மூன்று தினங்களுக்கு முன்னர் (17/11/2025) அன்று ஓர் துயர சம்பவம், சவூதி அரேபியாவின் மக்காவில் இருந்து மதீனா செல்கின்ற இந்திய யாத்திரிகர்களை ஏற்றிய பேருந்து ஒரு டீசல் எரிபொருள் டேங்கர் லாரியுடன் மோதியது. இந்த விபத்தின் காரணமாக பேருந்தில் இருந்த 45 பயணிகள் பரிதாபரமாக இறக்கின்றனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்கின்றார். எவ்வாறு தீ பரவியது, ஏன் பயணிகள் தப்பி ஓட முடியவில்லை , ஏன் அவ்வாறு நடந்தது, “Kiln Effect” என்றால் என்ன? என்பதை அறிவியல் ரீதியாகப் இப்பதிவு விளக்குகின்றது.

1. வாகன மோதலின் பொழுது எவ்வாறு எரிபொருள் சிந்தியது (Atomization vs. Spillage)?
வழமையாக விபத்து நடந்த சாலைகளில் பேருந்துகள் 100 – 120km வேகத்திலேயே செல்வது வழமை . இவ்வாறே குறித்த பேருந்தும் 100km/h இற்கு மேற்பட்ட அதிவேகத்திலேயே பிரயாணித்தது. வழமையாக டேங்கரில் முற்றாக நிரம்பிய நிலையிலேயே எரிபொருள் கொண்டுசெல்லப்படும். பகுதியளவில் கொண்டுசெல்வது டேங்கருக்கு சேதத்தினை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு இரு வாகனங்களும் மிக மிக அதி வேகத்தில் மோதும் பொழுது டேங்கரில் இருந்த டீசலில் மிக அதிக அழுத்தம் உருவாகும் இதன் காரணமாக டீசல் ஆனது டேங்கரில் ஏற்பட்ட சிறு துவாரங்கள் மற்றும் சிறு வெடிப்புக்கள் வழியாக பீச்சி அடிக்கப்படும். இச் செயற்பாட்டின் பொழுது டீசல் ஆவியாகும் அதாவது திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் (atomization) மேலும் அந்த சூழலில் நிலவிய அதீத வெப்பம் இவ்வாறான ஆவியாதலினை மேலும் அதிகமாக துரிதப்படுத்தும்
மேலும் சில மில்லி செக்கன்களில் டேங்கரில் ஏற்பட்ட சிறு துவாரம் மற்றும் சிறு வெடிப்பு என்பன பெரிதாக டேங்கரில் இருந்த டீசல் ஓர் வாளியில் இருந்த நீர் ஊற்றுவது போல் அருவியாக வெளியேறி டேங்கரினை சுற்றியுள்ள நிலத்தில் வீழ்ந்து தேங்கும். இவ்வாறு உருவாக்கிய டீசல் ஆவி இருவாகனங்களையும் கணப்பொழுதில் சூழ்ந்து கொள்ளும்.
2. எவ்வாறு தீப்பொறி ஏற்பட்டது?
பின்வரும் காரணங்களினால் தீப்பொறி உண்டாகியிருக்கலாம்
- அதி வேகத்தில் இரு வாகனங்களும் மோதியமையால் இரண்டினதும் உலோக பகுதிகள் உரசுவதினால்
- வாகன மின் சுற்றில் இருந்து
- சூடான வாகனத்தின் இயந்திர பகுதியில் இருந்து
இவ்வாறான நிலையில் சூழ இருந்த டீசல் ஆவி மிக இலகுவாக தீப்பற்றும் தன்மையுடையது. உண்மையில் திரவ டீசல் ஆனது இலகுவில் தீப்பற்றாது ஆனால் இவ்வாறான டீசல் ஆவி மிக இலகுவில் தீப்பற்றும் தன்மை உடையது. மேலும் டீசல் ஆவி வளியுடன் குறித்த விகிதத்தில் கலந்து இருக்கும் பொழுது வெடித்தலுடன் தீப்பற்றும். டீசல் வாகனங்களில் இன்ஜெக்டர் இந்த வேலையினை செய்கின்றது. ஆனால் இங்கு மிக மிக பெரிய அளவில் இச்செயற்பாடு நடந்துள்ளது
3. எவ்வாறு தீ பரவியது?
உண்டாகிய பொறியில் இருந்து தீ உடனடியாகவே வாகனத்தினை சூழ இருந்த டீசல் ஆவிக்கு பரவி ஒரு சில வினாடிகளில் கண்ணிமைக்கும் நேரத்தில் (Flash fire ) இரு வாகனத்தினையும் தீ சூழ்ந்திருக்கும். இதன் பிற்பாடே டேங்கரில் இருந்து கீழே சிந்திய டீசலுக்கு பரவியிருக்கும் (pool fire )சம நேரத்தில் பேருந்தின் இயந்திரம் மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருக்கும்.
தொழில்நுட்ப ரீதியாக, நெருப்புப் பந்து விளைவு என்பது எரியக்கூடிய வாயுக்கள் அல்லது காற்றில் கலந்த திரவ எரிபொருளின் விரைவான எரிப்பு காரணமாக ஏற்படலாம், இது ஒரு கோள வடிவ சுடர் முகப்பை உருவாக்குகிறது, இது விரைவாக வெளிப்புறமாக விரிவடைகிறது. நெருப்புப் பந்தின் தீவிரம், அளவு மற்றும் கால என்பன எரிபொருள் வகை, அளவு மற்றும் சூழல் என்பவற்றில் தங்கியிருக்கும்
4. “Kiln Effect” என்றால் என்ன?
Kiln என்பதன் அர்த்தம், செங்கல், மண் பொருட்கள், செராமிக் போன்றவற்றை மிக அதிக வெப்பத்தில் எரிக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பு (பொதுவாக 800°C – 1,200°C அல்லது அதற்கு மேல்). இலகு தமிழில் பாண் போறணைக்கு எதிரான விளைவு ( பாண் போறணை உட்பக்கத்திலேயே வெப்பம் உண்டாக்கப்படுகின்றது).
அதாவது ஒரு மூடிய கட்டமைப்பு உதாரணமாக பேருந்து, கார், அறை வெளியில் இருந்து வரும் தீவிர வெப்பத்தால் உட்புறம் முழுவதும் மிக அதிக வெப்பத்தில் சூடாக மாறும் நிகழ்வு.
சுருக்கமாக (Kiln Effect)பேருந்து போன்ற மூடிய இடம் திடீரென “சூப்பர்-ஹீட்டட் ஓவன்” (superheated oven) போல மாறும் நிலை. அதாவது வெளியில் எரியும் தீயின் வெப்பம் அதை உலோக சுவர் மற்றும் மேல் தகடுகள் உறிஞ்சி உள்ளே நோக்கி கதிர்வீச்சாக (radiate) அனுப்புவதால் உள்ளே இருக்கும் மனிதர்கள் சில வினாடிகளில் மிக அதிக வெப்பத்தால் செயலிழந்து சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும்
5. பேருந்தில் இருந்த பிரயாணிகளுக்கு என்ன நடந்திருக்கும்?
பேருந்து தீ விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கான அறிவியல் காரணம் ஆரம்ப கட்டத்தில் தீ அல்ல; பேருந்து மிக அதிக வெப்பமுள்ள அடுப்பு போல மாறுவதுதான். அதற்கான காரணிகள்
- கதிர்வீச்சு வெப்ப பரிமாற்றம்: பேருந்தின் இரும்பு உடல் வெளியில் எரியும் எரிபொருளில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி, அதை உள்ளே நோக்கி கதிர்வீச்சாக செலுத்துகிறது. கண்ணாடிகள் வெப்ப அதிர்ச்சி (thermal shock) காரணமாக திடீரென உடைந்து விழும்.
- நச்சு வாயு சூழல்: உள்ளே உள்ள இருக்கைகள், பிளாஸ்டிக், இன்சுலேஷன் போன்றவை எரிவதால், கார்பன் மொனாக்சைடு (CO) மற்றும் ஹைட்ரஜன் சயனைடு (HCN) கொண்ட அடர்த் கரும்புகை உருவாகிறது.
- விளைவுவாக குறுகிய, மூடிய இடத்தில் இவ்வாயுக்கள் ஆக்சிஜனை சில வினாடிகளில் முடித்து விடுகின்றன இதனால் பேருந்தில் பயனித்தவர்களுக்கு ஆரம்பத்தில் மூச்சு திணறல் (suffocation) ஏற்படும்
6. யாத்திரிகர்கள் தப்பி ஓடமுடியாமைக்கும் மரணம் அடைந்தமைக்கும் என்ன காரணம்?
இந்தச் சம்பவத்தில் துயரத்தை மேலும் அதிகரித்த காரணம், விபத்து இரவு 1:30 மணியளவில் நடந்தது; பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்தனர்.
- மனிதர்கள் தப்பி ஓடமுடியாமை (Incapacitation): Flash fire ஏற்பட்டவுடன் வெப்பம் திடீரென அதிகரிப்பதால், அதிகரித்த வெப்ப காற்று காரணமாக தொண்டை கட்டி மூச்சு விடுவது கடினம் (laryngeal spasm ) இதனால் மனிதர்கள் கத்தவோ சுவாசிக்கவோ முடியாத நிலை உண்டாகிறது.
- உயிரிழத்தல் காரணம் – மூச்சுத்திணறல்: தீ உடலில் தொடுவதற்கும் முன், எரியும் பிளாஸ்டிக்கில் இருந்து வரும் ஹைட்ரஜன் சயனைடு காரணமாக சில வினாடிகளில் மயக்கம் ஏற்படும்.
- வெப்ப அதிர்ச்சி: சுற்றியுள்ள வெப்பம் 150°C–200°C கடந்தவுடன் மனித உடல் உடனடியாகத் தளர்ந்து விழும்; எனவே தப்பிக்க முயல்வதும் கூட இயலாத நிலை
இறுதியாக இந்த விபத்து பேருந்து கணநேரத்தில் அணுவாக்கமடைந்த டீசல் எரிபொருளால் (டீசல் ஆவி) மூடப்பட்டு உடனே தீப்பற்றியது. “Fireball” தாக்கத்தின் காரணமாக பயணிகளுக்கு எந்தவித எதிர்வினை நேரமும் கிடைக்கவில்லை. இழந்த 45 உயிர்களும் தீ மெதுவாக பரவியதற்கல்ல; அது உடனடியாக, மிகவும் தீவிரமான வெப்ப வெடிப்பு போல உருவாகி, அனைவரும் தூக்கத்தில் இருக்கும் நேரத்தில் பேருந்தை முழுவதும் சூழ்ந்துகொண்டதால்தான் ஏற்பட்டது.
நன்றி
