அண்மைக்காலமாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கோவில் திருவிழாக்கள் குறிப்பாக சூரன்போர் போன்றன நடைபெறும் பொழுது அல்லது வேறு திருவிழாக்களில் பல இளைஞர்கள் வாயினுள் மண்ணெண்னையிணை வைத்து அதனை தீப்பந்தம் மேல் ஊதி தீயினால் சாகச விளையாட்டினை மேற்கொள்கின்றார்கள். இந்த விளையாட்டினால் ஏற்படும் தீக்காயம் தவிர்ந்த ஏனைய உடற் தீங்குகள் பற்றி இப்பதிவு விளக்குகின்றது.
மண்ணெண்ணெயின் எரிபற்று நிலை பெற்றோல் போன்றவற்றினை விட உயர்ந்தது என்பதினால் இது இலகுவில் தீப்பற்றி விபத்தினை உண்டாக்காத போதிலும் பின்னரும் உடலுக்கு தீங்கான விளைவுகளை உண்டாக்கும்.
குரல்வளை மூடி அல்லது குரல்வளை மூடுதளம் என்பது தொண்டையில் உள்ள ஒரு சிறிய மூடி போன்ற அமைப்பு ஆகும், இது உணவு உட்கொள்ளும் போது மூச்சுக் குழாய்க்குள் உணவும் தண்ணீரும் செல்வதைத் தடுக்கிறது. சாதாரணமாக ஆரோக்கியமான நபர் ஒருவர் உண்ணும் பொழுது அல்லது தனது வாய்க்குழியினுள் திரவம் அல்லது உணவுகளை வைத்திருக்கும் போது அல்லது உண்ணும் பொழுது அல்லது அருந்தும் பொழுது குரல்வளை மூடி திரவம் அல்லது உணவு சுவாச குழாயான வாதநாழியினுள் உட்செல்ல விடாமல் தடுக்கின்றது. சாதாரணமாக ஓர் மனிதனில் உணவு அல்லது திரவம் பாதுகாப்பான முறையில் விழுங்கப்படுவதினை (மறுதலையாக புரைக்கேறுவதினை தடுக்கும் முகமாக) ஒன்றிற்கு மேற்பட்ட மூளை நரம்புகள் (Glossopharyngeal Nerve (CN IX), Vagus Nerve (CN X), Facial Nerve (CN VII), Hypoglossal Nerve (CN XII)) தொழில்படுகின்றன
ஒருவர் உணவு உண்ணும் பொழுது அல்லது திரவம் ஒன்றினை அருந்தும் போது சிரிக்க அல்லது உரையாட அல்லது வேறு வேலைகளில் ஈடுபட முற்படுவார்களாயின் மேற்குறித்த நரம்புகளின் ஒருங்கிணைத்த தொழில்பாடு அற்று போகும் நிலையில் அவர்களின் சுவாச தொகுதியினுள் உணவு அல்லது திரவம் உட்செலும் இதன்காரணமாக குறித்த நபருக்கு புரைக்கேறுதல் (Aspiration) நடைபெறும் மேலும் சில நரம்பு சம்பந்தமான நோயாளிகள், தலையில் பாரிய காயங்களுக்கு உள்ளானவர்கள், வலிப்பு ஏற்படும் பொழுது இவ்வாறு புரைக்கேறுதல் நடைபெறும்.

இவ்வாறு மண்ணெண்ணெய் போன்ற அருந்த தகாத அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் திரவத்தினை வாயினுள் வைத்திருக்கும் பொழுது அது சிறிய அளவில் சுவாச குழாயினுள் (வாதநாளியினுள்) உட்செல்லும் இதனை சட்டமருத்துவத்தில் Micro Aspirations என்றழைப்பர். இதன் பொழுது குறித்த நபருக்கு புரைக்கேறியதற்கான உடனடியான அறிகுறிகள் பெருமளவில் ஏற்படாது. ஆனால் சுவாசத்தொகுதியினுள் உட்சென்ற மண்ணெண்ணெய் நுரையீரலினுள் அழற்சியினை (chemical pneumonitis) ஏற்படுத்தும் இதன் காரணமாக இருமல், காச்சல், நெஞ்சுநோ, சுவாசப்பதில் சிரமம் என்பன ஏற்படும். மேலும் உட்சென்ற மண்ணெண்ணெய் ஆனது நுரையீரலின் சிற்றறைகளினை அழிக்கும் இவ்வாறு அழிக்கப்பட்ட சிற்றறைகள் நீண்ட காலப்போக்கில் நார்களினால் பிரதியிடப்படும். இதனை மருத்துவத்தில் lung fibrosis என்றழைப்பர். இதன்காரணமாக நீண்ட கால சுவாச பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள் முக்கியமாக Bronchiectasis, Bronchiolitis obliterans, lung destruction and respiratory failure போன்ற நோய்கள் ஏற்படும். மேலும் நுரையில் நோய் காரணமாக (Pulmonary Hypertension and Heart Failure)இருதய செயலிழப்பு ஏற்படலாம். மேலும் வாயினுள் வைத்திருக்கும் மண்ணெண்ணெய் ஆவியாகி மூக்கின் ஊடாகவும் நுரையீரலுக்கு சென்று மேற்குறித்த விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் வாயினுள் புண்கள் காணப்படும் பொழுதும், வாய்க்குழியின் மென்சவ்வின் ஊடாகவும் மண்ணெண்ணெய் ஆனது உடலினுள் உறிச்சப்படும் ஆபத்தும் உள்ளது.
மேலும் ஒருவருக்கு நுரையீரல் அழற்சி அவரின் நுரையீரலினுள் செல்லும் மண்ணெண்ணெய்யின் அளவில் தங்கியுள்ளது எனினும் சிறிதளவிலான மண்ணெண்ணெய் இவ்வாறான நுரையீரல் அழற்சியினை ஏற்படுத்த போதுமானது. சிலரில் மண்ணெண்ணெய் ஆவி ஒவ்வாமை காரணமாகவும் நுரையீரல் அழற்சி ஏற்படலாம். சிறுவர்களில் 01 மில்லி லிட்டர் இற்கு குறைவான மண்ணெண்ணெய் இவ்வாறு நுரையீரல் அழற்சியினை ஏற்படுத்த போதுமானது (ஆதாரம் https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6996713/#:~:text=Aspiration%20of%20even%20small%20amounts,common%20symptoms%20of%20aspiration%20pneumonitis.) எனவே இது குறித்து சிறுவர்கள் மற்றும் ஏனையோர் அவதானமாக இருக்க வேண்டும். பலர் கூறுவது என்னவென்றால் தான் ஒருசில முறைகள் இவ்வாறு செய்தும் எவ்விதமான உடல் தீங்குகள் வரவில்லை என்பது தான். அவர்கள் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் பொழுது சில சந்தர்ப்பதில் மேற்குறித்த நோய்நிலைகள் ஏற்படுவதில்லை ஆனால் நீண்ட காலப்போக்கில் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

மேலும் இன்னொரு அபாயகரமான சாகச விளையாட்டு, மேற்குறித்த நிகழ்வுகளில் நடைபெறுவது என்னவெனில் எரியும் தீப்பந்தத்தினை வாயினுள் செலுத்துதல் ஆகும். எமது மனித உடலில் உட்செல்லும் காற்றானது எமது நாசிக்குழியில் பிசிர்களினால் வடிகட்டபட்டு தூயதாக்கப்பட்டு மேலும் உடல் வெப்பநிலைக்கு மாற்றப்பட்டு சுவாசத்தொகுதியினுள் உட்செல்லும் ஆனால் இவ்வாறான செயற்பட்டுகளில் அவ்வாறு நிகழ்வதில்லை இவ்வாறு புகை நிரம்பிய சூடான காற்றினை சுவாசிப்பதினால் சுவாச தொகுதியில் ஏற்படும் காயங்கள் சட்ட மருத்துவத்தில் smoke inhalation injury என்றழைக்கப்படும். இதன் காரணமாக சாதாரணமான சுவாசத்தொகுதியின் மேலணியில் ஏற்படும் காயத்தில் இருந்து நுரையிரல் அழற்சி வரையான பார தூரமான நோய் நிலைமைகள் ஏற்படலாம் அத்துடன் இறப்பும் சம்பவிக்கலாம். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் குறித்த நபருக்கு தீக்காயம் ஏற்பட்டிருக்க வேண்டிய தேவை இல்லை என்பதே ஆகும்.
மேலும் குறித்த நபர்கள் புகைப்பிடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு மேற்குறித்த நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறு கூடுதலாக உள்ளது.
நன்றி
