ஆபத்தான முடிவு

இலங்கையில் மழை கொட்டி தீர்க்கின்றது. இந்த சூழ்நிலையில் பல வீதிகளின் குறுக்காக வெள்ளம் ஓடுகின்றது சில இடங்களில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள்  பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் பலர் தமது வாகனங்களில் அவற்றினை கடக்க முயன்று பலரின் வாகனங்கள் வெள்ளத்தோடு அடித்து செல்லப்படுகின்மை பார்க்க கூடியதாக உள்ளது. மேலும் சில இடங்களில் பஸ்கள் இவ்வாறு கடக்க முற்பட்டு நடு வெள்ளத்தில் மாட்டி பின்னர் பிரயாணிகளை மீட்பு பணியாளர்கள் மற்றும் உலங்கு வானுர்தி மூலம் மீட்ட  சம்பவங்கள் நடந்துள்ளன.    இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக பாரிய உயிர் மற்றும் பொருளாதார சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பலர் முக்கியமாக வாகனங்களின் சாரதிகள் ஓடும் வெள்ள நீரினால் ஏற்படும் விசையினை தவறாக கணிப்பதன் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு ஓடுகின்ற நீரில் வாகனங்களை செலுத்துதல் ஏன் ஆபத்தான  விளைவாக மாறுகின்றது.

1. ஓடும் நீரினால் அழுத்த (Hydrostatic force) மற்றும் இயங்கு நிலை விசைகள் (kinetic force) பிரயோகிக்கப்படும். பெரும்பாலான சந்தர்ப்பத்தில் எமது மூளை அழுத்த விசையினால் ஏற்படும் விளைவினை மறந்துவிடும். இவ்விரு விசைகளின் சேர்க்கையினால் அதீத விசை உருவாகும். உதாரணமாக வேகமாக ஓடும் ஒரு அடி நீர் கார் போன்ற சிறிய வாகனங்களை தள்ளிவிடும் அவ்வாறே வேகமாக ஓடும் 2 அடிநீர் பெரிய வாகனங்களாக பஸ் போன்றவற்றினை ஆட்டம் காண வைக்கும்.

2. நீரில் வாகனம் மிதக்க தொடங்கியவுடன் ரயருக்கும் நிலத்துக்கும் இடையிலான தொடர்பு அற்று போகும் இதன் காரணமாக இலகுவாக வாகனம் நீரின் ஓட்ட திசையில் அசையும்.

3. நீரின் ஒட்டத்தினுள் கிடங்குகள், அடித்துவரப்படும் மரங்கள், வீதியோரம் முறிந்த மரங்கள், முறிந்த மின் கம்பங்கள் போன்றன இருக்கும். இவற்றில் உங்கள் வாகனம் சிக்கிவிடும். 

4. தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது ஓடும் நீர் சிறிய ஆழத்தில் ஓடுவது மாதிரி இருக்கும் ஆனால் ஓடும் நீரின் நடுப்பகுதியில் மண்ணரிப்பு காரணமாக மிக ஆழமான பகுதிகள் காணப்படலாம்.

5. ஓடும் நீரின் போக்கு அடிக்கடி மாறுபடும் சில நிமிட இடைவெளிகளில் பெருக்கெடுக்கலாம் அல்லது சுழிகள் உருவாகலாம்.

6. வாகனத்தின் எஞ்சினினுள் நீர் சென்று விட்டால் வாகனம் தீடீர் என்று ஓடும் நீரின் நடுவே நின்று விடும் அத்தகைய சூழ் நிலையில் வாகனத்தின் மின்சாரமும் துண்டிக்கப்படும் இவ்வாறான சூழ்நிலையில் கார் போன்ற வாகனங்களின் கதவுகளை திறந்து வெளியேறுவது கடினம். ஒருசில நிமிடங்களில் நீர் முற்றாக வாகனத்தினை நிரம்பிவிடும். மேலும் இவ்வாறு வாகனம் சடுதியாக நிற்கும் பொழுது (water lock) அதனை நாம் கட்டுப்படுத்தல் முடியாது . வாகனம் நீரில் மிதந்து அதன் ஒட்டத்தில் செல்ல ஆரம்பித்து விடும்.

எனவே நாம் இவ்வாறான ஓடும் நீரோட்டங்களை (நிலையான தேங்கிய நீர் அல்ல)  கண்டால்  அதனை வாகனத்தில் கடக்க முயற்சிக்காது வாகனத்தினை வேறு பாதையில் திருப்பி செல்வதே பாதுகாப்பான பயணமாக அமையும்        

முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.