போதைமாத்திரைகள்!

அண்மைய காலப்பகுதியில் இலங்கையின் பலபகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் காரணமாக என்றும் இல்லாதவகையில் அதிகளவில் போதை மாத்திரைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டு வரும் நிலையில் போதைமாத்திரை என்றால் என்ன, ஏன் அவற்றை பாவிக்க வேண்டும் மற்றும் அவற்றினால் உடலில் ஏற்படும் விளைவுகள் பற்றி இப்பதிவு விளக்குகின்றது

பொலிஸாரினால் மீட்கப்பட்ட ஒருதொகுதி போதை மாத்திரை

1. போதை மாத்திரை என்றால் என்ன?

Pregabalin, Gabapentin மற்றும் tramadol போன்ற மருத்துவ மாத்திரைகளே சமூக மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் போதை மாத்திரை என்று பொதுவாக அழைக்கப்படுகின்றது. இவை வெவ்வேறு மருந்து உற்பத்தி செய்யும் கம்பெனிகளினால் தாயாரிக்கப்பட்டு வெவ்வேறு வியாபார பெயர்களில் நோயாளருக்காக  விற்பனை செய்யப்படுகின்றது

2.  இந்த மாத்திரைகள் என்ன என்ன வைத்திய தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்றன?

பொதுவாக இந்த மாத்திரைகள் வலிப்பு நோய்க்கு பாவிக்கப்படுகின்றது. மேலும் நரம்புகளில் ஏற்படும் பிரச்னையால் உண்டாகும் நோவுக்கு வலி நிவாரணியாகவும் பாவிக்கப்டுகின்றது. இவை தவிர மன பதகளிப்பு … போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கு பாவிக்கப்படுகின்றது.

3. Pregabalin அல்லது Gabapentin ஆகிய இரு மாத்திரைகளும் ஒன்றா?

இல்லை இவ்விரு மாத்திரைகளும் ஒரே வர்க்கத்திற்கு உரியவை. இவற்றின் கட்டமைப்பு gamma-aminobutyric acid (GABA) என்ற நரம்பு கணத்தாக்கத்தினை கடத்தும் பதார்தத்தினை ஒத்திருக்கும். gamma-aminobutyric acid (GABA) ஆனது எமது மூளையில் கணத்தாக்கத்தினை கடத்தாது நோவினை குறைக்கும். இதன் காரணமாகவே மேற்குறித்த மாத்திரைகள் வலிநிவாரணியாக பயன்படுகின்றது.

4.   Pregabalin அல்லது Gabapentin ஆகிய மாத்திரைகளில் போதைப்பொருள் இருக்கின்றதா?

நிச்சயமாக இந்த மாத்திரைகள் நார்க்கோர்ட்டிக் (Narcortics) அல்லது ஒபிஒய்ட் (Opioid) வகையான மருந்து மாத்திரைகள் அல்ல. மேற்குறித்த மாத்திரைகளில் போதை பொருட்கள் ஏதும் அடங்கியிருக்காது.

5. அவ்வாறு எனில் மேற்குறித்த மாத்திரைகள் ஏன் போதை மாத்திரைகள் அல்லது போதை வில்லைகள் என்று அழைக்கப்படுகின்றது?

குறிப்பாக போதை மருந்து பாவிப்பவர்கள் மேற்குறித்த மாத்திரைகளை பாவிப்பதன் காரணமாகவே அவை தவறான காரண பெயராக போதை மாத்திரை என அழைக்கப்படுகின்றன.

6. மேற்குறித்த மாத்திரைகளை பாவிக்கும் பொழுது போதை உண்டாகுமா?

இந்த மாத்திரைகளை மருத்துவ ரீதியாக சிபாரிசு செய்யப்பட்ட அளவில் பாவிக்கும் பொழுது மருத்துவ ரீதியாக போதை உண்டாகாது. எனினும் சிபாரிசு செய்யப்படாத அதிக அளவில் (overdose) பாவிக்கும் பொழுது இம்மாத்திரைகளின் பக்கவிளைவுகளான சோர்வுத்தன்மை, தளர்வான நடை, மங்கலான பார்வை, அதிக நித்திரை, கனவுலகில் மிதத்தல், பார்வையில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகள் .. போன்ற பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் இப்பக்கவிளைவுகள்  போதைப்பொருள் அல்லது மதுபானம் பாவித்தால் வரும் விளைவுகளை ஓத்திருப்பதினால் சிலர் இந்தவகை மாத்திரையினால் போதை உண்டாகின்றது  என்ற நம்பிக்கையில் இதனை பாவிக்கின்றனர்.மேலும் இங்கு pregablin மற்றும் gabapentin என்பன பூஸ்டர் டோஸாக தொழிற்படும் தன்மை உடையவை

7. பூஸ்டர் டோஸாக தொழில் படுதல் என்றால் என்ன?

வேறு ஓர் போதைப்பொருளுடன்  அல்லது மதுபானத்துடன் சிலவகை பொருட்களை சேர்த்து பாவித்தால் அதிக போதை உண்டாகும் அத்துடன்  போதை அதிக நேரம் நிலைத்து நிற்கும். இதன் காரணமாகவே போதை மாத்திரைகள் அதிகளவில் பாவிக்கப்டுகின்றன.


8. Pregablin மற்றும் gabapentin ஆகிய மருந்துகளை மருத்துவர்கள் சேமித்து வைப்பது அல்லது நோயாளிகளுக்கு பரிந்துரைப்பது குற்றமா?
இல்லை. இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் ஒருவர் அல்லது பல் மருத்துவர் ஒருவர் மேற்குறித்த மருந்துகளை கொள்வனவு செய்யவும், நோயாளர்களுக்கு வழங்கும் முகமாக சேமித்து வைக்கவும் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கவும் முடியும். அவர்களுக்கு சட்ட ரிதீயான அங்கீகாரம் உண்டு. இவ்வாறே நார்கோடிக் மருந்துகளை (உண்மையான போதை மருந்துகளை) பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் கொள்வனவு செய்யவும், நோயாளர்களுக்கு வழங்கும் முகமாக சேமித்து வைக்கவும் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கவும் முடியும்.

9. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை ஒருவர் தொடர்ச்சியாக பாவிப்பதன் காரணமாக அந்த நபர் அதற்கு அடிமையாகும் தன்மை உருவாகுமா?
ஆம். அண்மைக்காலத்தில் வெளிவந்த மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளின் மேற்குறித்த மருந்துகள் பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக பாவிக்கும் இடத்து பாவனையாளரை அடிமையாக்கும் தன்மை கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தற்பொழுது அல்லது முன்பு பல்வேறுபட்ட போதை பொருட்களை பாவிப்பவர்கள் இவற்றிற்கு அடிமையாகும் தன்மை அதிகம்.

10. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை சாதாரண குடிமகன் ஒருவர் தனது உடைமையில் வைத்திருத்தல் குற்றமாகுமா?
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் Poisons, Opium and Dangerous Drugs (Amendment) Act No. 41 of 2022 (23/11/2022) இன் பிரகாரம் சாதாரண குடிமகன் வைத்தியரின் உரிய பரிந்துரை இன்றி மேற்குறித்த மருந்துகளை அதிகமாக வைத்திருத்தல் குற்றமாகும்.


11. இப்பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
இலங்கையின் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்திலும் வைத்தியர்கள் களஞ்சியப்படுத்தக் கூடிய அல்லது விற்பனை செய்யக்கூடிய அல்லது பரிந்துரைக்க கூடிய அதிகூடிய அளவு பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும் வைத்தியர்கள் மருத்துவ ஒழுக்கவியலுக்கு அமைய தமது நோயாளர்களின் தேவைப்பாட்டிற்கு அமைய மேற்குறித்த மருந்துகளை கொள்வனவு செய்து பரிந்துரைக்கலாம். மேலும் நார்க்கோர்ட்டிக் மருந்து விற்பனையின் பொழுது பின்பற்றப்படும் நடைமுறைகளையும் கைக்கொள்ளலாம்.

12. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை ஒருவர் தொடர்ச்சியாக பாவிப்பதன் காரணமாக அந்த நபருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?

மயக்கம், தலைச்சுற்றல் மற்றும் அறிவாற்றல் குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு, கவனம் மற்றும் மன தெளிவு ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள், படபடப்பு, சோர்வு, நடுக்கம், தூக்கமின்மை, பதட்டம், எரிச்சல், செவிப்புலன் பிரமைகள், உணர்ச்சி உறுதியற்ற தன்மை மற்றும் மனநோய் போன்ற பல்வேறு உடல் மற்றும் உள  ஆரோக்கிய பிரச்சினைகளை தொடர்ச்சியான பாவனை ஏற்படுத்தும்.

நன்றி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.