அண்மையில் பூநகரி சங்குப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விபத்து ஒன்றின் பொழுது தலையில் காயமடைந்த சிறுமி ஒருவரினை பலர் வைத்தியசாலையில் அனுமதிக்க தயக்கம் காட்டிய நிலையில் சிறுமி அதிக இரத்த போக்கு காரணமாக இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது ஒரு விபத்தில் அல்லது ஒரு தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பலர் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் வருவதில்லை.
மாறாக வேடிக்கை பார்ப்பார்கள். இவ்வாறு ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொழுது அனுமதித்தவர் ஏதாவது விசாரணை ஒன்றிற்கு முகம்கொடுக்க வேண்டுமா என்பது பற்றி பலருக்கு சரியான விளக்கம் இல்லை. அதனை தெளிவுபடுத்தும் நோக்குடன் சட்ட வைத்திய அதிகாரியின் பார்வை நோக்கில் இப்பதிவினை பதிவிடுகிறேன்.


இவ்வாறு அனுமதிக்கபடும் நோயாளி உயிர் பிழைப்பார் எனில்,
அவரின் உடல்நிலை ஓரிரு நாட்களில் முன்னேற்றமடைந்ததும் அவர் பொலிசாருக்கு அவரை இந்நிலைக்கு இட்டுச்சென்ற சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பது பற்றி வாக்குமூலம் ஒன்றினை வழங்குவார். அதன் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி மேலதிக தகவல்களை பெற்று தனது சட்ட வைத்திய பரிசோதனையை செய்வார். இங்கு அந்த நோயாளியை அனுமத்திதவர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது.
ஆனால் துரதிஸ்டவசமாக அந்த நோயாளி இறப்பார் என்றால் நோயாளியை அனுமத்திதவர் ஓரிரு கடமைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அனுமதித்தவர் எவ்வாறான சூழ்நிலையில் மரணித்தவருக்கு காயம் ஏற்பட்டது என்பதை பொலிசாருக்கு விளக்கி வாக்கு மூலம் கொடுக்க வேண்டும். அரிதான சிலசந்தர்ப்பங்களில் பிரேத பரிசோதனை நடைபெறும் பொழுது சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகம் சென்று இறந்தவரினை காயமடையும் நிலைமைக்கு இட்டு சென்ற சம்பவம் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும். மேலும் மரணித்தவருக்கு உறவினர் யாரும் இல்லை எனில் அவரின் உடலத்தினை பொலிஸாருக்கும் சட்ட வைத்திய அதிகாரிக்கும் அடையாளம் காண்பதற்கு உதவி புரிய வேண்டும். மேற்கூறிய செயற்பாடுகளை முன்னெடுக்க ஓரிரு மணித்தியாங்கள் செலவாகும்.
சிலர் ஏன் இந்தச் செயற்பாடுகள் என்று கேட்கலாம்.
அதற்கான காரணத்தை அறியலாமா?
1. பல சந்தர்ப்பங்களில் அதாவது விபத்து, கொலை போன்ற மரணம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் மனித உடலில் ஏற்படும் காயங்களின் தன்மை ஒரே மாதிரி இருக்கும். இச்சந்தர்ப்பத்தில் இறந்தவரினை அனுமதித்தவரின் வாக்கு மூலம் முக்கியமானது.
2. சில வேளைகளில் குறிப்பிட்ட நோயாளி சுய நினைவு இழந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சுய நினைவு மீளாமல் இறக்க நேரிடும். அந்த வகையில் வைத்தியசாலையில் அனுமதித்தவரின் வாக்கு மூலம் முக்கியமானது.
3. பல நேரங்களில் இரு நண்பர்கள் ஒன்றாக மது அருந்துவார்கள். போதை தலைக்கு ஏறியதும் சண்டை போட்டு காயப்படுத்தி கொள்வார்கள். படுகாயம் அடைந்த நண்பனை தாக்கியவனே வைத்திய சாலையில் அனுமதித்துவிட்டு , மேல்மாடியில் இருந்து விழுந்ததாக OPD பிரிவில் சொன்ன பல சம்பவங்கள் நடை பெற்றுள்ளன.
4. கொழும்பு போன்ற பாரிய நகரங்களில் கணிசமானோர் தெருக்களில் வசிக்கின்றனர். இவ்வாறன ஒருவர் இறக்கும் பொழுது பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வைத்திய சாலையில் அனுமதித்தவரிடம் இருந்து மேலதிக தகவல்களை அறிய முயல்வர்.
5. சில சமயங்களில் விசாரணை செய்யும் பொலிஸார் பிழையான தகவல்களை சட்ட வைத்திய அதிகாரிக்கு வழங்கி அவரை தவறாக வழிநடத்த முற்படுவர். இச்சந்தர்ப்பத்தில் சாட்சியின் வாக்கு மூலம் முக்கியமானது.
6. நடைபெற்றது கொலை எனில் வைத்திய சாலையில் அனுமதித்தவர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெறும் பொழுது ஏனைய சாட்சிகளுடன் சேர்ந்து சாட்சி கொடுக்க வேண்டும். இதற்கு நீதி மன்றத்தினால் அழைப்பாணை அனுப்பபடும்.
பின்பற்றப்படும் நடைமுறைகள் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஏற்றமாதிரி வேறுபடும் உதாரணமாக உறவினர்கள் அல்லது பலர் ஒன்றாக பயணிக்கும் பொழுது (பேருந்தில் அல்லது மோட்டார் சைக்கிளில்) ஏற்படும் விபத்தின் பொழுது சக பிரயாணிகளே கண்கண்ட சாட்சிகள் அவர்களே வாக்குமூலத்தினை வழங்குவார்கள். எனவே இவ்வாறான விபத்தின் பொழுது காயமடைந்த நபரினை வைத்தியசாலையில் அனுமதிக்க தயக்கம் வேண்டாம்
தமிழர்களில் பெரும்பான்மையினர் நீதி மன்றம் மற்றும் போலீஸ் நிலையம் செல்வதை அவமரியாதையான செயலாக கருதுவதாலும் தாங்கள் ஏதோ குற்றவாளிகள் போன்று அச்சபடுவதாலும் இவ்வாறு உதவி செய்யவும் வாக்கு மூலம் அளிக்கவும் பின்னிற்கின்றனர். விபத்து ஒன்று நடைபெறும் நேரங்களில் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற எம்மவர்கள் பின்னடிக்க இதுவே காரணம்.
நன்றி
