இலங்கையில் புயலுடன் கூடிய மழை மற்றும் வெள்ளப் பெருக்கு என்பன சற்று தணிந்துள்ள நிலையில். வெள்ள நீர் படிப்படியாக வடிந்து வருகின்றது. இந்நிலையில் எதிர் வரும் நாட்களில் மக்கள் தமது வாழ்விடங்களை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு சூழ்நிலையில் வெள்ளப்பெருக்குக்கு நிலவுகின்ற அல்லது அதற்கு பிந்திய சூழ் நிலையில் தொற்று நோய்கள் பரவுகின்ற அபாயம் மிக அதிகமாக இருக்கின்றது. வெள்ள பெருக்கு காரணமாக மலசல குழிகள் நிரம்பி வழிந்து ஓடும் நீருடன் கலந்து இருக்கலாம் மேலும் இவ்வாறான வெள்ள நீர் அன்றாடம் நாம் பயன்படுத்தும் நீர் நிலைகளில் கலந்து அந்த நீர் மாசடைந்திருக்கும் எனவே பின்வரும் முறைகளை கையாள்வதன் மூலம் நாம் இயன்றளவுக்கு எம்மை நாமே பாதுகாத்து கொள்ளலாம்.

1. வெள்ள நீர் கலக்காத கிணறுகளில் இருந்து பெறப்பட்ட நீரினை தாங்கிகளில் சேகரித்து குளோரின் பரிகரிப்பு செய்து பாவிக்கலாம். அல்லது நீர் வழங்கல் சபையின் ஊடாக வழங்கப்படும் நீரினை பாவிக்கலாம்
2. குடிப்பதற்கு குளோரின் மூலம் பரிகரிக்கப்பட்ட கொதித்து ஆறிய நீரினை பாவிப்பதே சிறந்தது. அல்லது போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரினை பாவிக்கலாம்.
3. இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கி இருப்பவர்கள் இவ்வாறு வெவ்வேறு தேவைகளுக்கு என வேறுவேறாக நீரினை பாவிப்பது நன்று.
4. நீரினை குளோரின் மூலம் பரிகரித்தல், தரம் பரிசோதித்தல், மீள் பார்வை செய்தல் போன்றவற்றிக்கு பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் உதவிகள் மற்றும் ஆலோசனைகளை பெற்று கொள்ளவும்.
5. நில நீர் மட்டம் நன்றாக குறைந்து கிணற்றின் அரைவாசியினை விட குறைவாக இருக்கும் பொழுதே கிணற்றினை இறைத்து துப்பரவாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். நீர் நிரம்பிய நிலையில், மண்ணில் நீரின் அளவு கூடுதலாக உள்ள நிலையில் கிணற்றினை இறைத்தால் கிணறு இடிந்து வீழ்ந்து உயிர் ஆபத்துக்களை விளைவிக்கும்.
6. இடைத்தங்கல் முகாம்களில் இருப்பவர்கள் தமது சமையலின் பொழுது பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரின் ஆலோசனை மற்றும் உதவிகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் இருந்து வழங்கப்படும் சமைத்த உணவுகளை இயன்றவரை தவிர்த்து உலர் உணவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
7. கரட், கீரை போன்ற மரக்கறிகளை பச்சையாக அதாவது சமைக்காது உண்பது தவர்க்கப்படல் வேண்டும்.
8. வெள்ளம் காரணமாக மலக்குழிகள் நிறைத்து இருக்கும் இந்நிலையில் மேடான பகுதிகளில் தற்காலிக மலசலகூடங்களை அமைத்து பாவிக்க வேண்டும். குழந்தைகளின் மலைக்கழிவுகள், பம்பஸ் போன்றவற்றினை கட்டாயம் சிறுகுழிகள் வெட்டி புதைக்க வேண்டும்.
9. நிரம்பிய மலக்குழிகளை இறைத்து வெளியேற்றுவதோ அல்லது மலக்குழிகளின் மேல் ஏறி நிற்பதோ ஆபத்தினை விளைவிக்கும். மண்ணில் நீர்பற்று கூடிய நிலையில் மலக்குழி எந்நேரமும் இடிந்து விழலாம். ஒருசில நாட்களில் நீர் மட்டம் குறையும் பொழுது மலக்குழியிலும் நீர் மட்டம் குறைந்து நாம் வழமை போன்று பாவிக்கலாம்.
10. வீடுகளுக்கு திருப்பும் பொழுது வீடுகளில் சேற்று நீர் நிரம்பி வீடு அழுக்கடைந்து இருக்கும் இந்நிலையில் வீட்டினை நன்றாக கழுவிய பின்னர் தரை, சுவர்கள் மற்றும் தளபாடங்களை குளோரின் நீர் அல்லது பினாயில் நீர் கொண்டு துடைத்தல் வேண்டும்.
11. வீட்டின் அயற்பிரதேசங்களில் இறந்து கிடக்கும் கால்நடைகள், வளர்ப்பு பிராணிகளின் உடலங்களை குழி தோண்டி புதைக்க வேண்டும்.
12. டெங்கு நுளம்பு பரவாமல் இருக்க வீட்டின் அயற்பிரதேசங்களில் வெள்ளத்தினால் கொண்டுவரப்பட்டு தேங்கி இருக்கும் கோம்பைகள், பிளாஸ்ட்டிக் பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நீரினை வெளியில் ஊற்றி அவற்றினை தலை கீழாக கவிட்டு வைக்க வேண்டும்.
13. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு காச்சல் ஏற்பட்டால் அது சாதாரண சளிக் காச்சல் என்று சுய வைத்தியம் செய்யக்கூடாது. ஏனெனில் அது ஆபத்தான எலிக்காச்சல் அல்லது டெங்கு காச்சல் ஆக இருக்கலாம். வைத்திய ஆலோசனைகளை நிச்சயம் பெற வேண்டும்.
14. சிறுவர்களுக்கு வயிற்றோட்டம் ஏற்படும் பொழுது அவர்களுக்கு ஜீவனி போன்றவற்றினை உடனடியாக கொடுக்க வேண்டும் அத்துடன் வைத்திய ஆலோசனைகளை நிச்சயம் பெற வேண்டும்.
15. சமையலிற்கு முன்னரும், உணவு உண்ண முன்னரும் கைகளை நன்றாக சவர்க்காரம் கொண்டு நீரில் கழுவுதல் கட்டாயம் அல்லது தொற்றுநீக்கி (Hand sanitizer) பாவித்து கழுவுதல் கட்டாயம்.
16. இடைத்தங்கல் முகாம்களில் சமையலின் பொழுது இறுக்கமான சுகாதாரத்தினை பேனல் வேண்டும். பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி போன்றோரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ளலாம்.
17. நோய் தோற்ற கூடிய ஆபத்தான பிரதேசங்களில் வசிப்பவர்கள் வைத்தியரின் ஆலோசனையுடன் எலிக்காச்சல் போன்ற நோய்கள் தமக்கு உண்டாகாத வண்ணம் பாதுகாப்பு மருந்துகளை (chemoprophylaxis) உட்கொள்ளலாம்

இவ்வாறான சூழ்நிலையில் சுகாதாரம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி போன்றோரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெறுதல் நன்று. இறுக்கமான தனிநபர் மற்றும் சமூக சுகாதார நெறிமுறைகளை கையாளுவதன் மூலம் நாம் உயிரிழப்புக்களை மற்றும் வைத்திய சாலை அனுமதி, சிகிச்சை போன்றவற்றினை குறைத்து கொள்ளலாம்
நன்றி
