அக்டோபர் 29, 2025 அன்று மெல்போர்னின் கிரிக்கட் பயிற்சியின் பொழுது 17 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டினின் (Ben Austin) கழுத்து பகுதியில் பந்து தாக்கியதினால் மரணம் அடைந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தன்னியக்க இயந்திரத்தின் மூலம் பந்து வீசப்பட்டு கொண்டிருக்க துடுப்பாட்ட வலையினுள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள T 20 போட்டிக்கான பயிற்சியின் பொழுதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பயிற்சி அமர்வின் போது குறித்த வீரர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அவர் கழுத்துப் பாதுகாப்பு (ஸ்டெம் கார்டு) அணிந்திருக்கவில்லை. இதேமாதிரியாக 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் (Phillip Hughes) என்பவர் பந்தினால் தாக்கப்பட்டு பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவினார். குறித்த இருவரினதும் மரணத்துக்கான காரணம் மூளைப்பகுதியில் ஏற்பட்ட இரத்த கசிவே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பதிவில் கழுத்து பகுதியில் ஏற்படும் காயங்களினால் எவ்வாறு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது குறித்து விளக்கப்படுகின்றது.

இதற்கு முதற்படியாக மூளைக்கு இரத்தம் வழங்கும் நாடிகளின் அமைவிடம் பற்றி தெரிந்திருத்தல் அவசியம் ஆகின்றது. எமது மூளைக்கு தேவையான இரத்தத்தினை இரு நாடிகள் வழங்குகின்றன
1. Internal Carotid Arteries ( உட்கழுத்து நாடி )
2. Vertebral Arteries (முதுகெலும்பு நாடி )
இவற்றின் உடலின் அமைவிடத்தினை கீழ் உள்ள படம் விளக்குகின்றது.

இவற்றில் முதுகெலும்பு நாடியானது கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து ஆரம்பித்து மேல் நோக்கி அதாவது மூளையினை நோக்கி செல்கின்றது இவ்வாறு செல்லும் பொழுது கழுத்து பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகளில் இருக்கும் துவாரங்களின் ஊடாகவே செல்லும். மேலும் கழுத்தின் மேற்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகள் ஊடாக செல்லாது கழுத்து முள்ளந்தண்டு என்புகள் 1 மற்றும் 2 இற்கு இடையே வெளி நோக்கி வளைந்து (Loop) பின்னர் மண்டையோட்டின் துவாரத்தின் ஊடக மூளையினுள் செல்கின்றது.
இவ்வாறு வளைந்து வெளிநோக்கி செல்வதன் காரணமாகவே அதிக அசைவுகள் நடைபெறும் கழுத்து – மண்டையோட்டு பகுதியில் இந்த கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படாமல் இருக்க முடிகின்றது. எனினும் பின்வரும் காரணங்களினால் கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது
1. கழுத்தின் முள்ளந்தண்டுகளின் கிடையான முனைகளின் ஊடாக செல்லும் பொழுது கழுத்து முள்ளந்தண்டு என்புகளில் ஏற்படும் என்பு முறிவுகள், மூட்டு விலகல்கள் என்பவற்றின் காரணமாக கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது
2. கழுத்தின் மேற்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகள் ஊடாக செல்லாது கழுத்து முள்ளந்தண்டு என்புகள் 1 மற்றும் 2 இற்கு இடையே வெளி நோக்கி வளைந்து செல்லும் பொழுது நேரடியாக விசையின் தாக்கத்திற்கு உள்ளாகி கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு நாடியின் சுவரானது மெலிதாகவும் இலாஸ்டிக் தன்மை குறைந்தும் காணப்படுவதன் காரணமாக காயப்படும் தன்மை அதிகமாகின்றது
மேற்குறித்த காரணங்களினால் பந்து மற்றும் கராத்தே அடி ( karate blow) போன்ற மொட்டையான விசைகள் கழுத்து பகுதியில் தாக்கும் பொழுது கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது (Dissection of vertebral artery)

மேலும் சில சந்தர்ப்பங்களில் கழுத்து பகுதியில் கட்டாயம் விசை ஒன்று தாக்க வேண்டிய தேவை இல்லாமலேயே தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் வழமைக்கு மாறான எல்லை மீறிய அசைவு காரணமாகவும் கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் இவ்வாறான மொட்டையான விசையின் தாக்கத்தினால் களுத்துபகுதியில் உள்ள உட்கழுத்து நாடியும் காயப்படக்கூடிய சாத்தியம் உள்ளது.

மேலும் கழுத்து முள்ளந்தண்டு நாடி கிழிந்து காயப்படுவதன் காரணமாக அக்கிழிவுக்காயமானது விசை தாக்கிய இடத்தில் மட்டும் உண்டாகாது நீண்ட தூரத்திற்கு செல்லும் இதன் காரணமாக கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டாலும் தலையினுள் இரத்த கசிவு உண்டாகலாம்
நன்றி
