இலங்கையின் பல பகுதிகளில் பெய்த கடுமையான மழையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவுகள் இடம்பெறுகின்றன குறிப்பாக மலையக பகுதிகளில் இவ்வாறு இடம் பெறுகின்றன. மலைப்பகுதிகளில் இவ்வாறன மண்சரிவுகள் இடம் பெறுவதற்கு பல்வேறு மனித மற்றும் இயற்கை காரணங்கள் எதுவாக அமைகின்றன. இவ்வாறான மண் சரிவுகளின் பொழுது சிக்கும் மனிதர்களுக்கு எவ்வாறு மரணம் சம்பவிக்கின்றது என்பது குறித்து இப்பதிவு விளக்குகின்றது
1. மண் சரிவின் பொழுது கட்டிட இடிபாடுகள், மரங்கள் போன்றன மனிதரின் மேல் நேரடியாக வீழ்வதினால் காயங்கள் ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.
2. மண் சரிவின் பொழுது கணிசமான மனிதர்கள் உயிருடன் கட்டிட இடிபாடுகளினுள் மாட்டி விடுவார்கள். இதன் காரணமாகவே இறுதிமட்டும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெறும். இவ்வாறு சிக்கியவர்களின் நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளின் மீது இடிபாடுகளினால் கடுமையான அழுத்த விசை பிரயோகிக்கப்படும். இதன் காரணமாக அவர்களின் நெஞ்சு மற்றும் வயிற்கு பகுதிகளின் சுவாச அசைவு தடைப்படும் இந்த நிலைமை சட்ட மருத்துவத்தில் traumatic asphyxia என்றழைக்கப்படும். இதன் காரணமாக அவர்கள் மரணத்தினை தழுவுவார்கள்.

3. மேலும் மண் சரிவின் பொழுது நீர், சேறு என்பன அவர்களின் சுவாச தொகுதியினுள் செல்வதினாலும் இறப்பு ஏற்படுகின்றது.
4. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் மாரடைப்பு போன்ற இயற்கையான நோய்நிலைமைகள், மின்சார தாக்குதல் போன்றவற்றினாலும் மரணத்தினை தழுவுகின்றனர்.
இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் நிகழும் பொழுது அதிகளவிலான மக்கள் இறப்பார்கள் இந்நிலையில் இறந்த உடலங்களுக்கு முற்று முழுதான உடற் கூராய்வு பரிசோதனை செய்வது வழக்கம் இல்லை. எனினும் தற்போதுள்ள சட்ட நடைமுறைகளின் பிரகாரம் வெளிப்புற பரிசோதனைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரிகளினால் மரணத்திற்கான காரணம் கொடுக்கப்பட்டு உடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படுகின்றது. ஆனால் செயற்கையாக மனிதனினால் உண்டாக்கப்பட்ட அனர்த்தங்கள் ஆன குண்டு வெடிப்பு போன்றவற்றின் பொழுது முற்று முழுதான உடற் கூராய்வு செய்யப்படுவது வழமை. மேற்குறித்தவையே இலங்கையின் சட்ட திட்டங்கள்.
அனர்த்தங்களின் பொழுது உடற்கூராய்வு பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கிய நோக்கம் அனர்த்தங்களின் பொழுது சிக்கி சிதலமாகிய உடலங்களை சரிவர அடையாளம் காண்பதற்கே ஆகும். இவ்வாறு அடையாளம் காண்பதன் மூலமே ஒருவரின் உடலத்தினை சரியான உறவினர்களிடம் கையளிக்க முடியும். அதன் பின்னர் பின்னுருத்தாளிகள் இறந்தவரின் மரண சான்றிதழை பெறுவதன் மூலம் இறந்தவரின் ஓய்வூதியம், காப்புறுதி, சொத்து என்பவற்றை சட்ட ரீதியாக பெற தகுதி பெறுவார்கள்.
நன்றி
