் மிகவும் சக்தி வாய்ந்தது.

நன்றி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.