10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபம் – முன்னேஸ்வரத்திற்கு 05/11/2025 அன்று சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர். இவ்வாறு நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த ஐவரின் சடலங்களும் மீட்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் சோக அலைகளை ஏற்படுத்தியிருந்தன. இவ்வாறு முன்பும் சுற்றுலா சென்றவர்கள் பல்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இறந்திருக்கின்றார்கள். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றபொழுது கூட கடலில் மூழ்கி சிலர் இறந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் சுற்றுலாவின் பொழுது இவ்வாறான சம்பவங்கள் ஏன் நடைபெறுகின்றன மற்றும் இவ்வாறான சம்பவங்களை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது

சுற்றுலாவின் பொழுது அல்லது களிப்பாட்டங்களின் பொழுது நீரில் மூழ்கி இறப்பதற்கான காரணங்கள்
1. குறிப்பாக பொழுதுபோக்கு பயணங்களின் போது, பாதுகாப்பற்ற அல்லது அறிமுகமில்லாத பகுதிகளில் குளித்தல். இலங்கை ஓர் தீவு எனினும் நாட்டின் எல்லா கடற்கரையிலும் நீராட முடியாது. சில கடற்கரைகள் மட்டுமே அதிக அலைகள் அற்றும், கடலடியில் பாறைகள் அற்றும் நீராட தகுந்தனவாக உள்ளன.
2. நீர் ஆழத்தில் ஏற்படும் மாற்றங்கள், வலுவான நீரோட்டங்கள் அல்லது நீருக்கடியில் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வு அல்லது அறிவு இல்லாமை. முக்கியமாக கடற்கரைகளை போன்றே ஆற்றின் எல்லா இடங்களிலும் நீராட முடியாது. ஆழம் குறைந்த, சீரான நீரோட்டம் உள்ள ஆற்றங்கரைகள் போன்றவற்றில் மட்டுமே நீராட முடியும். குறித்த சம்பவத்தில் இறந்தவர்கள் நீராடிய பொழுது ஆற்றில் உள்ள ஓர் பள்ளத்தில் வீழ்ந்ததாக உயிர் தப்பிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் வாசிகளுக்கே இவ்வாறான நீர்நிலைகளில் உள்ள ஆபத்துக்கள் தெரியும். வெளியூர் வாசிகளான சுற்றுலாவில் வந்து நீராடுபவர்களுக்கு இந்த ஆபத்துக்கள் தெரியாது
3. ஆபத்தான நீர்நிலைகளைத் தவிர்க்க அல்லது உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு வழக்கமாக அறிவுறுத்தும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளை புறக்கணித்தல். பலசந்தர்ப்பங்களில் இவ்வாறு வழங்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்கள் சகோதர மொழியில் இருப்பதனால் சரிவர விளங்கிக்கொள்ள முடியாத வகையில் இருக்கின்றது மேலும் இவ்வாறான அறிவுறுத்தல் பலகைகள் பலசந்தர்ப்பங்களில் பல்வேறு தனி நபர்களினால் அகற்றப்பட்டுள்ளன.
4. நீரில் இவ்வாறான ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மூழ்கும் பொழுது சிலர் போதிய நீச்சல் தெரியாது இருப்பார்கள். மேலும் நீச்சல் தெரிந்தவர்கள் கூட இவ்வாறு நீச்சல் தெரியாதவர்களை காப்பாற்றும் முயற்சியில், பதட்டமான சூழ்நிலையில், பயப்பீதியுடன் வினைத்திறனான முறையில் செயற்பட முடியாது.
5. பொதுவாக இவ்வாறான சுற்றுலாக்களின் பொழுது இவ்வாறு நீராடலின் பொழுது மது போதையில் அல்லது போதை மருந்துக்களின் பாவனையில் இருப்பதினால் அவர்களினால் வினைத்திறனான முறையில் செயற்பட்டு தப்பிக்க முடியாது.
6. மேலும் ஆறுகளில் நீராடும் பொழுது நீருந்து பிரதேசங்களில் பெய்யும் மழை காரணமாக அல்லது வடிந்து செல்லும் மழை வெள்ளம் காரணமாக சடுதியாக நீர் மட்டம் அதிகரித்து இவ்வாறு நீராடுபவர்களை பலிகொண்டுள்ள சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வாறு கடலிலும் நீர் மட்டம் மற்றும் அலைகள் நேரத்திற்கு ஏற்ப கூடி ஆபத்தினை ஏற்படுத்தி இருக்கின்றன.
இலங்கையில் இவ்வாண்டில் 230 பேர் இவ்வாறு நீரில் மூழ்கி இறந்துள்ளனர் என்று பொலிஸாரின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கும் நிலையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

எவ்வாறு இவ்வாறான விபத்துக்களை தடுக்கலாம்
- நீந்த தெரியாதவர்கள் மற்றும் குறிப்பாக சிறுவர்களை கண்காணிப்பில் நீராடலின் பொழுது வைத்திருக்க வேண்டும்
- குறிப்பாக சுற்றுலா குழுவில் உள்ள ஒருவரினை இந்த கண்காணிப்பு பொறுப்புக்கு வலியுறுத்தலாம்.
- குறித்து ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நீராட வேண்டும் அதுவும் குறித்த நேரத்தினுள் நீராடவேண்டும் ஏன்னெனில் பல இவ்வாறான இடங்களில் மீட்பு பணிக்கு என விசேட பயிற்சி பெற்ற கடற்படையினர் கடமையில் இருப்பர். அவர்கள் கடமையில் இல்லாத பொழுது நீராடுவது உசிதமல்ல.
- நீராடலின் பொழுது உயிர் காப்பு கவசங்களை அணிவது சிறந்தது மேலும் சில இடங்களில் இவற்றினை வாடகை அடிப்படையில் பெறலாம்.
- குழுவாக நீந்தும் பொழுது தனியே ஒருவர் மட்டும் வேறு இடத்தில் இருந்து நீந்துவது உசிதமல்ல
- மது அல்லது போதை பாவனையின் பின்னர் நீந்துவது ஆபத்தினை விளைவிக்கும்
- உள்ளூர் வழிகாட்டல்களை பின்பற்றுவது சிறந்து
- துர்அதிஷ்டவசமாக குழுவில் உள்ள ஒருவர் நீரில் மூழ்க தொடங்கினால் நீச்சலில் அனுபவம் மிக்க ஒருவரே அல்லது பயிற்சிபெற்ற கடற்படையினரே அவரினை மீட்க்கும் பணியில் ஈடுபடவேண்டும்
மனிதர்களாகிய நாம் மிக சந்தோஷமான சூழ்நிலைகளில் மிக அவதானமாக இருப்பதன் மூலம் அனாவசியமான உயிரிழப்புக்களை தடுக்கலாம். மேலும் முக்கியமாக அறிமுகம் இல்லாத நீர்நிலைகளில் நீராடும் பொழுது நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும். சுற்றுலா போன்றன செல்லும் பொழுது அனுபவம் மிக்கவர்களின் அல்லது அப்பிரதேச வாசிகளின் அறிவுரைகளை கட்டாயம் செவிமடுப்பதன் மூலம் அனாவசியமான உயிரிழப்புக்களை தடுக்கலாம்.
நன்றி

நீங்கள் பெரும்பான்மையான முக்கிய பிரச்சினைகள், குறைபாடுகளைக் குறிப்பிட்டுள்ளிர்கள். ஆனால், இலங்கையில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு நீந்தத் தெரியாது. அதிலும், கடல், ஆறு, குளங்களில் நீந்தப் பெரும்பான்மையினர் தம்மைப் பயிற்றிக்கொள்ளவில்லை.
LikeLike
ஆம் உண்மை தான் ஐயா
LikeLike