அண்மைக்கலாமாக வடமாகாணத்தில் காற்றின் தரம் குறைந்து வருகின்றது அதாவது யாழ்ப்பாணத்தில் காற்று அதிகளவில் மாசுபட்டு வருகின்றது. தற்பொழுது அது ஆபத்தான நிலைக்கு அண்மித்து உள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது காற்று சுவாசிக்க உகந்தது அல்ல என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்வாறு மாசுப்படல் பல்வேறு காரணங்களால் நடைபெறுகின்றது அது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

1.யாழ் மாவட்டத்தில் இவ்வாறு காற்று மாசு படுவதற்கான காரணங்கள் என்ன?
முக்கியமாக அயல்நாடான இந்தியாவில் இருந்து குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் இருந்து மாசுபட்ட காற்று யாழ் மாவட்டத்தினை நோக்கி நகர்வதாகும். குறிப்பாக வடகீழ் பருவ பெயர்ச்சி காற்று நிலவும் நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இவ்வாறான மாசடைந்த காற்று யாழ் மாவட்டத்தினை வந்தடைகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் நிலவவும் அதிகரித்த ஈரப்பதன் காரணமாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் குப்பைகளினை எரிப்பதினால் வரும் புகை என்பன வளிமண்டலத்தில் மேல் நோக்கி செல்லாமல் தரை மட்டத்தில் தங்குவதினால் மனிதர்கள் அதிகளவு மாசடைந்த காற்றினை சுவாசிக்க நேரிடுகின்றது.

2. வேறு என்ன காரணங்களினால் காற்று மாசடைகின்றது?
மேற்குறிய காரணங்கள் தவிர கட்டிட நிர்மாண பணிகளினாலும், வாகனங்கள் வீதியில் செல்லும் பொழுது வீதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் படிந்த தூசுக்கள் வளி மண்டலத்திற்கு வெளிக்கிளம்புவதினால் காற்று மாசுபடுகின்றது
3. கொழும்பு போன்ற நகரங்களில் காற்று மாசுபடுவதற்கான பிரதான காரணங்கள் என்ன?
பிரதானமாக வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையே காரணம் ஆகும்
4. யாழில் தற்போது நிலவவும் அதிக மாசுப்பட்ட காற்று எவ்வாறு குறைவடையும்?
வட கீழ் பருவ காற்று முடிவடைந்து தென் மேல் பருவ காற்று (May to September) தொடங்கும் பொழுது இந்து சமுத்திரத்தில் இருந்து வரும் ஈரப்பதன் நிறைந்த காற்று இம்மாசுக்களை கழுவி செல்ல தற்பொழுது நிலவும் சூழ்நிலை மாறும். இடைப்பட்ட காலங்களில் உள்ளூரில் நிலவும் காற்று ஒட்டத்தினை பொறுத்து காற்று மாசுபடல் இருக்கும்
5. எவ்வாறான மாசுக்கள் இந்த மாசடைந்த காற்றில் இருக்கும்?
வாகன மற்றும் தொழில் சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகளில் இருக்கும் கார்பன் துகள்கள், கார்பன் மோனோக்ஸ்சைடு, கந்தகம், நைட்ரோஜென் ஓட்ஸ்சைட், ஈயம், பிளாஸ்ட்டிக் துகள்கள் …. போன்ற பல்வேறு மாசுக்கள் இருக்கும்.
இவை தவிர பல்வேறு சிறு துணிக்கைகள் இருக்கும் இவை மிக மிக மெல்லிய துகள்களாக இருக்கும். முக்கியமாக 2.5 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில் இம்மாசுக்கள் இருக்கும் இதன் காரணமாக இந்த மாசுக்கள் நுரையீரலின் சுவாச சிற்றறை வரை சென்றடையும் இவை பொதுவாக PM 2.5 என்றழைக்கப்படும். பல சந்தர்ப்பங்களில் இவை நுரையீரலினை தாண்டி இரத்தத்தில் கலக்கும்
PM 10 என்பது 10 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில் இருக்கும் மாசுக்கள். உதாரணமாக வீதியோர தூசுக்கள், மகரந்த மணிகள் போன்றன இதில் அடங்கும். இவை எமது நாசிக்குழியுடன் நின்று விடும். எனவே PM 2.5 என்பது PM 10 என்பதினை விட ஆபத்தானது.
6. ஏன் மாசடைந்த காற்று மணக்கவில்லை?
சாதாரணமாக நாம் மாசடைந்த காற்றினை சுவாசிக்கும் பொழுது வித்தியாசமான மணமாக இருக்கும் ஆனால் தற்போதைய மாசடைந்த காற்று அதிகளவு ஈரப்பதன் மூலம் நிரம்பி இருப்பதினால் இவ்வாறான மணம் இருக்க மாட்டாது
7. மாசடைந்த காற்றினை சுவாசித்தினால் மனிதருக்கு எவ்வாறான சுகாதார சீர்கேடுகள் ஏற்படும்?
ஏற்கனவே சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு அந்த நோய்கள் அதிகரிக்கும் அதாவது தீவிரத் தன்மை அடையும். சிலருக்கு புதிதாக சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அதாவது இருமல் மற்றும் சுவாசிப்பதில் கடின தன்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்
8. எம்மை எவ்வாறு நாம் பாதுகாத்து கொள்ளலாம்?
வீட்டினை விட்டு வெளியில் செல்லும் பொழுது பொதுவாக போக்குவரத்தில் ஈடுபடும் பொழுது முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் எமது சூழலில் குப்பைகளை இருக்கது தவிர்க்க வேண்டும்.
9. எவ்வாறு காற்றின் தரத்தினை அறிந்து கொள்ளலாம்?
IQAir, World’s Air Pollution, AirNow App, Accu weather போன்ற சர்வதேச வலைத்தளங்களில் இருந்தும் இலங்கையின் AQ.LK, https://www.nbro.gov.lk/ வலைத்தளங்களில் இருந்தும் realtime முறையில் நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசுபட்டுள்ளது என்பதினை அறிந்து கொள்ளலாம்
இவ்வாறு மாசடைவதன் காரணமாக பாதிப்பினை எதிர்கொண்ட வைத்தியர் ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்றினை தாக்குதல் செய்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்ட விரிவான திட்டத்தைத் தயாரிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) மற்றும் யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 22, 2026 அன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
